இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
QSF05 பூமி உருண்டை என்று 55:17ம் வசனம் சொல்கிறதா?
தஃப்ஸீர் விளக்கக்குறிப்பு:- 335. பூமி உருண்டையானது
37:5 رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَا وَرَبُّ الْمَشَارِقِ ؕ
37:5. (அவன்) வானங்கள்,507 பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.335
70:40 فَلَاۤ اُقْسِمُ بِرَبِّ الْمَشٰرِقِ وَالْمَغٰرِبِ اِنَّا لَقٰدِرُوْنَۙ
70:41 عَلٰٓى اَنْ نُّبَدِّلَ خَيْرًا مِّنْهُمْۙ وَمَا نَحْنُ بِمَسْبُوْقِيْنَ
70:40, 41. கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன்.335 அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.26
55:17 رَبُّ الْمَشْرِقَيْنِ وَ رَبُّ الْمَغْرِبَيْنِۚ
55:17. (அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.335
37:5, 70:40 வசனங்களில் உதிக்கும் பல திசைகளுக்கு இறைவன் என்று கூறப்பட்டுள்ளது.
55:17 வசனத்தில் இரண்டு கிழக்குகளுக்கும், இரண்டு மேற்குகளுக்கும் இறைவன் என்று கூறப்பட்டுள்ளது.
இப்பூமியில் வாழும் நாம் தினமும் சூரியன் உதிப்பதைக் காண்கிறோம். தினமும் ஒரு திசையில் தான் உதிக்கிறது. மாறிமாறி உதிப்பதில்லை. அப்படியானால் பல உதிக்கும் திசைகள் என்று சொல்லப்படுவது ஏன்? இரண்டு உதிக்கும் திசைகள், இரண்டு மறையும் திசைகள் என்று 55:17வசனத்தில் சொல்லப்படுவது ஏன்?
பூமி தட்டையானது என்று மக்கள் நம்பியிருந்த காலத்தில் பல கிழக்குகள், பல மேற்குகள் இருப்பதாகக் கூறவே முடியாது.
ஆனால் பூமி உருண்டையாக இருப்பதால் ஏராளமான உதிக்கும் திசைகளும், ஏராளமான மறையும் திசைகளும் இருப்பதை இன்றைக்கு அறிய முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.
சூரியன் உதிப்பதும், மறைவதும் ஒரு வினாடியில் முடியக் கூடியதல்ல. ஒவ்வொரு வினாடியும் ஒவ்வொரு பகுதியாக உதித்துக் கொண்டும், ஒவ்வொரு பகுதியாக மறைந்து கொண்டும் இருக்கும். இதனால் ஏராளமான உதிக்கும் திசைகளும், ஏராளமான மறையும் திசைகளும் ஏற்படும்.
பூமி தட்டையாக இருந்தால் ஒரு திசையில் சூரியன் உதித்து மறு திசையில் மறைந்து விடும். பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.
பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது. இது திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாகும்.
இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்று சொல்லப்படுவது ஏன்? பூமி உருண்டையாக இருந்தால் அப்போது இரண்டு கிழக்குகளும், இரண்டு மேற்குகளும் இருந்தே தீரும்
சென்னையில் இருக்கும் நாம் கிழக்கே சூரியன் உதிப்பதைப் பார்க்கிறோம். பூமியின் மறுபக்கத்தில் சென்னைக்கு நேர்கீழாக இருப்பவர் அந்தச் சூரியனை மறைவதாகக் காண்பார். அதாவது நாம் கிழக்கு என்று சுட்டிக்காட்டும் திசையை அவர் மேற்கு என்று சுட்டிக்காட்டுவார்.
உதிக்கும் ஒவ்வொரு புள்ளியிலும் வாழும் மக்களின் பார்வையைக் கவனித்து உதிக்கும் பல திசைகள் என்று சொல்லப்படுகிறது.
ஒரு புள்ளியில் வாழும் ஒரு மனிதனின் பார்வையைக் கவனித்து உதிக்கும் இரு திசைகள் என்று சொல்லப்படுகிறது.
பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலமும், உதிக்கும் இரு திசைகள் என்ற சொல் மூலமும் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி திருக்குர்ஆன் பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குச் சான்றாகும்.
இது குறித்து மேலும் அறிய 274வது குறிப்பையும் காண்க!
மேலுள்ள, தஃப்ஸீர் குறிப்பை ஆய்வுக்கு எடுக்கிறோம். அக்குறிப்பில் உள்ளவற்றை சிவப்பு நிற எழுத்துக்களில் கொடுத்துள்ளோம். நமது விளக்கங்கள் கருப்பு நிறத்தில் உள்ளது.
*//இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்று சொல்லப்படுவது ஏன்? பூமி உருண்டையாக இருந்தால் அப்போது இரண்டு கிழக்குகளும், இரண்டு மேற்குகளும் இருந்தே தீரும். சென்னையில் இருக்கும் நாம் கிழக்கே சூரியன் உதிப்பதைப் பார்க்கிறோம். பூமியின் மறுபக்கத்தில் சென்னைக்கு நேர்கீழாக இருப்பவர் அந்தச் சூரியனை மறைவதாகக் காண்பார். அதாவது நாம் கிழக்கு என்று சுட்டிக்காட்டும் திசையை அவர் மேற்கு என்று சுட்டிக்காட்டுவார்.//*
இந்த வாதத்தை நாம் சற்று பொறுமையாக சிந்தித்து பார்த்தால், (ஒரு பேப்பரில் படம் வரைந்து பார்த்தால்,) இதே வாதப்படியே ஒரு கிழக்கும் ஒரு மேற்கும்தான் இருக்கும், இரண்டு கிழக்கும் இரண்டு மேற்கும் வருமா?
இந்தப்படத்தைப் பாருங்கள். வான்வெளியில் ஒரே ஓர் உதிக்குமிடமும் ஒரே ஓர் மறையுமிடம் மட்டுமே உள்ளன. இந்த இரண்டு இடத்திற்கு ஊடாக பூமி சுழல்கிறது. இரவும் பகலும் வான்வெளியில் உள்ளன. அவற்றின் ஊடாக பூமி சுழலும்போது வெளிச்சத்தை அடைபவர் பகலை அடைவார், இருட்டை அடைபவர் இரவை அடைவார்.
https://upload.wikimedia.org/wikipedia/commons/8/87/Dateline-animation-3deg-borderonly-180px.gif
இதை இன்னும் தெளிவாக மேலுள்ள அனிமேஷனை நீங்கள் டபுள் க்ளிக் செய்து பார்த்து விளங்கிக்கொள்ளலாம். இரவுக்கும் பகலுக்கும் மத்தியில் பூமி சுழல்கிறது. இதில் 6:00 என்பது உதிக்குமிடம். 18:00 என்பது மறையுமிடம். சிவப்பு கோடுதான் நாம் இருக்குமிடம் என்று வைத்துக்கொள்ளுங்கள். பூமி சுழன்று நாம் 6:00 ஐ அடையும்போது சூரியன் உதிப்பதைப் பார்ப்போம். மேலும் சுழன்று 18:00 ஐ அடையும்போது சூரியன் மறைவதைப் பார்ப்போம். இங்கே இரண்டு உதிக்குமிடமும் மறையுமிடங்களும் எங்கே உள்ளன?
தஃப்ஸீரின் வாதத்திலேயே இந்த தவறு வெளிப்படுகிறது. //சென்னையில் இருக்கும் நாம் கிழக்கே சூரியன் உதிப்பதைப் பார்க்கிறோம். பூமியின் மறுபக்கத்தில் சென்னைக்கு நேர்கீழாக இருப்பவர் அந்தச் சூரியனை மறைவதாகக் காண்பார். அதாவது நாம் கிழக்கு என்று சுட்டிக்காட்டும் திசையை அவர் மேற்கு என்று சுட்டிக்காட்டுவார்.// சென்னை சூரிய உதயத்தை பார்க்கும் அதே வேளையில் சென்னையின் தீர்க்க ரேகையில் இருப்பவர்களை தவிர வேறு யாரும் சூரிய உதயத்தை பார்க்க மாட்டார்கள். சென்னையும் அதன் தீர்க்க ரேகையிலும் உள்ளவர்கள் எதனை கிழக்கு என்கிறார்களோ அப்போது அது மட்டுமே கிழக்கு, வேறு கிழக்கு இல்லை. ஆக ஒரே ஒரு கிழக்கு. சென்னைக்கு எதிராக பூமியின் மறுபக்கத்தில் இருப்பவரும் அவருடைய தீர்க்க ரேகையில் இருப்பவரும் ஒரே ஒரு சூரியன் மறையுமிடத்தை பார்ப்பார்கள். இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்பதற்கு இது பொருத்தமான விளக்கமல்ல.
பொருத்தமான விளக்கம் என்று நாம் கருதுவதை இங்கே இணைத்துளோம். உண்மையான விளக்கத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான்.
கிழக்கு மேற்கு எனும் பொருட்கள் இருந்தாலும் இவ்வசனத்தை பொறுத்தவரை மஷ்ரிக் மற்றும் மக்ரிபிற்கு உதிக்கும் இடம் மறையும் இடம் என பொருள்கொள்வதே பொருத்தம். இதை பின்வரும் விளக்கங்கள் உறுதிப்படுத்தும்.
பூமி தானே சுழல்வதையும் சூரியனை சுற்றிவருவதையும் நாம் அறிந்துள்ளோம். பூமி சுழலும் அச்சும் பூமி சூரியனை சுற்றும் பாதையும் ஒரே தளத்தில் இல்லாமல் பூமியின் அச்சு 23½ டிகிரி சாய்ந்து உள்ளது. இதனால் தான் பூமியில் காலநிலை மாற்றங்கள் நிகழ்கின்றன. பூமியின் அச்சு இந்த சாய்வு இல்லாமல் இருந்திருந்தால் எப்போதும் ஒரே கால நிலை தான் பூமியில் இருந்திருக்கும். துருவப்பகுதிகளிலும் வருடத்தின் எல்லா நாட்களிலும் இரவு பகல் ஏற்பட்டிருக்கும்.
பூமியின் இந்த சாய்வின் காரணமாக இன்று உதித்த இடத்திலிருந்து நாளை சூரியன் உதிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் 130 மில்லி டிகிரி விலகியே உதிக்கிறது. மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 ஆகிய இரண்டு தினங்களில் மட்டுமே சரியாக கிழக்கிலிருந்து சூரியன் உதயமாகிறது. மார்ச் 20 லிருந்து ஒவ்வொரு நாளும் 130 மில்லி டிகிரி வடக்கு நோக்கி சாய்ந்து ஜூன் 21ம் தேதி 23.5 டிகிரி வடகிழக்கிலிருந்து சூரியன் உதிக்கும். பின்னர் ஒவ்வொரு நாளும் 130 மில்லி டிகிரி தெற்கு நோக்கி நகர்ந்து செப்டம்பர் 23ம் தேதி சரியாக கிழக்கிலிருந்து உதிக்கும். மீண்டும் தெற்கு நோக்கி நகர்ந்து டிசம்பர் 21ம் தேதி 23.5 டிகிரி தென்கிழக்கிலிருந்து சூரியன் உதிக்கும். இப்படி சூரியன் 23.5 வடகிழக்கு மற்றும் 23.5 தென்கிழக்கு என இரண்டு உதயத்தின் எல்லைகளை கொண்டுள்ளது. இதைதான் இறைவன் இரண்டு உதிக்கும் இடங்கள் என்று கூறுகின்றான். அதாவது வடகிழக்கில் ஓர் உதிக்குமிடதையும் தென்கிழக்கில் ஓர் உதிக்குமிடத்தையும் சூரியன் பெற்றுள்ளது. சூரியன் மறைவதிலும் இதே கணக்கு தான். 23.5 வடமேற்கு மற்றும் 23.5 தென்மேற்கு என இரண்டு சூரிய மறைவின் எல்லைகளை கொண்டுள்ளது
இதே விளக்கத்தை தப்ஃசீர் தபரியிலும் இப்னு கதீரிலும் காணலாம்
يقول تعالى ذكره: ذلكم أيها الثقلان ( رَبُّ المَشْرقَينِ )، يعني بالمشرقين: مشرق الشمس في الشتاء، ومشرقها في الصيف.
وقوله: ( وَرَبُّ المَغْرِبَينِ ) يعني: وربّ مغرب الشمس في الشتاء، ومغربها في الصيف.