QSF40. நிலநடுக்கத்தை கண்டுபிடிக்குமா எறும்புகள்?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்


ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்


QSF ஆய்வுக்குழு





QSF40 எறும்படிச்சான் காப்பி!!

தஃப்ஸீர்: 470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு

வ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும், அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

எறும்புகளுக்கு மனிதர்களை இனம் காணும் அறிவும், தனக்கு வரக்கூடிய ஆபத்துகளை அறிந்து கொள்ளும் அறிவும் இருக்கிறதா? அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? ஸுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல் இப்போதும் எறும்புகள் தப்பிப்பதில்லையே என்று சிலருக்குச் சந்தேகம் எழலாம்.

அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன.

ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும், அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன.

பெரிய படைகள் தமக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப் படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கண்டுபிடிப்பு இதுதான்:

நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக, பிரத்யேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கின்றன. ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலை ஏற்பட்டதும் திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும்.

ஒரு படை வருவதை பொதுவாக அறிந்து கொள்வது சரிதான். ஸுலைமான் நபியையும், அவரது படைகளையும் எறும்புகள் எப்படி அறிய முடியும்? என்ற சந்தேகம் வரலாம்.

எறும்புகளால் மனிதர்களை அவர்களது பெயர்களுடன் அறிந்து கொள்ள முடியாது. வேறு எந்த உயிரினத்தினாலும் இதை அறிந்து கொள்ள இயலாது.

ஆனால் ஸுலைமான் நபியவர்களுக்கு மாபெரும் ஆட்சியை அல்லாஹ் வழங்கினான். ஷைத்தான்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். பறவைகள் மற்றும் ஜீவராசிகளின் மொழிகள் அவருக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்தன என 27:16 வசனம் கூறுகின்றது.

ஹுத் ஹுத் பறவையுடன் ஸுலைமான் நபி அதன் மொழியில் பேசியதாக 27:20 வசனம் கூறுகிறது.

அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த ஜீவராசிகளுடன் ஸுலைமான் நபி அவர்கள் அந்த ஜீவராசிகளின் மொழியில் பேசுவார். அப்படி பேசியதன் அடிப்படையில் ஸுலைமான் நபியை அந்த எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பு இல்லை.

பெரும் படையுடன் ஒரு கூட்டம் வருவதை எறும்புகள் உணர்ந்தவுடன் இந்தப் பகுதியில் இப்படி ஒரு படை வருவதாக இருந்தால் அது ஸுலைமான் நபியின் படையாகத்தான் இருக்க முடியும் என்று எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பில்லை.

நமது மறுப்பு:-

இந்த தஃப்ஸீர் தினமலர் பத்திரிக்கையிலிருந்து ஈயடிச்சான் எறும்படிச்சான் காப்பியடிக்கப்பட்டதாகும். ஒரிஜினல் ஆய்வறிக்கையை ஆசிரியர் கண்ணால் கூட காணவில்லை.

தஃப்ஸீர் காப்பியடிக்கப்பட்ட இடம்:  https://www.dinamalar.com/news_detail.asp?id=691777

//ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறிவிடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பிவிடுகின்றன.//

இப்படி அந்த ஆய்வில் இல்லவே இல்லை. ஒரிஜினல் ஆய்வு > http://bit.ly/பூகம்பஎறும்பு

Early results show that ants have a well-identifiable standard daily routine. Correlation with local seismic events suggests changes in the ants’ behavior hours before the earthquake: the nocturnal rest phase and daily activity are suppressed, and standard daily routine does not resume until the next day.

இதுதான் அவர்கள் சொல்வதாகும். இதில் புற்றிலிருந்து வெளியேறியதாக எந்த வார்த்தையும் இல்லை. நிலநடுக்கம் ஏற்படும் முன்னர் எறும்புகளின் தினசரி செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படுவதாகவும் நிலநடுக்கம் முடிந்து மறுநாள் வரையில் அவை பழைய நிலைக்கு திரும்பவில்லை என்றும்தான் இந்த ஆய்வு சொல்கிறது. //ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன// என்பதெல்லாம் தினமலரின் கற்பனை.

நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னால் அங்கிருந்து வெளியேறும் வாயுக்களால் எறும்புகளின் தினசரி வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதாக ஆய்வு சொல்கிறதே தவிர அதிர்வுகளால் எறும்புகள் வெளியேறியதாக கூறுவதற்கும் அதனை சுலைமான் நபியின் குதிரைப் படையின் அதிர்வுகளுடன் ஒப்பிடுவதற்கும் முகாந்திரமே இல்லை. மேலும் குதிரைப் படைகள் எந்த நில அதிர்வுகளையும் உருவாக்குவதில்லை.

These studies are not provided for earthquake prediction, but are an important step towards the understanding of geobiological processes.

இது ஆய்வறிக்கையின் இறுதி வரி ஆகும். நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டுபிடிப்பதற்காக இந்த ஆய்வு சமர்ப்பிக்கப்படவில்லை என்று ஆய்வாளர்களே சொல்கிறார்கள். ஆய்வாளர்களை ஆர்வக்கோளாறுகள் மிஞ்சி விடுகிறார்கள்.

ஒரு வேளை அந்த ஆய்வு வெற்றிகரமானதாக இருந்திருந்தால் redwood எறும்புகளைக் கொண்டு ஒருநாள் முன்னதாக நிலநடுக்கத்தை அறிந்து பெரிய பெரிய நிலநடுக்கத்தில் இருந்து பெரிய உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாமே. 2013ல் வெளிவந்த இந்த ஆய்வுக்கு பிறகு எந்த நிலநடுக்கத்தாலும் பாதிப்பு ஏற்படாமல் தப்பித்திருக்கலாமே.

அவ்வாறல்ல, இதையும் வாசிக்கவும். https://www.usgs.gov/faqs/can-animals-predict-earthquakes?qt-news_science_products=0#qt-news_science_products உலகிலேயே பெரிய அளவில் நிலநடுக்கத்தை ஆய்வு செய்யும் ஒரே நிறுவனம் அமெரிக்க அரசின் USGS நிறுவனத்தின் இணையதளம் தான் இது. நிலநடுக்கத்தை எந்த விலங்கினாலும் கருவியாலும் கண்டுபிடிக்க இயலாது.