QSF01 அரேபியன் பிளவு

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்

ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்

QSF ஆய்வுக்குழு



QSF01 அரேபியன் பிளவு


தஃப்ஸீர் குறிப்பு: 422. சந்திரன் பிளந்தது


ٱقْتَرَبَتِ ٱلسَّاعَةُ وَٱنشَقَّ ٱلْقَمَرُ ﴿١﴾ وَإِن يَرَوْا۟ ءَايَةً يُعْرِضُوا۟ وَيَقُولُوا۟ سِحْرٌ مُّسْتَمِرٌّ ﴿٢﴾ وَكَذَّبُوا۟ وَٱتَّبَعُوٓا۟ أَهْوَآءَهُمْ ۚ وَكُلُّ أَمْرٍ مُّسْتَقِرٌّ ﴿٣﴾

54:1. யுகமுடிவு நேரம் 1 நெருங்கி விட்டது. சந்திரனும் பிளந்து விட்டது. 422

54:2. அவர்கள் சான்றைக் கண்டால் "இது தொடர்ந்து நடக்கும் சூனியம்''285 எனக் கூறிப் புறக்கணிக்கின்றனர்.357

54:3. பொய்யெனக் கருதி தமது மனோ இச்சைகளைப் பின்பற்றுகின்றனர். ஒவ்வொரு காரியமும் பதிவாகின்றது.


இவ்வசனத்தில் (54:1) சந்திரன் பிளந்து விட்டது என்று கூறப்பட்டுள்ளது.


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மை இறைவனின் தூதர் என்று கூறியபோது அதற்குரிய அத்தாட்சியை அன்றைய மக்கள் கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வானத்தில் சந்திரனை இரண்டாகப் பிளந்து காட்டினார்கள். அனைவரும் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் மக்களிடம் கூறினார்கள். (பார்க்க: புகாரீ 3636, 4864, 4865)  


இந்நிகழ்ச்சியைத்தான் இவ்வசனம் சுட்டிக்காட்டுகிறது. பூமியின் துணைக்கோளாக அமைந்துள்ள சந்திரனைப் பற்றி அறிந்து வைத்திருப்பவர்கள், சந்திரன் இரண்டாகப் பிளப்பதும், பிறகு ஒன்று சேர்வதும் சாத்தியமற்றது என்று கருதலாம். ஆனால் திருக்குர்ஆனில் இறைவன் தனது தனிப்பெரும் ஆற்றலால் நிகழ்த்திய அற்புதங்களைக் கூறும்போது, அதற்கான சான்றுகளையும் உலகில் விட்டு வைக்கிறான். நூஹ் நபியின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பிரளயத்தைச் சொல்லும்போது அவர் பயணித்த கப்பலைச் சான்றாக விட்டு வைத்திருக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அந்தக் கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. (பார்க்க: குறிப்பு 222)


அதுபோல் சந்திரன் பிளந்ததைக் கூறி விட்டு, இது ஓர் அற்புதம் என்பதையும் உறுதி செய்து விட்டு, அனைத்தும் பதிவாகியிருக்கின்றது என்று இவ்வசனத்தில் கூறுகிறான். சந்திரன் பிளந்த நிகழ்வு தந்திரமோ, அல்லது கண்கட்டு வித்தையோ அல்ல. அது பதிவாகியிருக்கின்றது என்று கூறுகிறான். நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கியபோது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.


இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான். முஸ்லிம்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் விதமாக இந்தப் பிளவு அமைந்துள்ளது என்பதே இதன் பொருளாகும். இறைவன் கூறுவது போன்று, சந்திரன் பிளந்ததற்கான சான்றும் சந்திரனிலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்தக் கண்டுபிடிப்பிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


இந்தத் தகவல் அமெரிக்க அரசால் தமிழ் உட்பட உலகின் பல மொழிகளில் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட்டர் என்ற மாத இதழில் புகைப்பட சான்றுகளுடன் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்கியபோது வெளிவந்தது. சந்திரன் பிளந்தது பற்றியும், அதற்கான சான்று சந்திரனில் பதிவாகியுள்ளது பற்றியும் திருக்குர்ஆன் அறிவித்திருப்பது இது இறைவேதம் என்பதை உறுதிப்படுத்துகின்றது.


சந்திரனில் பிளவு ஏதும் இல்லை என்று தற்போது நாசா விஞ்ஞானிகள் கூறுவதாகச் சிலர் இதை மறுக்கின்றனர். இப்போது நிலவில் பிளவு தென்படவில்லை என்பதால் அப்பல்லோ விண்கலம் மூலம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய போது எடுத்த புகைப்படங்களும், அதில் காணப்பட்ட பிளவும், அரபியன் பிளவு என்று அதற்கு பெயரிட்டதும், அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட் பத்திரிகையில் இந்த விபரம் வெளியிடப்பட்டதும் பொய்யாகாது. அமெரிக்கன் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை என்று நாசா மறுக்கவில்லை.


மேலுள்ள, 54:1 குர்ஆன் வசனத்திற்கான தஃப்ஸீர் குறிப்பை ஆய்வுக்கு எடுக்கிறோம். அக்குறிப்பில் உள்ளவற்றை சிவப்பு நிற எழுத்துக்களில் கொடுத்துள்ளோம். நமது விளக்கங்கள் கருப்பு நிறத்தில் உள்ளது. 


//நிலவில் முதலில் காலடியெடுத்து வைத்த நீல் ஆம்ஸ்ட்ராங், அங்கு இறங்கியபோது அவர் பயணித்த விண்கலம் நிலவைப் பல கோணங்களில் ஏராளமான புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. அவற்றுள் ஒரு கோணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் ஓர் ஆப்பிளை இரண்டாக அறுத்து மீண்டும் இணைத்தது போன்ற கோடு இருந்தது.//


File:Rima Ariadaeus-1.jpg https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/6b/Rima_Ariadaeus_as10-30-4450.jpg/240px-Rima_Ariadaeus_as10-30-4450.jpg


மேலுள்ளவைதான் அப்புகைப்படங்கள். நிலவின் தரைக்கு அருகாமையில் இருந்து நெருக்கமாக எடுக்கப்பட்ட புகைப்படம் எப்படி முழு நிலவையும் இரண்டாக பிளந்து ஒட்டியதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்?


LROC image of Rima Ariadaeus


வெகு தூரத்திலிருந்து எடுக்கப்பட்ட அதே வெடிப்பின் படம் இதோ? இரண்டாக அறுக்கப்பட்ட ஆப்பிளை ஒட்டவைத்ததைப் போலுள்ளதா?


அந்த வெடிப்பின் வீடியோ இதோ https://www.youtube.com/watch?v=zSxbnec72xc . இரண்டாக அறுக்கப்பட்ட ஆப்பிளை ஒட்டவைத்ததைப் போலுள்ளதா?


//இதற்கான காரணத்தை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை.//


கண்டுபிடித்துவிட்டார்கள். இதுபோன்ற அமைப்புகள் பூமியிலும் உள்ளன. இவை (tectonic faulting) நிலத்தட்டுகளின் நகர்வால் ஏற்படுபவை. பூமியின் கரு கொதிக்கும் பாறைக் குழம்பாக இருப்பதையும் அதன் மீது பல அடுக்குகள் இருப்பதையும் அவை நகர்வதால் நில நடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி போன்றவை ஏற்படுவதையும் நாம் அறிந்துள்ளோம். அதே போல ஒரு காலத்தில் நிலவின் கருவும் பாறைக்குழம்பாக இருந்தது. அப்போது அதன் தட்டுகள் நகர்ந்ததால் இவ்வெடிப்பு ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர் [¹].


//இதற்கு அரபியன் பிளவு என்று பெயரிட்டனர். காரணம், சந்திரன் பிளந்தது என்ற நம்பிக்கை அரபியரிடம் (முஸ்லிம்களிடம்) இருந்தது தான்.//


அரேபியன் பிளவு என்ற பெயர் இருந்ததற்கு எந்த ஆதாரமும் நமக்கு கிடைக்கவில்லை. அதற்கு Rima Ariadaeus ரிமா அரியாடியஸ் என்றுதான் பெயரிடப்பட்டது [¹].


//சந்திரனில் பிளவு ஏதும் இல்லை என்று தற்போது நாசா விஞ்ஞானிகள் கூறுவதாகச் சிலர் இதை மறுக்கின்றனர்.//


தற்போதல்ல. எப்போதுமே சந்திரனில் பிளவு இருப்பதாக நாசா விஞ்ஞானிகள் சொல்லவே இல்லை. அங்கே ஒரு வெடிப்பு இருப்பதை அவர்கள் எக்காலத்திலும் மறுக்கவும் இல்லை [²].


//இப்போது நிலவில் பிளவு தென்படவில்லை என்பதால்//


இப்போதும் அந்த வெடிப்பு அங்கேதான் உள்ளது. தென்படவில்லை என்று யாருமே சொல்லவில்லை. தற்போது நிலவு பெருமளவு குளிர்ந்துவிட்டது. நிலவில் தட்டுகளின் நகர்வுகளும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நடப்பதில்லை. மேலும் நிலவில் காற்றும் இல்லை. இந்நிலையில் ஒரு காகிதத்தை நாம் அங்கே விட்டுவந்தாலும் எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் அது எந்த அசைவும் இல்லாமல் நாம் விட்டபடியே இருக்கும். 


இப்போதும் ரிமா அரியாடியஸ் எனும் வெடிப்பு அங்கேயே உள்ளது [²].


//அப்பல்லோ விண்கலம் மூலம் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய போது எடுத்த புகைப்படங்களும், அதில் காணப்பட்ட பிளவும், அரபியன் பிளவு என்று அதற்கு பெயரிட்டதும், அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட அமெரிக்கன் ரிப்போர்ட் பத்திரிகையில் இந்த விபரம் வெளியிடப்பட்டதும் பொய்யாகாது. அமெரிக்கன் ரிப்போர்ட்டர் பத்திரிகையில் அப்படி ஏதும் வெளியிடப்படவில்லை என்று நாசா மறுக்கவில்லை.//


மொத்தத்தில் இந்த குழப்பத்திற்கு காரணம் மேலே எடுத்துக்காட்டப்பட்ட பத்திதான். ஒரு பத்திரிக்கையில் செய்தி வந்துவிட்டதால் உண்மை என்று நம்பிக்கை கொள்ளப்பட்டுள்ளது. பத்திரிக்கைகளில் வரும் செய்திகள் உண்மையா? நடக்காத எத்தனையோ விஷயங்களை நடந்ததாக செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவற்றையெல்லாம் நம் நம்பிக்கை கொள்வோமா? மேலும் இந்த செய்தி வந்ததாக சொல்லப்பட்ட காலத்தில் சோவியத்-அமெரிக்க பனிப்போர் உச்சத்தில் இருந்தது. நிலவில் மனிதன் சென்றது உண்மையல்ல எனும் வதந்தி பரவியபோது முஸ்லிம்களை கவர்வதற்காக அமெரிக்கர்கள் அவ்வாறு எழுதியிருக்கலாம்.


மேலும் அந்த வெடிப்பை பற்றி சற்று அறிவியல் பூர்வமாக பார்ப்போம்.


அந்த வெடிப்பின் நீளம் = 300 கிமீ [¹].  நிலவின் சுற்றளவு = 10,921 கிமீ. நிலவின் மொத்த சுற்றளவுடன் ஒப்பிடும்போது வெடிப்பின் நீளம் வெறும் 2.75%


இதே போல பூமியில் பிரபலமாக அறியப்பட்ட ஒரு வெடிப்பு சான் ஆண்ட்ரியாஸ் ஃபால்ட். அதன் நீளம் = 1,300 கிமீ [³]. பூமியின் சுற்றளவு = 40,075 கிமீ. பூமியின் மொத்த சுற்றளவுடன் ஒப்பிடும்போது வெடிப்பின் நீளம் 3.25%


நிலவில் இருக்கும் Rima Ariadaeus ரிமா அரியாடியஸ் எனும் வெடிப்பை விட பெரிய வெடிப்பு பூமியில் இருக்கிறது. நிலவின் சுற்றளவில் வெறும் 2.75% நீளத்திற்குதான் ரிமா அரியாடியஸ் உள்ளது. ஆனால் பூமியின் சுற்றளவில் 3.25% அளவுக்கு இருப்பது சான் ஆண்ட்ரியாஸ் ஃபால்ட். நாளை ஒருவர் எங்கள் கடவுள் பூமியை பிளந்து ஓட்டினார் என்று எங்களின் வேத புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது என்றும் அதற்கு ஆதாரம்தான் சான் ஆன்ட்ரியாஸ் ஃபால்ட் என்றும் சொன்னால் நீங்கள் அதை அறிவுடைமை என்பீர்களா? அறியாமை என்பீர்களா?


Aerial-SanAndreas-CarrizoPlain.jpg

Image result for san andreas fault


இதுதான் சான் ஆன்ட்ரியாஸ் ஃபால்ட். ஆப்பிளை அறுத்து ஒட்டவைத்த உதாரணத்திற்கு ரிமா அரியாடியஸ் பொருத்தமாக இருக்குமா? சான் ஆன்ட்ரியாஸ் ஃபால்ட் பொருத்தமாக இருக்குமா?


சான் ஆன்ட்ரியாஸ் வெறும் 1300 கிமீ தான். அது பிரபலம் என்பதால் அதைக் குறிப்பிட்டோம். 5000 கிமீ நீளமுள்ள புவித்தட்டு வெடிப்புகள் உள்ளன.


இதை இவ்வளவு அறிவியலைக் கொண்டு விளக்குவதற்குத் தேவையே இல்லை. பொது அறிவைக்கொண்டுச் சித்தித்தால் போதுமானது. உருண்டை வடிவ ஒரு பொருளை வெட்டி ஒட்டவைத்ததால் ஏற்பட்ட அடையாளம் என்றால் அது அந்த உருண்டை முழுவதும் தெரியும். கிரிக்கெட் பந்தை கற்பனை செய்யுங்கள். அதன் இரு பகுதியையும் இணைத்து இடப்பட்ட தையல் அந்த பந்தின் சுற்றளவு முழுவதும் தெரியும். ஆனால் அல்லாஹ் நிலவை பிளந்து ஒட்டவைத்த தடையம் வெறும் 2.75% சுற்றளவுக்குத்தான் தெரிகிறதா? மொத்த சுற்றளவான 10,921  கிலோ மீட்டருக்கும் அது தெரியவேண்டாமா?


நிலவை பிளந்த அல்லாஹ்வுக்கு அதை தடையம் இல்லாமல் ஒட்டவைக்க இயலும். தடையத்தை விட்டுவைக்க வேண்டும் என்றால் அதை தெளிவான தடையமாக அல்லாஹ் விட்டுவைப்பான். இந்த ரிமா அரியாடியஸ் வெடிப்பு, நிலவை பிளந்ததால் ஏற்பட்டதல்ல என்று ஆசிரியரே நேரில் பார்த்து ஒப்புக்கொண்டால் அல்லாஹ் நிலவை பிளந்ததை மறுத்து காஃபிர் ஆகிவிடுவாரா? அல்லது அப்போலோ புகைப்படத்தைக் கொண்டுதான் அல்லாஹ்வை ஈமான் கொள்ளவேண்டுமா?


அவ்வாறல்ல! நிலவைப் பிளப்பதற்கு ‘குன்’ எனும் கட்டளையே அல்லாஹ்வுக்கு போதுமானது. அதனை எந்தத் தடையமும் இல்லாமல் ஓட்டவைப்பதற்கும் ‘குன்’ எனும் கட்டளையே அவனுக்குப் போதுமானது. அல்லாஹ் நிலவைப் பிளந்தான் என்பதை ஈமான் கொள்வதற்கு நாசாவின் புகைப்படமோ வேறு அறிவியல் சான்றுகளோ நமக்கு தேவையில்லை. ஈமானிய உள்ளம் போதுமானது.


ஆதாரங்கள்


[¹] https://www.nasa.gov/mission_pages/LRO/multimedia/lroimages/lroc_20090928_ariadaeus.html


[²] https://lunarscience.nasa.gov/?question=evidence-moon-having-been-split-two


[³] https://en.wikipedia.org/wiki/San_Andreas_Fault