இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://istafseer.blogspot.com/p/blog-page.html
QSF ஆய்வுக்குழு
QSF03 பூமியை துளைத்து மலையின் உயரத்தை அடைய முடியாதா?
17:37 وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا ۚ اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا
17:37. பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்! நீர் பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!
தஃப்ஸீர் குறிப்பு:- 266. பூமியின் ஆழத்திற்குச் செல்ல முடியாது
மனிதர்கள் விண்வெளிப் பயணம் செல்ல முடியும் என்றும், விண்வெளிப் பயணம் செல்லும்போது இதயம் சுருங்கி விடும் என்றும் சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன், பூமிக்கு அடியில் மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்று இவ்வசனத்தில் (17:37) சொல்கின்றது.
இவ்வசனம் மிகப்பெரிய அறிவியல் முன்னறிவிப்பாக அமைந்துள்ளது. தமிழ்மொழி பெயர்ப்பாளர்கள் இவ்வசனத்திற்குத் தவறான மொழி பெயர்ப்பைச் செய்து, இவ்வசனத்தை அர்த்தமற்றதாக ஆக்கியுள்ளனர்.
"நீ பூமியில் அகந்தையுடன் நடக்காதே! ஏனெனில் நீ பூமியைப் பிளக்கவுமில்லை. மலையின் உயரத்தை அடையவுமில்லை'' என்ற கருத்துப்படவே பெரும்பாலான மொழிபெயர்ப்புக்கள் அமைந்துள்ளன.
ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும்போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக் கூடாது என்ற கட்டளையுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.
இவ்வசனத்தின் சரியான பொருள் "நீ பூமியைப் பிளந்து மலையின் உயரத்தை அடையவில்லை'' என்பது தான். இது பற்றி விபரமாகப் பார்ப்போம்.
மனிதன் ஆகாயத்தில் எவ்வளவோ உயரத்திற்குச் செல்கிறான். அது மனிதனுக்கு எளிதாக இருந்தாலும் பூமிக்குக் கீழ் அப்படிச் செல்ல முடியவில்லை. பெரிய மலையின் உயரம் அளவு ஆழத்திற்கு மனிதனால் பூமியைப் பிளந்து செல்ல முடியாது என்பதுதான் இவ்வசனம் கூறும் கருத்தாகும்.
நடக்க முடியாத இந்த அரிய செயலை உன்னால் செய்ய முடியும் என்றால் நீ பெருமையடிப்பதில் ஏதாவது பொருள் இருக்கும் என்று இறைவன் இடித்துரைக்கிறான்.
இதில் அடங்கியுள்ள அறிவியல் உண்மை என்னவென்பதைப் பார்ப்போம்.
மனிதன், பூமிக்கு மேலே 3,56,399 கி.மீ. தொலைவுடைய சந்திரனுக்கு ஆளை அனுப்பி அதன் உயரத்தை அடைந்து விட்டான். மேலும் பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.
பூமியின் குறுக்களவு 12,756 கி.மீ. ஆகும். அதாவது பூமியின் ஒரு முனையிலிருந்து அதன் எதிர்முனை வரையுள்ள தூரம் (விட்டம்) 12,756 கி.மீ. ஆகும்.
இதில் மனிதன் சென்றடைந்துள்ள தூரம் 3.3 கி.மீ. மட்டுமே. தென் ஆப்பிரிக்காவில் உள்ள உலகின் மிக ஆழமான சுரங்கம் எனப்படும் டிரான்ஸ் வால் பாக்ஸ்பர்க் என்ற இடத்திலுள்ள சுரங்கத்தின் ஆழம் இது தான்.
உண்மையில் இது கூடச் சரியான அளவு என்று சொல்ல முடியாது. ஏனெனில் இந்தப் பகுதி கடல் மட்டத்திலிருந்து 1600 மீட்டர் உயரத்தில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து அளவிட்டால் இந்தச் சுரங்கத்தின் ஆழம் 1700 மீட்டர் மட்டுமே! அதாவது 2 கி.மீ. கூட பூமியின் ஆழத்தில் மனிதன் இன்னும் செல்லவில்லை.
உலகின் மிக உயரமான இமய மலையின் உயரம் 9 கி.மீ. ஆகும். இந்த 9 கி.மீ. ஆழத்திற்கு, அதாவது மலையின் உயரம் அளவுக்குப் பூமியில் மனிதன் செல்ல முடியாது என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கிறார்கள்.
பூமியின் மேற்பரப்பில் சராசரியாக 40 டிகிரி சென்டிகிரேட் வெப்பத்தையே மனிதனால் தாங்க முடியாது. கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் ஆழமுள்ள மேற்கண்ட சுரங்கத்தில் 57 டிகிரி சென்டிகிரேட் வெப்பம் உள்ளது. தொழிலாளர்களால் இந்த வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால் அதன் அருகிலுள்ள பகுதிகள் குளிரூட்டப்பட்டுள்ளன.
பூமிக்கு அடியில் 700 மீட்டர் கடந்து விட்டால் காற்று, முகத்தைச் சுட்டுப் பொசுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். எனவே மலையின் உயரமான 9 கி.மீ. அளவுக்குப் பூமிக்குள் செல்வது சாத்தியமே இல்லை.
மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதனால் மனிதனின் எடை அதிகரிக்கும். அவனது எடையை அவனால் தாங்க முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.
இந்தப் பேருண்மைகளை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே பறைசாற்றியதன் மூலம் திருக்குர்ஆன் இறைவேதம் என்பது நிரூபணமாகின்றது.
நமது மறுப்பு:-
பூமியிலேயே உயரமான மலை அளவுக்கு பூமியில் ஆழமாக மனிதனால் தோண்ட இயலாது என்று இவ்வசனம் சொல்வதாக தஃப்ஸீர் சொல்கிறது.
இந்த வசனத்திற்கு பொருள் கொள்வதற்கு முன்பாக தப்சீரில் உள்ள பொருளையே கொடுப்போம் ஆனால் இலக்கணம் சரியாக உள்ளதா என்று முதலில் ஆராய்வோம்.
லன்:-
(1) وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا
(2) اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْض
(3) وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا
(1) பூமியில் கர்வத்துடன் நடக்காதீர்!
(2) நீர் பூமியைப் பிளக்க மாட்டீர்
(3) மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!
இவ்வாறு பிளப்பதையும் உயரத்தை அடைவதையும் தனித்தனியாகவே பொருள் கொள்ள முடியும். இரண்டையும் சேர்த்து “பூமியை பிளந்து மலையின் உயரத்தை அடைதல்” என்று ஒன்றாக பொருள் செய்யவே முடியாது. அவ்வாறு பொருள் செய்வது இலக்கணப்பிழை ஆகும்.
இந்த இலக்கணப் பிழையின் காரணத்தாலேயே ஒட்டுமொத்த வாதமும் அடிபட்டுவிடுகிறது. இரண்டையும் இணைத்து பொருள் செய்தால் மட்டுமே மலையின் உயரம் அளவுக்கு பூமியில் ஆழமாக தோண்ட இயலாது என்ற பொருள் வரும். இணைக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டாலே தஃப்ஸீர் குறிப்பின் அனைத்து வாதங்களும் அடிபட்டுவிடுகிறது. அதில் சொல்லப்பட்டுள்ள போலி விஞ்ஞானத்திற்கும் இந்த குர்ஆன் வசனத்திற்கும் தொடர்பே இல்லை என்றாகிவிடுகிறது. இந்த தப்ஸீர் குறிப்பு முற்றிலும் தவறு என்றாகிவிடுகிறது. எனினும் தஃப்ஸீர் குறிப்பில் இருக்கும் மற்ற பிழைகளையும் பார்ப்போம்.
ஃகரக:-
பொருள் சரியா என்று பார்த்தால் تَخْرِقَ எனும் வார்த்தைக்கு பிளத்தல் என்பதை விட துளையிடுதல் என்பதுதான் பொருத்தமாக உள்ளது.
இந்த வசனத்தில் வந்துள்ள خَرَقَ என்ற வார்த்தைதான் 18:71 இல் வந்துள்ளதை கவனிக்க.
18:71 فَانْطَلَقَا حَتّٰۤى اِذَا رَكِبَا فِى السَّفِيْنَةِ خَرَقَهَا ؕ قَالَ اَخَرَقْتَهَا لِتُغْرِقَ اَهْلَهَا ۚ لَقَدْ جِئْتَ شَيْــًٔـا اِمْرًا
18:71. இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். "இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.
துளையிட்டு மறுபக்கம் வருவதைக் குறிக்க خَرَقَ எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
// ஆரம்பகாலம் முதல் சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்ற பல்வேறு பணிகளுக்காக மனிதர்கள் பூமியைப் பிளந்து கொண்டு தான் வருகின்றனர். திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்திலும் இப்பணிகள் நடந்து வந்தன. அப்படி இருக்கும்போது, நீ பூமியைப் பிளக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும் என்பதை இவர்கள் சிந்திக்கவில்லை.
மேலும் பூமியைப் பிளப்பதற்கும், மலையின் உயரத்தில் இருப்பதற்கும் பெருமையடிக்கக் கூடாது என்ற கட்டளையுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை.//
என்று தப்சீரில் எழுதப்பட்டிருப்பது பிளத்தல் என்ற வார்த்தையையும் குழிபறித்தல் என்ற வார்த்தையையும் குழப்பிகொண்டுள்ளதைக் காட்டுகிறது. யாராவாது கிணறு பிளக்கிறோம், கபுர் பிளக்கிறோம், குழி பிளக்கிறோம், அஸ்திவாரம் பிளக்கிறோம் என்று சொல்வோமா? கிணறு வெட்டுகிறோம் அல்லது குழி தோண்டுகிறோம் என்றுதானே சொல்வோம். சுரங்கம் வெட்டுதல், கிணறு தோண்டுதல், அணைகள், கண்மாய்கள் அமைத்தல் போன்றவை பூமியை பிளக்கும் செயல் அல்ல. அவை பூமியை துளைக்கும் அல்லது குழிக்கும் செயல். பிளத்தல் என்றாலே இரண்டாக பிளப்பதுதான்.
“மலைகளின் உயரத்தின் அளவை” என்றும் பொருள்கொள்ள இயலாது. "மலைகளின் உயரம்" என்று சொல்ல வேண்டுமானால் طُوْلُ الْجِبَالِ “தூலுல் ஜிபாலி” என்று வரவேண்டும். இது ஓர் இலக்கணப் பிழை.
மேலும் طُوْلًا என்ற வார்த்தை பூமியை துளைத்து ஆழத்தை அடைதலுக்காக ஒருக்காலமும் அரபு மொழியில் பயன்படுத்தப்படாது. தூலன் எனும் வார்த்தை உயரம் தொடர்பாகவே பயன்படுத்தப்படும்.
இதுவும் ஓர் இலக்கணப் பிழையாகும்
லன்?
اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْض وَلَنْ تَبْلُغَ طُوْلُ الْجِبَالِ
இவ்வாறு ‘லன்’ இல்லாமல் இருந்து “தூலுல் ஜிபாலி” என்றும் இருந்தால் மட்டுமே “பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்!” என்று பொருள் வரும். அல்லாஹ் லன் எனும் வார்த்தையை வீணாக சொல்லிவிட்டான் என்றும் ஜிபால தூலன் என்று தவறாக சொல்லிவிட்டான் என்றும் வாதிடும் நிலை ஏற்படும்.
அவ்வாறல்ல...
(1) وَلَا تَمْشِ فِى الْاَرْضِ مَرَحًا
(2) اِنَّكَ لَنْ تَخْرِقَ الْاَرْض
(3) وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُوْلًا
(1) பூமியில் பெருமையுடன் நடக்காதீர்!
(2) நிச்சமாக நீர் பூமியைத் துளைத்து(மறுபக்கம் வந்து)விட மாட்டீர்!
(3) (உம்முடைய) உயரத்தால் மலைகளை அடையவும் மாட்டீர்!
என்பது பொருத்தமான பொருளாக்கமாக இருக்கும்.
கூடுதல் இலக்கண விளக்கம் பெற:- https://www.facebook.com/Piraivaasi/posts/pfbid0NFG4NwNj5bq5FERvP8D8nioEEhPUHRiuUS3PA1axYHygdV6Gp4BKMa4kt6xCrST3l
இந்த வசனத்தில் நாம் விஞ்ஞானத்தைத் தேடிச் செல்லக்கூடாது. இது இலக்கியமாக சொல்லப்பட்ட ஒன்று. மனிதா! ஏன் பெருமை கொள்கிறாய். உன்னால் பூமியை துளைத்து மறுபக்கம் வர முடியுமா? அல்லது நீ எவ்வளவு உயர்ந்தாலும் உன்னுடைய உயரத்தால் மலையின் உயரத்தை அடைய முடியுமா?
"மலையின் உயரத்தை அடைய முடியாது" என்பதும் "உயரத்தால் மலைகளை அடைய முடியாது" என்பதும் வெவ்வேறு கருத்துக்கள் ஆகும். குர்ஆனில் எது இருக்கிறதோ அதைத்தான் சொல்ல வேண்டுமே தவிர நமக்கு விருப்பமானதை அடித்து விடக்கூடாது.
"உயரத்தால் மலைகளை அடைய முடியாது" என்றால் மலை அளவுக்கு வளர இயலாது என்பதே நேரடிப் பொருள்.
இங்கே உயரம் என்பது விமானத்தில் ஏறி மலையை விட உயரமாக பறப்பதல்ல. உயர்ந்த மனிதர் என்று சொல்வதைப் போல இலக்கிய நயத்துடனே அணுகவேண்டும். அவ்வாறல்லாமல் நேரடியாக பொருள் கொண்டால் கூட அதிக பட்சமாக 8 அடி வரை மனிதன் வளர்வானே தவிர கிலோமீட்டர்கள் கணக்கில் உயரத்தில் இருக்கும் மலையின் உயரத்திற்கு அவன் வளரமட்டான்.
லன் எனும் வார்த்தைக்கு பொருள் கொள்ளாமல் விட்டால் மட்டுமே தப்ஸீர் சொல்வதைப் போல பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டீர்! என்று பொருள் வரும். அல்லாஹ் லன் எனும் வார்த்தையை வீணாக சொல்லிவிட்டான் என்று சொல்லும் நிலை ஏற்படும்.
இந்த வசனத்திற்கு நாம் அறிவியலைத் தேடிச் சென்றால் எதன் தொடர்ச்சியாக இவ்வசனம் வருகிறதோ இதற்கு முன்னிருக்கும் அவ்விரு வசனங்களிலும் நாம் அறிவியலைத் தேடவேண்டும்.
17:24. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக
17:29. உமது கையைக் கழுத்தில் கட்டப்பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்!
சிறகை தாழ்த்துவது தொடர்பாக ஏதேனும் விஞ்ஞானம் உள்ளதா?
அல்லது கையை கழுத்தில் கட்டுவது தொர்பாக ஏதேனும் விஞ்ஞானம் உள்ளதா?
இல்லை! இவற்றை நாம் இலக்கியமாகவும் உவமைகளாகவுமே பார்ப்போம்.
அறிவியல்:-
எடை அதிகரிக்குமா?
//மேலும் பூமியின் ஆழத்தில் செல்லச்செல்ல புவி ஈர்ப்பு விசையும் அதிகரிக்கின்றது. இதனால் மனிதனின் எடை அதிகரிக்கும். அவனது எடையை அவனால் தாங்க முடியாத நிலை ஏற்படும். இதன் காரணமாகவும் பூமியின் ஆழத்தில் மனிதன் செல்ல முடியாது.//
இது அறியாமை ஆகும். பூமியின் ஈர்ப்பு விசையை விடை 4 மடங்கு அதிகமான ஈர்ப்பு விசையை மனிதனால் தாங்கிக்கொள்ள இயலும். பூமியின் மேற்பரப்பில் ஈர்ப்பு விசை 9.81 m/s² ஆகும். ஆக மனிதனால் 40 m/s² ஈர்ப்புவிசையை தாங்கிக்கொள்ள இயலும்.
பூமியின் ஆழத்திற்கு செல்லச் செல்ல எந்த அளவுக்கு ஈர்ப்பு விசை அதிகரிக்கும் என்பதை மேலுள்ள வரைபடம் காட்டுகிறது. பூமியின் மேற்பரப்பிலிருந்து அதன் மையம் வரையுள்ள ஆழம் 6,371கிமீ ஆகும். பூமியின் ஈர்ப்பு விசை 9.81 லிருந்து 10 ஆகவேண்டும் என்றால் பூமிக்கடியில் 371 கிமீ சென்றாக வேண்டும். இந்த அளவுக்கு பூமிக்கடியில் செல்வது பற்றிய பேச்சே இல்லை. நாம் அதிகபட்சமாக 9கிமீ போக முடியுமா என்றுதான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஈர்ப்பு விசை 10ஐக் கடக்க வேண்டுமென்றால் 2000கிமீ ஆழத்திற்கு செல்ல வேண்டும். பூமியின் ஈர்ப்புவிசை அதிகபட்சமாக 10.7 எனும் அளவில் 3500கிமீ ஆழத்தில் இருக்கும். அதன் பிறகு ஆழத்திற்கு செல்ல செல்ல புவி ஈர்ப்பு விசை குறைந்து இறுதியில் பூஜ்ஜியம் ஆகிவிடும். பூமிக்கு கீழே எவ்வளவு ஆழத்திற்கு மனிதன் சென்றாலும் அங்கே மனிதனுக்கு எந்த சிரமும் ஏற்படுத்தாத அளவுக்குத்தான் ஈர்ப்பு விசை இருக்குமே தவிர ஆசிரியர் கற்பனை செய்ததுபோல மனிதனின் எடையை மனிதனே தாங்கிக்கொள்ள இயலாத நிலை வராது.
இது குறித்த எளிமையான கூடுதல் விளக்கத்திற்கு https://m.facebook.com/story.php?story_fbid=pfbid026ZVeti9goyzUp1vcNdd3utoPWzJqqDExEw3imVwWznTgPNZi5j3ZvKXhMFMnEfEMl&id=100026250649513
பார்க்க:
https://en.wikipedia.org/wiki/Gravity_of_Earth
https://www.discovermagazine.com/the-sciences/whats-the-maximum-gravity-we-could-survive
மலைகளின் உயரத்தின் அளவுக்கு பூமியின் ஆழத்தை மனிதன் அடையவில்லையா?
அடைதல் என்று சொல்வதற்கு அல்லாஹ் பயன்படுத்தியுள்ள வார்த்தை بلغ என்பதாகும். இவ்வார்த்தைக்கு மனிதனே நேரடியாக சென்று ஓரிடத்தை ஒரு பொருளை அடைவதை மட்டுமே குறிக்கும் என்று வாதிட முடியாது. ஐந்து வயதை அடைதல் என்று சொல்வதற்கும் இந்த வார்த்தைதான் பயன்படும். ஒரு செய்தி ஒருவரை அடைந்தது என்று சொல்வதற்கும் இதே வார்த்தைதான் பயன்படும். நான் ஒரு குச்சியால் மாங்காயை பறித்திருப்பேன் அதை நானே பறித்தேன் என்று சொல்வேன். அந்த மாங்காயை நானே அடைந்தேன் என்று சொல்வேன். தமிழில் அடைதல் என்ற வார்த்தையை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்துவோமோ அதே பொருட்களில் பலக எனும் வார்த்தைக்கு அரபு மொழியிலும் பயன்படுகிறது.
உதாரணமாக இந்த தப்சீரில் இருக்கும் செய்தியையே குறிப்பிட இயலும். அடைதல் என்பதற்கு விளக்கமாக தப்சீரில் இருக்கும் வாசகங்கள் இவை. //பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.// இங்கே செவ்வாய் கிரகத்தை மனிதன் அனுப்பிய எந்திரம்தான் அடைந்தது. ஆனால் அதை மனிதன் அடைந்ததாக தஃப்ஸீரே சொல்கிறது. இதுதான் அடைதலின் பொருள்.
ஆக மனிதன் நேரடியாக ஒன்றை அடையவேண்டும் என்றில்லை அவன் புறச்சாதனங்களால் ஒன்றை அடைந்தாலும் மனிதன் அடைந்ததாகவே பொருள்கொள்ளப்படும். அதுதான் பலக-வின் பொருள்.
கடல்மட்டத்திலிருந்து அதிக உயரமாக இருக்கும் மலையாக கருதப்படுவது இமய (எவரஸ்ட்) மலை. அதன் உயரம் 8.848 கிமீ. பூமியின் மையத்திலிருந்து அதிக உயரத்தில் இருக்கும் மலையாக கருதப்படுவது இகுவேடர் நாட்டில் இருக்கும் Chimborazo மலை. கடல்மட்டத்திலிருந்து அதன் உயரம் 6.263 கிமீ. ஆனால் மனிதன் 12கிலோ மீட்டருக்கும் மேலான ஆழத்தில் 3 இடங்களில் பூமியை துளைத்துவிட்டான். மனிதன் அனுப்பிய கருவிகள் மலைகளின் உயரங்களை ஒன்றரை மடங்கு தாண்டி பூமியின் ஆழத்தை அடைந்துவிட்டன.
பார்க்க:
https://en.wikipedia.org/wiki/Kola_Superdeep_Borehole
https://en.wikipedia.org/wiki/Al_Shaheen_Oil_Field
https://en.wikipedia.org/wiki/Sakhalin-I
மனிதனே அடைய வேண்டுமா?
மேலுள்ள வாசகங்களுக்கு ஆசிரியர் தரப்பு மறுப்பு என்னெவென்றால்... “கருவிகள்தாம் பூமியை துளைத்து மலையின் உயரத்தை அடைந்துள்ளன, இது செல்லாது செல்லாது. மனிதனே அந்த ஆழத்திற்கு சென்றால்தான் நான் ஏற்றுக்கொள்வேன்” என்பதுதான். //பூமிக்கு மேலே 8 கோடி கி.மீ. தொலைவிலுள்ள செவ்வாய்க் கிரகத்துக்கு இயந்திரத்தை அனுப்பி அதன் உயரத்தை மனிதன் அடைந்து விட்டான்.// என்று ஆசிரியரே சொல்லி இருப்பதை மறந்துவிட்டார் போலும்.
சரி இந்த வாதத்தையும் பார்த்துவிடுவோம்.
(1) பூமியில் பெருமையுடன் நடக்காதீர்! (2) நிச்சமாக நீர் பூமியைத் துளைத்து(மறுபக்கம் வந்து)விட மாட்டீர்! (3) (உம்முடைய) உயரத்தால் மலைகளை அடையவும் மாட்டீர்!
என்பதுதான் குர்ஆன் வசனம். இந்த வசனத்தில் எவரஸ்ட் மலையின் உயரத்தை அடைய முடியாது என்று அல்லாஹ் சொல்லவில்லை. மாறாக உயரத்தால் ‘மலைகளை’ அடைய முடியாது என்று பன்மையில் பொதுவாகத்தான் சொல்கிறான். எனவே ஒருவர் ஏதாவது ஒரு மலையின் உயரத்தின் அளவுக்கு பூமியை துளைத்து விட்டாலும் ஆசிரியரின் வாதம் தவறென்று ஆகிவிடும்.
Mponeng Gold Mine என்றொரு தங்கச் சுரங்கம் தென் அமெரிக்காவில் இருக்கிறது. 4 கிமீ ஆழம் கொண்ட இந்த சுரங்கத்தில் மனிதனே 4 கிமீ ஆழத்திற்கு செல்கிறான்.
இதற்கும் ஆசிரியர் தரப்பில் இருந்து வரும் மறுப்பென்னவென்றால். “செல்லாது... செல்லாது... 4 கிமீ என்பது கடல் மட்டத்திலிருந்துள்ள ஆழமல்ல. கடல்மட்டத்திலிருந்து ஆழம் சொல்லப்பட்டால்தான் ஏற்றுக்கொள்வேன்” என்பதாகும்.
Mponeng சுரங்கத்தின் நுழைவாயில் கடல்மட்டத்திலிருந்து 1500மீ உயரத்தில் உள்ளது. ஆக இச்சுரங்கத்தின் ஆழத்தை கடல்மட்டத்திலிருந்து சொல்வதென்றால் 2.5கிமீ அதாவது இரண்டரை கிலோமீட்டர்கள் ஆகும். கொடைக்கானல் மலையின் உயரம் 2கிலோமீட்டரும் 100மீட்டரும் ஆகும். ஆக Mponeng சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கொடைக்கானல் மாலையைப் போன்ற இரண்டரை கிலோமீட்டர்களுக்கு கீழுள்ள ஒவ்வொரு மலைகளின் உயரத்தையும் தினமும் தோற்கடிக்கிறார்கள்.
“7கிமீ உயதிற்கு மேலிருந்தால்தான் அது மலை எனும் தகுதியைப் பெறும்” எனும் வாதத்தை தப்சீர் ஆசிரியர் நாத்திக விவாதத்தின்போது வைத்தார். இதனடிப்படியில் உஹத் மலை என்று ரசூலுல்லாஹ் அழைத்த மலையானது மலை எனும் தகுதியை இழந்துவிடும். குர்ஆனில் வரும் தூர் சினாய் மலையும் மலை எனும் தகுதியை இழக்கிறது. 7கிமீ உயதிற்கு மேலிருந்தால்தான் அது மலை எனும் விஞ்ஞானத்தை தப்சீர் ஆசிரியர் எங்கிருந்து கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை.
உஹத் மலையின் உயரம் ஒரு கிலோ மீட்டர். ஹீரா குகை இருக்கும் நூர் மலையின் உயரம் வெறும் அறுநூறு மீட்டர். Mount Wycheproof எனும் மலை 43மீட்டர் உயரத்துடன் உலகிலேயே சிறிய மலையாக அழைக்கப்படுகிறது. இதுபோன்று ஆயிரகணக்கான மலைகள் உள்ளன. அவற்றின் உயரத்தின் அளவுக்கு என்றோ மனிதன் பூமியை துளைத்துவிட்டான்.
உலகிலேயே ஆழமான இயற்கையான குகை ஜார்ஜியாவில் உள்ள Veryovkina குகை ஆகும். இதன் ஆழம் 2,212 மீட்டர்கள் (2.2 கிலோமீட்டர்). இந்த குகையின் அடிப்பகுதிக்கு பலர் சென்றுவிட்டனர். ஆக பூமியை தோண்டாமலேயே பல மலைகளின் உயரத்தை விட பூமியின் ஆழத்தை மனிதன் அடைந்துவிட்டான்.
ஆழமான தங்கச்சுரங்கம் https://en.wikipedia.org/wiki/Mponeng_Gold_Mine
ஆழமான குகை https://en.wikipedia.org/wiki/Veryovkina_Cave
மலையின் உயரத்தின் அளவுக்கு பூமியின் ஆழத்தை அடையவே முடியாது என்பது தவறான வாதமாகும். விஞ்ஞானம் என்று தான் தவறாக கேள்விப்பட்டதை நிலைநாட்டுவதற்காக இலக்கண விதிகளை மீறி குர்ஆன் வசனம் வளைக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்ட விஞ்ஞானமும் தவறு.
மற்ற தலைப்புகளை வாசிக்க https://istafseer.blogspot.com/p/zinaulabdeen.html