QSF06 பெண்களின் இத்தாவுக்கு அறிவியல் காரணம் உள்ளதா?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு




QSF06 பெண்களின் இத்தாவுக்கு அறிவியல் காரணம் உள்ளதா?


2:228   وَالْمُطَلَّقٰتُ يَتَرَ بَّصْنَ بِاَنْفُسِهِنَّ ثَلٰثَةَ قُرُوْٓءٍ ‌ؕ وَلَا يَحِلُّ لَهُنَّ اَنْ يَّكْتُمْنَ مَا خَلَقَ اللّٰهُ فِىْٓ اَرْحَامِهِنَّ اِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِ‌ؕ وَبُعُوْلَتُهُنَّ اَحَقُّ بِرَدِّهِنَّ فِىْ ذٰ لِكَ اِنْ اَرَادُوْٓا اِصْلَاحًا ‌ؕ وَلَهُنَّ مِثْلُ الَّذِىْ عَلَيْهِنَّ بِالْمَعْرُوْفِ‌وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ ‌ ؕ وَاللّٰهُ عَزِيْزٌ حَكِيْمٌ 


2:228. விவாகரத்துச்66 செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்.69 அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் இதற்குள் (இந்தக் காலகட்டத்துக்குள்) அவர்களின் கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள். பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.


2:231   وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَاَمْسِكُوْهُنَّ بِمَعْرُوْفٍ اَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوْفٍ‌وَلَا تُمْسِكُوْهُنَّ ضِرَارًا لِّتَعْتَدُوْا‌ ۚ وَمَنْ يَّفْعَلْ ذٰ لِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ ‌ؕ وَلَا تَتَّخِذُوْٓا اٰيٰتِ اللّٰهِ هُزُوًا‌وَّاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ وَمَآ اَنْزَلَ عَلَيْكُمْ مِّنَ الْكِتٰبِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهٖ‌ؕ وَاتَّقُوا اللّٰهَ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ بِكُلِّ شَىْءٍ عَلِيْمٌ 


2:231. பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்66 அவர்கள் தமக்குரிய காலக்கெடுவை69 நிறைவு செய்வதற்குள் நல்ல முறையில் அவர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் விட்டு விடுங்கள்! அவர்களைத் துன்புறுத்தி வரம்பு மீறுவதற்காகச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! இவ்வாறு செய்பவர் தமக்கே அநீதி இழைத்துக் கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களைக் கேலிக்குரியதாக்கி விடாதீர்கள்! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதத்தையும் ஞானத்தையும்67 வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்" என்பதை அறிந்து கொள்ளுங்கள்!


2:232   وَاِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَبَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوْهُنَّ اَنْ يَّنْكِحْنَ اَزْوَاجَهُنَّ اِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوْفِ‌ؕ ذٰ لِكَ يُوْعَظُ بِهٖ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللّٰهِ وَالْيَوْمِ الْاٰخِرِؕ ذٰ لِكُمْ اَزْکٰى لَـكُمْ وَاَطْهَرُؕ‌ وَاللّٰهُ يَعْلَمُ وَاَنْـتُمْ لَا تَعْلَمُوْنَ‏ 


2:232. பெண்களை விவாகரத்துச் செய்த66 பின் அவர்கள் தமது காலக்கெடுவை69 நிறைவு செய்து விட்டால் அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும்1 நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத் தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.


2:234   وَالَّذِيْنَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُوْنَ اَزْوَاجًا يَّتَرَبَّصْنَ بِاَنْفُسِهِنَّ اَرْبَعَةَ اَشْهُرٍ وَّعَشْرًا ‌‌ۚ فَاِذَا بَلَغْنَ اَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا فَعَلْنَ فِىْٓ اَنْفُسِهِنَّ بِالْمَعْرُوْفِؕ وَاللّٰهُ بِمَا تَعْمَلُوْنَ خَبِيْرٌ‏ 


2:234. உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும்.69 அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.403 நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.


2:235   وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيْمَا عَرَّضْتُمْ بِهٖ مِنْ خِطْبَةِ النِّسَآءِ اَوْ اَکْنَنْتُمْ فِىْٓ اَنْفُسِكُمْ‌ؕ عَلِمَ اللّٰهُ اَنَّكُمْ سَتَذْكُرُوْنَهُنَّ وَلٰـكِنْ لَّا تُوَاعِدُوْهُنَّ سِرًّا اِلَّاۤ اَنْ تَقُوْلُوْا قَوْلًا مَّعْرُوْفًا ‌ؕ وَلَا تَعْزِمُوْا عُقْدَةَ النِّکَاحِ حَتّٰى يَبْلُغَ الْكِتٰبُ اَجَلَهٗ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ يَعْلَمُ مَا فِىْٓ اَنْفُسِكُمْ فَاحْذَرُوْهُ ‌ؕ وَاعْلَمُوْٓا اَنَّ اللّٰهَ غَفُوْرٌ حَلِيْمٌ 


2:235. (காத்திருக்கும் காலகட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை.404 அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம்69 முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!


33:49   يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نَكَحْتُمُ الْمُؤْمِنٰتِ ثُمَّ طَلَّقْتُمُوْهُنَّ مِنْ قَبْلِ اَنْ تَمَسُّوْهُنَّ فَمَا لَـكُمْ عَلَيْهِنَّ مِنْ عِدَّةٍ تَعْتَدُّوْنَهَا ۚ فَمَتِّعُوْهُنَّ وَسَرِّحُوْهُنَّ سَرَاحًا جَمِيْلًا‏ 


33:49. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் நம்பிக்கை கொண்ட பெண்களை மணந்து அவர்களைத் தீண்டுவதற்கு முன் விவாகரத்துச் செய்து66 விட்டால் உங்களுக்காக அவர்கள் அனுசரிக்கும் இத்தா ஏதுமில்லை.69 அவர்களுக்கு வாழ்க்கை வசதி அளியுங்கள்.74 அழகிய முறையில் அவர்களை விட்டு விடுங்கள்!


65:1   يٰۤاَيُّهَا النَّبِىُّ اِذَا طَلَّقْتُمُ النِّسَآءَ فَطَلِّقُوْهُنَّ لِعِدَّتِهِنَّ وَاَحْصُوا الْعِدَّةَ ‌ ۚ وَاتَّقُوا اللّٰهَ رَبَّكُمْ‌ ۚ لَا تُخْرِجُوْهُنَّ مِنْۢ بُيُوْتِهِنَّ وَلَا يَخْرُجْنَ اِلَّاۤ اَنْ يَّاْتِيْنَ بِفَاحِشَةٍ مُّبَيِّنَةٍ‌ ؕ وَتِلْكَ حُدُوْدُ اللّٰهِ‌ ؕ وَمَنْ يَّتَعَدَّ حُدُوْدَ اللّٰهِ فَقَدْ ظَلَمَ نَفْسَهٗ‌ ؕ لَا تَدْرِىْ لَعَلَّ اللّٰهَ يُحْدِثُ بَعْدَ ذٰ لِكَ اَمْرًا‏ 


65:1. நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால்66 அவர்கள் இத்தாவைக்69 கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கிழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும்424 என்பதை நீர் அறிய மாட்டீர்.


தஃப்ஸீர் விளக்கக்குறிப்பு:- 69. பெண்களுக்கு இத்தா ஏன்?


//கணவனை இழந்த பெண்கள் உடனே மறுமணம் செய்யக் கூடாது என்றும், எவ்வளவு நாட்களுக்குப் பின்னர் அவர்கள் மறுமணம் செய்யலாம் என்றும் இவ்வசனங்கள் (2:228, 2:231, 2:232, 2:234, 2:235, 33:49,  65:1) கூறுகின்றன. இது இத்தா காலம் என்று சொல்லப்படுகிறது.


2:234, 2:235 வசனங்களில் கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் முடியும் வரை மறுமணம் செய்யக் கூடாது என்று கூறப்படுகின்றது.


கர்ப்பிணிகள் பிரசவிக்கும் வரை இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், மாதவிடாய் அற்றுப் போன வயதானவர்கள் மூன்று மாதங்கள் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் 65:4வசனம் கூறுகின்றது.


இவ்வசனத்தில் இரண்டு வகையான இத்தாக்கள் சொல்லப்படுகின்றன. மாதவிடாய் அற்றுப் போனவர்களின் இத்தா மூன்று மாதங்கள் என்று சொல்லப்படுகின்றன. இதில் மாதவிடாயைக் கணக்கிடாமல் நாட்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடப்படுகின்றது. இந்த வகை இத்தா தலாக் விடப்பட்ட மாதவிடாய் அற்றுப் போன பெண்ணுக்கு மட்டும் உரியதாகும். கணவனை இழந்த பெண்களுக்கு இது பொருந்தாது.


ஏனெனில் அவர்களின் இத்தா நான்கு மாதமும் பத்து நாட்களும் என்று திருக்குர்ஆனில் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. மாதவிடாய் அற்றுப்போனவர்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்படும் பெண்களாக இருந்தாலும் நான்கு மாதம் பத்து நாட்கள் கணக்கிட முடியும்.


இவ்வசனத்தில் கூறப்படும் மற்றொரு இத்தா நாட்களின் எண்ணிக்கை அடிப்படையிலானது அல்ல, ஆனால் பிரசவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கணவன் இறக்கும் போது அல்லது தலாக் விடப்படும் போது மனைவி ஒரு மாத கர்ப்பம் என்றால் அவர்கள் இன்னும் எட்டு மாதம் அளவுக்குப் பின்னர் தான் பிரசவிப்பார்கள். ஐந்து மாத கர்ப்பம் என்றால் மேலும் நான்கு மாதம் கழித்து பிரசவிப்பார்கள். ஒன்பதாம் மாதமாக இருந்தால் சில நாட்களில் பிரசவித்து விடுவார்கள். எனவே இந்த வகை இத்தா நாட்களின் எண்ணிக்கையைப் பொருத்தது அல்ல, கருவின் காலத்தைப் பொருத்ததாகும்.


எனவே இவ்வசனத்தில் கூறப்பட்ட இந்த வகை இத்தால் தலாக் விடப்பப்பட்ட பெண்ணுக்கு மட்டுமின்றி கணவனை இழந்த பெண்களுக்கும் உரியதாகும்.


இந்தச் சட்டம் பெண்களுக்கு கேடு செய்வதற்கான சட்டம் அல்ல. அவர்களுக்கு மிகப்பெரும் நன்மைகளைப் பெற்றுத் தரும் சட்டமாகும்.


கணவன் மரணித்தபோது அவனது கருவை மனைவி சுமந்திருக்கலாம்; அந்த நிலையிலேயே அவள் இன்னொருவனை மணந்து கொண்டால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிப்படையும். இரண்டாம் கணவன் அக்குழந்தை தனது குழந்தை இல்லை எனக் கூறுவான்.


முதல் கணவனின் குடும்பத்தாரும் அது தமது குடும்பத்துக் குழந்தை இல்லை எனக் கூறி விடக்கூடும். தந்தை யார் என்பது தெரியாததால் மனரீதியான பாதிப்பு அக்குழந்தைக்கு ஏற்படும். தகப்பனிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துரிமை கிடைக்காமல் போய் விடும்.


“இன்னொருவரின் குழந்தையைச் சுமந்து கொண்டு என்னை ஏமாற்றி விட்டாள்” என்று இரண்டாம் கணவன் நினைத்தால் அப்பெண்ணின் எதிர்காலமும் கேள்விக் குறியாகி விடும்.


“கருவில் குழந்தை இருப்பதை அறிய ஒரு மாதம் போதும்? அந்த மாதத்தில் மாதவிலக்கு ஏற்பட்டால் குழந்தை இல்லை என்பது தெரிந்து விடுமே? நான்கு மாதம் பத்து நாட்கள் அதிகமல்லவா?” என்று சிலர் நினைக்கலாம்.


இது நியாயமான கேள்வி தான். ஆனால் நடைமுறையில் சில சிக்கல்களைத் தவிர்க்கவே இஸ்லாம் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் காத்திருக்கச் சொல்கிறது.


ஒரு பெண் தான் கருவுற்றிருப்பதை முதல் மாதமே அறிந்து கொண்டாலும் அதை அவள் மறைக்க முயற்சிக்கலாம். தான் கருவுறவில்லை என்று அவள் கூறி இன்னொருவனைத் திருமணம் செய்யலாம். நான்கு மாதம் பத்து நாட்கள் கழிந்த பின் இவ்வாறு கூற முடியாது. கர்ப்பமாக இருப்பது வெளிப்படையாகவே மற்றவர்களுக்கும் தெரிந்து விடும்.


இரண்டாம் திருமணம் முடித்து ஆறேழு மாதங்களில் அவள் ஒரு குழந்தையை பெற்றெடுத்தால் அது முந்தைய கணவனுடையதாக இருக்குமோ என்று இரண்டாம் கணவன் சந்தேகப்படுவான். நான்கு மாதம் பத்து நாட்கள் கடந்த பின்பு இரண்டாம் திருமணம் நடந்திருந்தால் அவன் இப்படிக் கூற முடியாது. வயிற்றில் குழந்தை இருந்தால் நான்கு மாதத்தில் வெளிப்படையாகத் தெரிந்திருக்குமே என்று அவன் உண்மையை விளங்கிக் கொள்வான்.


இத்தகைய காரணங்களால், பெண்களுக்கு நன்மை செய்வதற்காக, அவர்களது எதிர்காலம் மகிழ்ச்சியாக அமைவதற்காக, அவர்களது குழந்தையின் எதிர்காலப் பாதுகாப்புக்காக இறைவன் இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளான்.


கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் மறுமணம் செய்யாமல் இத்தாவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இன்று அறிவியல் மூலமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


ராபர்ட் கில்ஹாம் என்ற யூத விஞ்ஞானி இது குறித்து ஓர் ஆய்வை மேற்கொண்டார்.


தம்பதியர் உடலுறவு கொண்டால், ஆண், தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச் செல்கின்றான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார். அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார். அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகைகள் மட்டுமே பதிவாகியிருந்தன.


அதே நேரத்தில், அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.


ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார்.


அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.


கணவன் இறந்த ஓரிரு மாதங்களில் ஒரு பெண் திருமணம் செய்தால் இரண்டாம் கணவன் மூலம் பெற்றெடுக்கும் அவளது குழந்தை இரண்டாம் கணவனின் டி.என்.ஏவுடன் ஒத்துப் போகாமல் இருக்க சாத்தியமுண்டு. முதல் கணவனின் டி.என்.ஏ, யுடன் ஒத்துப் போகும் வாய்ப்பும் உள்ளது.


இந்தக் கண்டுபிடிப்பும் இத்தாவின் அவசியத்தை உணர்த்துகிறது.


நான்கு மாதங்களும், பத்து நாட்களும் கழித்து அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது.


திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தை என்று அறிந்து ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றதற்கு இத்தா எனும் சட்டம் காரணமாக அமைந்தது.


இத்தா எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த விதிமுறை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


சில முஸ்லிம்கள் நான்கு மாதம், பத்து நாட்கள் கணவனை இழந்த பெண்களை இத்தா என்ற பெயரில் இருட்டறையில் அடைத்துக் கொடுமைப்படுத்துகின்றனர். இது குற்றமாகும். மறுமணம் செய்யாமல் இருப்பதும், திருமணத்தைத் தூண்டும் அலங்காரங்களைத் தவிர்ப்பதும் தான் இத்தா என்பதை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.


இது தவிர இன்னொரு வகை இத்தாவும் உண்டு. மனைவியை கணவன் விவாகரத்துச் செய்தால் அவர்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலமும் இத்தா எனப்படும். அதாவது விவாகரத்து முடிந்த உடன் பெண்கள் மறுமணம் செய்யாமல் மூன்று மாதவிடாய்க் காலம் காத்திருக்க வேண்டும். இந்த காலகட்டத்துக்குள் கணவன் அவளுடன் சேர்ந்து கொள்ளலாம். இந்த இத்தாவை 2:228, 2:231, 2:232, 33:49, 65:1 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.


இந்த இத்தாவுக்கு தனியாக எந்தக் கட்டுப்பாடும் மார்க்கத்தில் சொல்லப்படவில்லை. அந்தக் காலம் முடிவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது என்பது மட்டுமே இந்த இத்தாவின் ஒரே விதியாகும்.


இத்தா குறித்த மேலதிக விபரங்களை அறிந்திட 360, 404, 424 ஆகிய குறிப்புகளைப் பார்க்கவும்.


விவாகரத்து தொடர்பாக மேலும் அறிய 66,  70,  74,  386,  402,  424 ஆகிய குறிப்புகளைக் காண்க!//


நமது மறுப்பு:-

இது போன்று ஒரு பொய்யை உலகமே நம்பி, பரப்பிய வரலாறு இருக்குமா என்று தெரியவில்லை. ராபர்ட் கில்ஹாம் என்றொரு பிறக்காத "யூத விஞ்ஞானி இஸ்லாத்தை ஏற்றார்" எனும் கட்டுக்கதை 2012 ஆகஸ்ட் -21ம் நாளில் nablustv.net என்றொரு ஃபலஸ்தீன இணையத்தளத்தில் உருவாகிறது. உடனே வேகமாக எகிப்திய தளங்களுக்கும் இந்தோனேசிய தளங்களுக்கும் பரவுகிறது.

இதன் உண்மைத்தன்மையை மக்கள் உடனே ஆராய்கிறார்கள். இந்த காலத்தில் ஓர் ஆராய்ச்சி என்றால் அதன் முழு ரிப்போர்ட்டும் இன்டர்நெட்டில் இருக்கும். அதேபோல பெரிய பல்கலை கழகங்கள் பெரிய ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் பற்றிய தகவலும் இன்டர்நெட்டில் நிச்சயமாக இருக்கும். இப்படி ஓர் ஆள் பற்றியோ ஆய்வு பற்றியோ எந்த தகவலும் கிடைக்கவில்லை. உடனடியாக இந்த செய்திக்கு அரபு மொழியிலும் இந்தோனேசிய மொழியிலும் மறுப்புகள் வருகின்றன. ❝ஏற்கனவே 90 நாட்கள் இத்தா எங்கள் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதை காப்பியடித்துதான் குர்ஆனே இத்தா சட்டத்தைப் பேசுகிறது. இந்நிலையில் யூதர் ஒருத்தர் இத்தா சட்டத்திற்காக இஸ்லாத்தை ஏற்றார் என்று சொல்வது எத்தகைய வேடிக்கை❞ என்று யூதர்கள் எள்ளி நகையாடினர். உலகமே சிரித்தது. செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் பல உடனே இந்த செய்தியை அழித்தன. வருத்தம் தெரிவித்தன. இந்த கட்டுக்கதை வெளியான சில நாட்களிலேயே இதற்கான மறுப்பும் வெளிவந்துவிட்டது என்பதை கவனத்தில் கொள்க.


தஃப்ஸீர் சிலாகித்துக் கூறும் ராபர்ட் கில்ஹாம் என்றொரு மனிதரே உலகில் வாழவில்லை. அப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்றோ அவர் ஐன்ஸ்டீன் பல்கலைகழகத்தில் பணி புரிந்தார் என்பதற்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை. இதனை ஐன்ஸ்டீன் பல்கலை கழக இணயதளத்தை அணுகி அறிந்துகொள்ள இயலும். இப்படி ஓர் ஆராய்ச்சி நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. உடல்கூறியல் ஆய்வாளர்களை விசாரிக்கும்போது இவ்வாறான உறுப்புகளின் ரேகை பதிதல் என்றோ மரபியல் ரேகைப் பதிதல் என்றோ எதுவும் இல்லை எனவும், இது சுத்த முட்டாள்த்தனம் என்றும் கூறுகிறார்கள்.


ஆப்ரிக்க முஸ்லிம் பெண்கள் வாழ்ந்த பகுதியில் இவர் ஆய்வை மேற்கொள்ள முஸ்லிம்கள் எவ்வாறு சம்மதித்தனர். இந்த ஆய்வே பெண்களின் பிறப்புறுப்பில் செய்யப்படுவதாக அக்கட்டுக்கதை கூறுகிறது. ஒரு பகுதியில் உள்ள பெண்களில் பெரும்பாலானோர் இப்படி ஒரு சோதனையை செய்வதற்குச் சம்மதிப்பார்களா?


அடுத்ததாக அமெரிக்க பெண்கள் வாழும் பகுதியிலும் ஆய்வை மேற்கொண்டார் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இந்த ஆய்வு செய்யப்படும் உறுப்பை வைத்து எந்தப் பெண்ணும் ஆய்விற்கான காரணத்தை கேட்காமல் சம்மதிக்க மாட்டார். இதுதான் காரணம் என்று தெரிந்தால் ஏற்கனவே நடத்தைக் கெட்ட அந்தப் பெண்கள் இதற்குச் சம்மதிப்பார்களா?


இந்த ஆய்வின்படி 4மாதம் 10நாட்கள் இத்தா இருக்கவேண்டிய பெண் முதல் ஒரு மாத பத்து நாட்கள் தைரியமாக பல ஆண்களுடன் விபச்சாரம் செய்யலாமே. ரேகை அழிவதற்கு 3 மாதம் கிடைக்குமே.


ஆணுறையுடன் விபச்சாரம் புரியும் பெண் இந்த ஆய்வில் இருந்து தப்பித்து விடுவாளே.


"ராபட் கில்ஹாம் என்கிற போலியான யூத கதாபாத்திரம் இந்த 3 மாத ரேகை விஷயத்தை கண்டுபிடித்து அது ஏற்கனவே குர்ஆனில் இருப்பதை அறிந்து அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்” எனும் தகவல்தான் இதில் உச்சகட்ட வேடிக்கை. யூத மதத்திலும் பெண்களுக்கு இத்தா எனும் காத்திருப்பு காலமாக 90 நாட்கள் கூறப்பட்டுள்ளது. இத்தா சட்டம்தான் அவரை ஆச்சரியப்பட வைத்தது என்றால் அந்த சட்டம் ஏற்கனவே அவருடைய மதத்திலேயே இருக்கிறது. ஆகவே அந்த ஆராய்ச்சிக்குப்பிறகு அவர் யூத மதத்தையே உறுதியாக நம்பி இருப்பார். இத்தாவுக்காக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள தேவையே இல்லை.


இப்படி லாஜிக்கே இல்லாமல் இக்கதைகள் செல்கின்றன.



பார்க்க:

https://www.nablustv.net/internal.asp?page=details&newsID=77236&cat=16


https://arabic.rt.com/news/593008-عالم_يهودي_يعتنق_الإسلام_بعد_بحثه_في_علم_الجينات_والعلاقات_الاجتماعية/


கட்டுக்கதைகளைப் பரப்புவதில் வல்லவர்களான இந்தோனேசியர்கள் இக்கட்டுக்கதைகளை இந்தோனிசிய தளங்களில் பரப்பினர்


https://translate.google.com/translate?sl=auto&tl=en&js=y&prev=_t&hl=en&ie=UTF-8&u=http%3A%2F%2Fwww.w-islam.com%2F2012%2F09%2F72%2Fgara-gara-iddah-pemimpin-yahudi-masuk-islam%2F&edit-text=&act=url 


இக்கதையை உண்மை என்று நம்பி இந்தோனேசிய செய்தித்தாளான ரிபப்ளிகா இதை வெளியிட்டுவிட்டு பின்னர் நீக்கிவிட்டார்கள். https://web.archive.org/web/20120902174044/http://www.republika.co.id:80/berita/dunia-islam/mualaf/12/08/31/m9lz2z-garagara-iddah-pemimpin-yahudi-masuk-islam


ஆல்பர்ட் ஐன்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ராபர்ட் கில்ஹம் பணிபுரிவதாக அக்கட்டுக்கதை சொல்கிறது. ஆனால் அந்த பல்கலை கழகத்தில் அந்த பெயரில் யாரும் இல்லை

https://www.einstein.yu.edu/search/?q=robert&searchType=faculty&searchButton.x=0&searchButton.y=0 


நாம் முதலில் கொடுத்துள்ள அரபு இணையதள லிங்கில் இருக்கும் செய்தியை அப்படியே மொழிபெயர்த்தாற்போல் உள்ளது தஃப்சீரின் இவ்விளக்கக் குறிப்பு.