*வலி உணரும் தோல் - குர்ஆன்*
இறைமறுப்பாளர்கள் நரகத்தில் நெருப்பினால் வேதனை செய்யப்படும்போது கருகிவிடும் அவர்களின் தோல்களை மாற்றுவோம் என்று குர்ஆன் வசனம் 4:56 கூறுகிறது. இவ்வாறு தோல்களை மாற்றுவதற்குக்காரணம் அவர்கள் வேதனையை சுவைக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்றும் அந்த வசனம் கூறுகிறது.
இந்த வசனத்தில்தான் மாபெரும் விஞ்ஞான உண்மை இருப்பதாக பலராலும் உலகளவில் பேசப்படுகிறது.
அதாவது, மனிதனுக்கு வலியை உணர்த்தும் "வலியுணர்த்தி" (Pain receptors) தோலில்தான் இருக்கிறது என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பு உறுதிசெய்யப்பட்ட அறிவியல் கண்டுபிடிப்பை 1400 வருடங்களுக்கு முன்பே குர்ஆன் சொல்லிவிட்டது, ஆகவே இது இறைவேதம்தான் என்று முஸ்லிம்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
இந்த பிரச்சாரத்தை தமிழகத்தில் கொண்டுவந்து சேர்த்தவர் பீஜே.
இவருடைய குர்ஆன் மொழிபெயர்ப்பில் இந்த விளக்கம் இடம்பெற்றிருப்பதால் இதுதான் குர்ஆனின் விளக்கம்! என்பது போன்ற பிம்பம் ஏற்பட்டு அதுதான் உண்மை என்பதுபோல் பிரச்சாரம் செய்யப்படுகிறது. நான்கு மாத கர்ப்பத்தில் ஆட்டுக்கருவும் மனிதக்கருவும் ஒன்றுபோலவே இருக்கும், இமயமலையின் உயரத்திற்கு பூமியின் கீழ் போக முடியாது போன்ற பீஜே அவர்களின் சொந்த சரக்கைப் போல் இந்த 'வலியுணரும் தோல்' என்பது அவருடைய சொந்த சரக்கு அல்ல. இது சர்வதேச சரக்கு.
அறிமுகத்தில் சொல்லப்பட்ட ஸிந்தானியால், அரபுலகத்திற்கு கொண்டுவரப்பட்ட பல ஆய்வாளர்களுள் ஒருவர்தான் தாய்லாந்தைச் சார்ந்த 'தெகதத் தெஜாஸென்' (Tegatat Tejasen) என்பவர்.
இவரிடம் 4:56 வசனத்தைக் காட்டி அதை நரகத்தில் தோலை மாற்றுவதைப் பற்றி கேட்டிருந்தார் ஸிந்தானி. ஆரம்பத்தில் அதை பொருட்டாகக் கருதாத தெஜாஸென் சில வருடங்களுக்குப் பிறகு அந்த வசனத்தை அற்புதம் (Miracle) என்றார். 1983 ஆம் ஆண்டில் ஸிந்தானி குழுவினரால் ரியாத் நகரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மருத்துவ மாநாட்டில் இந்த கட்டுரையை சமர்ப்பித்த தெஜாஸென் அவர்கள் இறுதியாக கலிமைவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றார்.
வலியை உணர்த்தும் அம்சம் தோலில்தான் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டிய தெஜாஸென் இதைத்தான் குர்ஆன் வசனம் கூறுகிறது என்றார். நெருப்பில் தோல் கருகிவிட்டால் வலியை உணரமுடியாது என்பதால்தான் தோலை மாற்றுவதாக குர்ஆன் சொல்கிறது என்றார். இந்த உண்மை 1,400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மனிதரால் சொல்லியிருக்கவே முடியாது என்பதால் இது ஒரு அற்புதம் (Miracle) என்று கூறிய தெஜாஸென் அதன் தொடர்ச்சியாக இஸ்லாத்தை தழுவினார்.
அவர் இஸ்லாத்தை தழுவியதை நாம் விமர்சிக்கப்போவதில்லை. ஏனென்றால், இஸ்லாத்தை ஏற்பதற்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு காரணங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆதிக்க மனப்பான்மை அதிகம் உள்ள பகுதிகளில், முஸ்லிம்கள் ஒரு மனிதனை சமமாக நடத்துவதன் காரணமாகவே இஸ்லாத்தை தழுவிய வரலாறு உண்டு. ஒன்றாக அமர வைத்து உணவு உண்னும் சமத்துவத்தைக் கண்டும் இஸ்லாத்திற்கு வந்தவர்கள் உண்டு.
சமீபத்தில் இஸ்லாத்தை ஏற்ற யுவன் சங்கர் ராஜா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றதற்கு அவர் சொன்ன காரணம் ஏகத்துவவாதிகளைப் பொறுத்தவரைக்கும் ஏற்றுடையதாக இருக்காது. அவருடைய தாயின் மரணத்திற்குப் பிறகு மனம்தளர்ந்து இருந்த நிலையில் பிறப்பு மற்றும் இறப்பு தொடர்பான கேள்விகள் மனதை ஆழ்த்திய நிலையில் நண்பர் ஒருவரிடமிருந்து வந்த வாட்ஸப் புகைப்படம்தான் அவர் இஸ்லாத்தை ஏற்றதற்கு காரணம் என்கிறார். மேகத்தில் அல்லாஹ் என்ற அரபு எழுத்துக்கள் தெரிந்ததால் அதை அற்புதம் (Miracle) என்று கருதி அவர் இஸ்லாத்தை தழுவியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இஸ்லாத்தை தழுவியது அல்லாஹ்வின் நாட்டம். ஆனால், இஸ்லாத்தை தழுவியதற்கு அவர் சொன்ன காரணத்தையே பிரச்சாரம் செய்து நாம் பிறமக்களை இஸ்லாத்தின்பால் அழைக்க முடியாது. இதுபோலவே, தெஜாஸென் அவர்களுக்கு 4:56 வது வசனத்தில் அற்புதம் (Miracle) இருப்பதாகத் தோன்றியது அல்லாஹ்வுக்கும் அவருக்கும் உரியது. அதை வைத்து பிறமக்களை இஸ்லாத்தின்பால் அழைக்க முடியாது.
அந்த வசனம் தோலை மாற்றுவதைப் பற்றி பேசுகிறது. வலியை உணர்வதற்காகத்தான் அல்லாஹ் தோலை மாற்றுகிறான் என்று தெஜாஸன் கூறுகிறார். இத்தகைய அர்த்தத்தை கொடுத்தால், தோலில் மட்டுமே வலியுணர்ச்சி இருக்கிறது என்பதைப் போலவும்,தோலுக்கு உள்ளே வலியே இருக்காது என்பதைப் போன்ற தோற்றமும் ஏற்பட்டுவிடுகிறது. அப்படியென்றால், தோலில் எந்த பாதிப்பும் ஏற்படாமல் எலும்பு முறியும்போது வலியை எது உணர்கிறது? தற்கொலை செய்யும் அளவிற்கு வயிற்று வலி ஏற்படுவதை எது உணர்கிறது? போன்ற கேள்விகளுக்கு தோலை மட்டும் முன்னிறுத்தி பதில் அளிக்க முடியாது. தெஜாஸன் அவர்கள் தவறாகக் கூறியதை இஷ்டத்திற்கு புரிந்து கொண்டு குர்ஆனின் வசனத்திற்கு தேவையற்ற அறிவியல் விளக்கத்தை கொடுக்கின்றனர்.
தெஜாஸன் அவர்கள் தோலில் உள்ள வலியுணர்த்தி (Pain Receptors) பற்றி பேசுகிறார். நூறு வருடங்களுக்கு முன்பு பெயரிடப்பட்ட வலியுணர்த்தி பற்றி அவர் பேசுகிறார். அவர் சொல்வதை நாம் புரிந்துகொள்வதற்கு வலி குறித்த புரிதலைப் பெறுவோம்.
உடலில் ஏற்படும் வலியை காலம் காலமாக மனிதன் உணர்ந்துகொண்டுதான் இருக்கிறான். மனித உடலின் இயக்கத்தை அறிவியல் துணை கொண்டு மனிதன் ஆய்வு செய்து வருகிறான். அத்தகைய ஆய்வில் அவன் கண்டுபிடிக்கும் புதிய விஷயங்களுக்கு தனித்தனியாக பெயரிடவும் செய்கிறான். உதாரணமாக, உடலில் இரத்தம் ஓடுகிறது. அதிலேயே பல வகை இருப்பதை அறிந்து கொண்டு அதை A, B, O என பெயரிட்டு அழைக்கிறான். மேலும், இரத்தத்தின் அணுக்களை தனியாக அடையாளம் கண்டு வெள்ளையணு மற்றும் சிகப்பணு என்றும் பெயரிட்டிருக்கிறான். இதுபோன்று மனித உடலின் பல இரகசியங்களை கண்டுபிடித்து அவற்றிற்கு பெயரிட்டும் வருகிறான் மனிதன்.
மனித உடலுக்கு அனைத்து கட்டளைகளும் மூளையில் இருந்தே பிறப்பிக்கப்படுகின்றன. மனித உடலில் நடப்பதை மூளைக்கு செய்தி (Signal) அனுப்பும் பல அம்சங்கள் மனித உடலில் உள்ளதை கண்டுபிடித்து வருகிறான் மனிதன். மனிதன் தேடிய/தேடும் பல விஷயங்களுள் ஒன்றுதான் உடலில் உணரப்படும் வலியைப் குறித்த செய்தி மூளைக்கு எப்படி கடத்தப்படுகிறது என்பது. அதற்கான விடையை மனிதன் கண்டுகொண்டான்.
உடலில் வலி ஏற்படுவதை மூளைக்கு உணர்த்தும் ஒரு அமைப்பு உடலுக்குள் இருப்பதை கண்டுகொண்டான். அவற்றிற்கு வலியுணர்த்திகள் (Pain receptors) என்று பெயரிட்டான். [லத்தீன் மொழியில் இது Nociceptors எனப்படுகிறது] இந்த வலியுணர்த்திகள் சதை(muscle), மூட்டு(joints), எலும்பு (bone) மற்றும் உள்ளுறுப்பு (viscera) என அனைத்திலும் இருப்பதை மனிதன் கண்டுகொண்டான். இதில் ஒருகட்டமாகத்தான் இந்த வலியுணர்த்திகள் மனிதனின் தோலிலும் (Skin) இருக்கின்றன என்பதை மனிதன் அறிந்து கொண்டான். வலியை உணரும் அமைப்பு மனித உடலில் இருக்கிறது. இதில், தோலிலும் இருக்கிறது என்பது கூடுதல் தகவல் மட்டுமே தவிர தோலில் மட்டுமே வலியுணரும் தன்மை இருக்கிறது என்பது தவறான புரிதல். இந்த தவறான புரிதலை குர்ஆனில் தினிப்பது குர்ஆனை விமர்சிக்கும் மேற்குலகிற்கு நாமே வழி ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
மேலும், தோலில் பல உணர்த்திகள் (receptors) இருக்கின்றன. தொடு உணர்த்தி, குளிர் உணர்த்தி, வெப்ப உணர்த்தி என உணர்த்திகள் இருக்கின்றன. இவற்றுள் ஒரு உணர்த்திதான் வலியுணர்த்தி (Pain receptors). தோலின் சிறப்பம்சமாக Thermoreceptor எனும் வெப்பத்தால் ஏற்படும் வலியை உணரும் வலி உணர்த்திகள் தோலில் அதிக அளவில் இருக்கின்றன. என்பது உண்மை என்றாலும் உடலின் வேறு பகுதிகளிலும் Thermoreceptor காணப்படுகின்றன
உடலில் நெருப்பு பற்றி எரிந்தால் இந்த உணர்த்திகள் ஒவ்வொன்றாக அழியத் தொடங்கும். தீக்காயத்தின் ஆழத்தைப் பொறுத்து வலியுணர்த்திகளும் அழியும். தீக்காயம் எற்பட்டவரிடம் அவரின் காயத்தின் மீது ஊசியால் குத்தி இந்த வலியுணர்த்திகள் இருக்கிறதா அல்லது இறந்துவிட்டனவா என்பதை மருத்துவர்கள் தெரிந்துகொள்கின்றனர். அவ்வாறு ஊசியால் குத்தி அவருக்கு வலி தெரியவில்லை என்றால் உடல் முழுவதும் வலியுணர்ச்சி இல்லை என்று அர்த்தமாகாது. தோலில் மட்டும்தான் வலியுணர்ச்சி இல்லை என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
இப்போது 4:56 வது வசனத்தைப் பார்ப்போம்.
நரகத்தில் வேதனையை தொடர்ந்து சுவைப்பதற்காக தோல்களை மாற்றுவோம் என்று என்று வசனம் கூறுகிறது. தோலில் மட்டுமல்லாது உடல் முழுவதுதிலும் வலியுணர்த்திகள் இருக்கின்றன என்பதைப் பார்த்தோம். அப்படியென்றால், உடல் முழுவதையும் எரிக்கச்செய்து உடல் முழுவதும் வலியை அணுபவிக்கச் செய்யாமல் வெறும் தோலில் மட்டும் வலியை உணரச்செய்வதாக குர்ஆன் வசனம் கூறுவது ஏன்? அதாவது, தோல், சதை, எலும்பு மற்றும் உள்ளுறுப்புகள் என அனைத்தையும் எரித்து வலியை முழுமையாக உணரச்செய்து தண்டனை தராமல் சும்மா மேலோட்டமாக தோலை மட்டும் மாற்றி வெறுமனே தோலில் மட்டும் வலியை உணரச் செய்வது ஏன்? நரகத்தில் வேதனை செய்யப்படுபவர்களின் தோல்களை மாற்றுவோம் என்று குர்ஆன் வசனம் 4:56 கூறுகிறது. அவ்வாறு தோல்களை மாற்றுவதற்கு ஒரு காரணமும் இந்த வசனத்தில் சொல்லப்படுகிறது.
"லி யதூக்குல் அதாப்" (لِيَذُوقُوا الْعَذَابَ)
என்பதுதான் அந்த காரணம்.
இது, உடலின் வலியைப் பற்றியோ அல்லது வலியை தோல்தான் உணருகிறது என்பதை பற்றியோ பேசுகிறதா என்பதை முதலில் பார்ப்போம். இதில் இருக்கக்கூடிய வார்த்தைகள் இரண்டு.
(1) தூக் (ذوقُ)
(2) அதாப் (الْعَذَابَ)
** முதலாவது வார்த்தை குர்ஆனில் 63 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
** இரண்டாவது வார்த்தை குர்ஆனில் 322 இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
¶¶ 'தூக்' (ذوقُ) என்ற வார்த்தைக்கு 'சுவைத்தல்' என்பதுதான் நேரிடையான அர்த்தம்.
"... ۚ فَلَمَّا ذَاقَا الشَّجَرَةَ..."
"...அவ்விருவரும் அம்மரத்தைச் சுவைத்த போது..." (7:22)
ஆனால், இது 'அனுபவித்தல்' என்ற அர்த்தத்தில் இலக்கிய ரீதியாகவும் பயன்படுத்தப்படும்.
"...أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ *فَذُوقُوا* فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ" (35:37)
"...படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ்நாளை அளித்திருக்கவில்லையா? எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா? எனவே *அனுபவியுங்கள்!* அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை'' (என்று கூறப்படும்)" (35:37)
மரத்தில் உள்ள கனியை சுவைப்பதைப் பற்றி பேசும் அதே வார்த்தைதான் நரகத்தில் தண்டனையை அனுபவிப்பதை குறிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
¶¶ 'அதாப்' (الْعَذَابَ) என்ற வார்த்தைக்கு 'தண்டனை' என்பதுதான் நேரடியான பொருள். இது 'வேதனை' என்ற அர்த்ததிலும் பயன்படுத்தப்படும்.
ஒரே வசனத்தில் உள்ள அதாப் என்ற வார்த்தையை தண்டனை என்றும் வேதனை என்றும் மொழிபெயர்ப்பு இருக்கிறது.
உதாரணம்...
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَاقِعٌ (5:27)
"உமது இறைவனின் தண்டனை நிகழ்வதாகும்" (பீஜே)
"நிச்சயமாக உம்முடைய இறைவன் (விதித்திருக்கும்) வேதனை சம்பவிக்கும்." (ஜான் டிரஸ்ட்)
"(நபியே!) நிச்சயமாக உங்களது இறைவனின் வேதனை (அவர்களுக்கு) வந்தே தீரும்." (அப்துல் ஹமீது பாகவி)
"உம்முடைய இறைவன் தரும் வேதனை நிச்சயம் வந்தே தீரும்." (IFT)
"(நபியே!) நிச்சயமாக உமதிரட்சகனின் வேதனை (அவர்களுக்கு) நிகழும்" (சவூதி மொழிபெயர்ப்பு)
ஆக, 'அதாப்' (الْعَذَابَ) என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் 'தண்டனை' என்பதுதான். ஆனால், அது 'வேதனை' என்றும் மொழிபெயர்க்கப்படுகிறது.
"வலியும் வேதனையும் அவன் அவனுக்கு வந்தாதான் தெரியும்" என்று தமிழில் சொல்வார்கள். இங்கு வலி என்பதும் வேதனை என்பதும் ஒன்றுபோலவே பாவிக்கப்படுவதைப்போல் அதாப் என்ற அரபு வார்த்தையை 'வேதனை' என்று மொழிபெயர்த்துவிட்டு பின்னர் அதை 'வலி' என்ற அர்த்தத்தில் விளக்கம் கொடுப்பதுதான் இந்த வசனத்தை புரிந்து கொள்வதில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
'அதாப்' என்ற வார்த்தையை வேதனை என்று மொழிபெயர்த்தாலும் அது தண்டனையைத்தான் குறிக்குமே தவிர உடலின் வலியைக் (Physical pain) குறிப்பதாக ஆகாது.
குர்ஆன் 4:56 வது வசனத்தில் தோல்களை மாற்றுவதற்கு சொல்லப்படும் காரணம்
"லி யதூக்குல் அதாப்" (لِيَذُوقُوا الْعَذَابَ)
என்பதுதான்.
இவ்வாறாக தோல்கள் மாற்றப்படுவதற்குக் காரணம் அவர்கள் "தண்டைனையை அனுபவிக்க வேண்டும்" என்பதற்காகத்தான் என்று குர்ஆன் வசனம் சொல்கிறது. இந்த வசனத்தை ''வேதனையைச் சுவைப்பதற்காக'' என்றும் மொழிபெயர்க்கலாம்.
"அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென" (ஜான் டிரஸ்ட்)
"அவர்கள் வேதனையைத் தொடர்ந்து அனுபவிப்பதற்காக" (அப்துல் ஹமீது பாகவி)
"வேதனையை அவர்கள் நன்கு சுவைத்துக் கொண்டேயிருப்பதற்காக" (IFT)
"அவர்கள், வேதனையைச் (சதா) அனுபவிப்பதற்காக" (சவுதி மொழிபெயர்ப்பு)
அதாவது, நரகத்து வேதனையைப் பற்றி பேசும் பிற வசனங்களுக்கு என்ன அர்த்தம் கொடுக்கப்பட்டதோ அதையே இந்த வசனத்திற்கும் அர்த்தமாக கொடுத்துள்ளனர் தமிழ் மொழிபெயர்ப்பாளர்கள்.
ஆனால், இதை தெஜாஸென் அவர்களின் புரிதலோடு இணைத்து விளக்கம் கொடுத்து அதற்கேற்றவாறு மொழிபெயர்ப்பு செய்தவர் பீஜே.
தோலில் வலியுணரும் உணர்த்திகள் இருப்பதை மனதில் வைத்து "அவர்கள் வேதனையை உணர்வதற்காக" என்று பீஜே மொழிபெயர்த்திருக்கிறார்.
வேதனை என்பதும் வலி என்பதும் ஒன்றுதான் என்பதுபோன்ற புரிதல் இருப்பதை பயன்படுத்தி வித்தை காட்டுகிறார் பீஜே.
//தோல்களில் தான் வேதனை உணரும் நரம்புகள் உள்ளன வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன.// (பீஜே)
குர்ஆனில் சொல்லப்படும் அதாப் எனும் இறை தண்டனையை வெறுமனே வேதனை என்று மொழிபெயர்த்து அந்த வேதனையை உடவின் வலியுடன் முடிச்சுபோட்டு குர்ஆனில் அறிவியல் பூச்சாண்டி காட்டுகிறார் பீஜே.
தூக் (ذوقُ) மற்றும் அதாப் (الْعَذَابَ) எனும் வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும் பிற வசனங்களை 'வேதனையை சுவையுங்கள்' என்றும் 'வேதனையை அனுபவியுங்கள்' என்றும் இயல்பாக மொழிபெயர்த்திருக்கும் பீஜே அவர்கள், 4:56 வது வசனத்தில் மட்டும் 'வேதனையை உணர்வது' என்ற ரீதியில் மொழிபெயர்த்துவிட்டு அந்த வேதனையை உடலின் வலியோடு முடிச்சு போடுவதெல்லாம் வேற லெவல்.
தீர்ப்புநாளின் தண்டனையின் வேதனையை அவர்கள் அனுபவிப்பதற்காக அல்லாஹ் தோலை மாற்றுவதாகச் சொல்கிறான். கியாமத் நாளில் நடக்கப்போவதை அல்லாஹ் அந்த வசனத்தில் கூறுகிறான். இதற்கு அறிவியல் சாயம் பூசுபவர்கள் குர்ஆன் 41:21 வது வசனத்திற்கு எந்த அறிவியலை ஆத்துவார்கள்!
"எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்?'' என்று அவர்கள் தமது தோல்களிடம் கேட்பார்கள்..." (41:21)
தோல்களிடம் பேசுவார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. தோல்களிடம் எப்படி பேச முடியும் என்று அறிவியல் பாடம் நடத்துவார்களா!
மறுமை நாள் என்பதே அறிவியலுக்கு ஆகாதது. ஆகாத அந்த அறிவியலை வைத்து மறுமைநாள் சம்பவங்களுக்கு விளக்கம் கொடுத்து அதன் மூலம் குர்ஆனை இறைவேதம் என்று நிறுவுவது கேலிக்கூத்து. அறிவியலாளர்கள் எதைக் கண்டுபிடித்தாலும் அது குர்ஆனில் இருக்கிறது! எனவே இது இறைவேதம்!! என்று வாதிடும் அறிவியல் முஸ்லிம்கள், குர்ஆனில் இருக்கும் அறிவியலில் ஒன்றே ஒன்றையாவது எடுத்துக்காட்டி அந்த அறிவியலை நிரூபித்துள்ளார்களா? அதாவது, கண்டுபிடிக்கப்பட்ட அறிவியலை குர்ஆன் வசனத்திற்கு பொருத்தி விளக்கம் தருபவர்கள், குர்ஆன் வசனங்களை படித்து ஆராய்ந்து ஒரே ஒரு அறிவியல் செய்திகளையாவது புதிதாக கண்டுபிடித்திருக்கிறார்களா?
விமானம் ஓட்டும் அறிவியல் பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பே எங்களது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று வாதிடும் பிற மதத்தவர்களுக்கும் இந்த அறிவியல் முஸ்லிம்களுக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? நம்முடைய மக்களிடம் ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. உன்னுடைய புரிதலில் தவறு இருக்கிறது என்று கூறி அந்த தவறை சுட்டிக்காட்டினால் அதை திருத்திக்கொள்ள முனையாமல் சரியான புரிதலை நீ கூறு என்பார்கள். அதுபோலவே, குர்ஆன் வசனத்திற்கு நீங்கள் தரும் விளக்கம் பொருத்தமாக இல்லையே! என்று கேட்டோமேயானால் சரியான விளக்கத்தை நீ கூறு!! என்று கூறிவிடுகிறார்கள். குர்ஆன் வசனங்களைப் பொறுத்தவரைக்கும் சரியான விளக்கம் இதுமட்டும்தான் என்று எதையும் கூறிவிடமுடியாது. (நபிகளார் விளக்கியதைத் தவிர்த்து) வசனத்தைப் படிப்பவரின் பார்வையில்தான் விளக்கம் பெறப்படுகிறது. அந்த விளக்கங்களைத்தான் நாமும் தப்ஸீர்களாக படித்து வருகிறோம். அந்த வகையில் குர்ஆனின் 4:56 வது வசனத்திற்கு நமது பார்வையில் விளக்கம் பெறுவோம். குர்ஆன் 4:56 வது வசனத்தை நமது பார்வையில் பார்ப்போம்.
அதற்கு முன்பாக தோலில் வலியுணரும் அம்சம் இருப்பதாக கூறப்படும் அறிவியல் நம்பிக்கையில் ஒரு தெளிவான நிலையைப் பெறுவோம். அறிவியல் என்பதும் ஒரு நம்பிக்கைதான். அது நம்பப்படும் காலத்தில் அதுமட்டும்தான் சரியானது என்ற நம்பிக்கை நிலவும். அறிவியல் தனது நம்பிக்கையை மாற்றிக்கொள்ளும்போது அந்த புது நம்பிக்கையே சரியான நம்பிக்கையாக மாறிவிடும். இந்த உலகம் உருவானது தொடர்பாக பல நம்பிக்கைகள் அறிவியல் உலகத்தில் இருந்து வருகின்றன. அதில் ஒரு கட்டமாகத்தான் Big Bang தியரி என்ற ஒன்றை அறிவியல் தற்போது நம்புகிறது. இந்த நம்பிக்கை சுமார் 100 வருடங்களாக இருக்கும் நம்பிக்கை.
பெரிய ஒரு வெடிப்பில் உருவானதுதான் இந்த பிரபஞ்சம் என்பதுதான் Big Bang தியரி. இந்த அறிவியல் கருத்தே பிரபஞ்சம் உருவானது தொடர்பான சரியான கருத்தாக நம்பப்படுகிறது. உடனேயே, இந்த அறிவியல் நம்பிக்கையை குர்ஆனில் தேடி ஒரு வசனத்தை கண்டுபிடித்து அதற்கும் அறிவியல் சாயம் பூசிவிட்டனர்.
"வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம்..." (21:30)
இந்த வசனத்திற்குதான் அறிவியல் சாயம் பூசியிருக்கின்றனர். வெடிச்ச வெடிப்பில் வானமும் பூமியும் இரண்டாக கழண்டுவிட்டன என்று கதையளக்கின்றனர். இவர்களுடைய அந்த கதையைத்தான் குர்ஆன் வசனம் கூறுகிறது என்றும் கூறுகின்றனர். நூறு வருடங்களுக்கு முன்பு Steady state theory என்பதுதான் அறிவியல் நம்பிக்கையாக இருந்தது. அதாவது, இந்த பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை என்பதுதான் அந்த தியரி. அந்த தியரி சரியான நம்பிக்கையாக கருதப்பட்ட காலத்தில் மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கு என்ன விளக்கம் கொடுத்திருப்பர்? அறிவியலின் ஒரு கருத்தை குர்ஆனின் வசனத்துடன் பொருத்தி விளக்கம் கூறுவதில் தவறில்லை. ஆனால் அந்த அறிவியல் கருத்தை மட்டும்தான் வசனம் கூறுகிறது என்பது தவறு.
Big Bang தியரியை தூக்கி சாப்பிடும் இன்னொரு தியரி நாளைக்கு வரலாம். அப்போது, குர்ஆன் வசனத்திற்கு ஏற்கனவே கொடுத்த விளக்கங்களை மாற்றிக்கொள்ள நேரிடும். இப்படி மாற்றிக்கொள்வதில் தவறில்லை. ஆனால், குர்ஆன் வசனம் குறிப்பிட்ட அறிவியல் கருத்தை மட்டும்தான் பேசுகிறது என்று கூறுபவர்களின் கூற்று மட்டுமே இங்கு விமர்சிக்கப்படுகிறது. தோலில் வலியுணரும் அம்சம் இருப்பது 100 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தான் 4:56 வசனம் குறிப்பிடுகிறது என்று சொன்னால் அதற்கு முன்பாக அந்த வசனத்திற்கு என்ன விளக்கம் கொடுத்து வந்தனர்?
வலியை உணர்வதற்காகத்தான் தோல்கள் மாற்றப்படுகிறது என்ற அர்த்தம் குர்ஆன் 4:56 வது வசனத்தில் இல்லை. அப்படி இருந்திருந்தால், மருத்துவ கள் வலியைப் குறித்த புரிதலை அடைவதற்காக பல நூறு வருடங்கள் போராடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம்கள் அவர்களுக்கு எடுத்துக்கூறியிருப்பார்கள். தோலில் வலியுணரும் அம்சம் இருக்கிறது என்ற கண்டுபிடிப்பு, வலி தொடர்பான அறிவியல் ஆராய்ச்சியின் ஒரு பகுதிதானே தவிர இறுதி அல்ல. இதையே இறுதியாக நினைத்து இறுதி வேதத்தை கேலிக்கூத்தாக்கும் அறிவியல் முஸ்லிம்களின் அறிவிலித்தனம் மட்டுமே இங்கு விமர்சிக்கப்படுகிறது.
இறுதிப் பகுதிக்கு நாம் செல்வோம்.
குர்ஆன் 4:56 வது வசனம் நமது பார்வையில்...
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا
كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُم بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا (4:56)
"நமது வசனங்களை மறுப்போரை பின்னர் (நரக)நெருப்பில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் தண்டைனையை அவர்கள் அனுபவிப்பதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (4:56)
'தண்டனையை அவர்கள் அனுபவிப்பதற்காக' என்றோ, அல்லது 'வேதனையை அவர்கள் சுவைப்பதற்காக' என்றோ இரண்டு விதமாகவும் மொழிபெயர்க்க முடியும். இங்கு பேசப்படும் தண்டனை என்பது வெறும் உடம்பு வலி (Physical pain) அல்ல. இறை தண்டனையைப் (Devine punishment) பற்றி பேசுகிறது. அதாவது, குர்ஆனின் வசனங்கள் முழுவதும் இறைவனின் தண்டனையைப் பற்றி பேசுவதுபோலவே 4:56 வசனமும் இறை தண்டனையைப் பற்றியே பேசுகிறது. இறைவனின் மறுமை நாள் தண்டனையின் அளவை நம்மால் மதிப்பிட முடியாது.
"அந்நாளில் அவன் தண்டிக்குமளவுக்கு யாரும் தண்டிக்க முடியாது."(89:25)
இத்தகைய தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நரகநெருப்பில் கருகும் அவர்களின் தோல்களை அல்லாஹ் மாற்றுவதாக குர்ஆன் 4:56 வது வசனம் கூறுகிறது. நரகநெருப்பில் போடப்படுவதே தண்டனைதான் எனும்போது, அவர்களுக்கு தோல்கள் மாற்றப்படுவது தண்டனையை அனுபவிக்கத்தான் என்று கூடுதலாக கூறுவதற்கு என்ன தேவை இருக்கிறது? இந்த கேள்விக்கு பதில் தேடுவதற்கு முன்பு சில விஷயங்களைப் பார்ப்போம்.
"நாங்களும், எங்கள் முன்னோர்களும் மண்ணாக ஆகிவிட்டால் வெளிக்கொண்டு வரப்படுவோமா?'' என்று மறுப்போர் கேட்கின்றனர்." (27:67)
"பூமிக்குள் மறைந்த பின் புதுப்படைப்பை நாங்கள் பெறுவோமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர்..." (32:10)
"முதல் தடவை மரணிப்பது தவிர வேறு இல்லை. நாங்கள் எழுப்பப்படுவோராக இல்லை;..." (44:36)
"நீங்கள் முழுமையாக உருக்குலைந்த பின் புதிய படைப்பைப் பெறுவீர்கள் எனக் கூறும் ஒரு மனிதரைப் பற்றி நாம் உங்களுக்குக் கூறட்டுமா?'' என்று (ஏகஇறைவனை) மறுப்போர் கேட்கின்றனர். (34:7)
மறுப்பாளர்கள், மரணத்திற்குப் பிறகு உள்ள வாழ்க்கையை மறுக்கின்றனர். அதற்குக் காரணம் தங்களுடைய உடம்பு முற்றிலும் அழிந்து போய்விடும் நிலையில் அதே உடலை மீண்டும் படைக்க முடியாது என்று நினைக்கின்றனர்.
"அவன் முதலில் படைக்கிறான். மீண்டும் படைக்கிறான்." (85:13)
"கல்லாகவோ, இரும்பாகவோ, அல்லது உங்கள் உள்ளங்களில் பெரிதாகத் தோன்றும் ஒரு படைப்பாகவோ ஆகுங்கள்!'' (எப்படி ஆனாலும் உயிர்ப்பிப்பான்) என்று கூறுவீராக! "எங்களை எவன் மீண்டும் படைப்பான்?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "முதல் தடவை உங்களை யார் படைத்தானோ அவன் (மீண்டும் படைப்பான்)'' என்று கூறுவீராக!..." (17:51)
"உங்கள் அனைவரின் மீளுதல் அவனிடமே உள்ளது. (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவனே ஆரம்பத்தில் படைத்தான். பின்னர், நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தவர்களுக்கு கூலியை நியாயமாக வழங்குவதற்காக மீண்டும் படைக்கிறான். (ஏகஇறைவனை) மறுப்போருக்கு அவர்கள் மறுத்துக் கொண்டிருந்ததால் கொதிக்கும் பானமும், துன்புறுத்தும் வேதனையும் உண்டு." (10:4)
இறந்து மக்கிப்போய்விட்ட மனிதர்களை நற்கூலி தருவதற்காகவும் தண்டனை தருவதற்காகவும் அல்லாஹ் மீண்டும் படைப்பான் என்று மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன. இதில், நற்கூலி பெறுபவர்களைப் பற்றி இங்கு பேச்சு இல்லை. ஏனென்றால் அவர்கள் சுவர்க்கத்தில் நிரந்தரமாக இன்பத்தை அனுபவித்துக்கொண்டு இருப்பார்கள்.
நரக நெருப்பில் நிரந்தரமாக இருப்பவர்கள் அதில் எப்படி தண்டனையை அனுபவிப்பார்கள்?
மாற்றுமத நண்பர் ஒருவருடன் நடந்த உரையாடல் மூலம் இதில் புரிதலை ஏற்படுத்த முனைகிறேன்.
இஸ்லாம் தொடர்பான விஷயங்களை அறிந்திருக்கும் மாற்றுமத நண்பர் ஒருவரிடம் தாவா செய்யும் நோக்கில் சில சமயம் பேசுவதுண்டு. அதுபோன்ற சமயங்களில் அவர் பதிலுக்கு என்னை மடக்குவார்.
அல்லாஹ்வை நம்பும் நீயும் இறக்கப்போகிறாய்! அல்லாஹ்வை நம்பாத நானும் இறக்கப்போகிறேன்!! உன்னை புதைத்து விடுவார்கள், என்னை எரித்துவிடுவார்கள். அதற்குப் பிறகு என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது என்றார்.
தீர்ப்பு நாளில் நாம் மீண்டும் படைக்கப்பட்டு எழுப்பப்படுவோம் என்றேன்.
அப்படியே நடப்பதாக வைத்துக்கொண்டாலும்,
உனக்கென்ன பாய்! நீ சொர்க்கத்துல இருப்ப! நான் நரகத்துல இருப்பேன் என்றார்.
இங்குதான் அவர் கூடுதலாக ஒன்றைச் சொல்லி என்னை மடக்கினார்.
பாய், சொர்க்கத்துல நீதான் ரொம்பநாள் வாழ்வாய்! நரகத்துல எனக்கு ஒரே ஒருதடவைதான் தண்டனை இருக்கும். ஏன்னா, சுடுகாட்டு நெருப்புக்கே நான் சாம்பலாயிடுவேன், உங்க அல்லா சொல்ற நரகமோ பயங்கரமானது. அதில் நான் கருகி சாம்பலாகிடுவேன். ஆக, எனக்கு தண்டனை கிடைச்சுக்கிட்டே இருக்கும்கிறதை நம்பமாட்டேன் என்று என்னை மடக்கினார்.
நரக நெருப்பில் நீங்க சாம்பலானாலும் கூட அல்லாஹ் உங்களை படைப்பான், So உங்களுக்கு தண்டனை கிடைச்சுக்கிட்டே இருக்கும் என்று கூறினேன். அப்படியா! என்று சிரித்துவிட்டு அவரும் போய்விட்டார்.
ஆனால், நான் சொன்னது தவறு என்பதை பிறகுதான் உணர்ந்தேன்.
அல்லாஹ் நம்மை படைத்திருக்கிறான். நியாயத்தீர்ப்புக்காக நம்மை மீண்டும் படைப்பான். அதற்குப் பிறகும் அழித்துவிட்டு படைப்பதாக குர்ஆன் வசனம் ஏதும் கூறவில்லை. அப்படியென்றால், நரக நெருப்பில் சாம்பலாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் படைக்கப்படுவார்கள் என்று நான் சொன்னது தவறு. அப்படி எடுக்க முடியாது. அதேநேரத்தில், நரக நெருப்பு சாம்பலாக்காது என்றும் கூற முடியாது. ஏனென்றால் அது மிச்சம் கூட எதையும் வைக்காது என்று குர்ஆன் வசனம் கூறுகிறது.
"அவனை ஸகர் (எனும் நரகி)ல் கருகச் செய்வேன். ஸகர் என்றால் என்ன என்பது உமக்கு எப்படித் தெரியும்?. அது மிச்சம் வைக்காது. விட்டும் வைக்காது. (74: 26,27,28)
அதாவது, நரகத்தின் நெருப்பு எதையும் மிச்சம் வைக்காது என்கிறது. அப்படியென்றால் தண்டனை பெறும் மனிதனை மட்டும் மிச்சம் வைக்குமா? அவனையும் கருகிச் சாம்பலாக்குவது நரக நெருப்பின் தன்மைக்கு எளிதானதே. ஆனால், அவனை அப்படி சாம்பலாக்கி மீண்டும் மீண்டும் அல்லாஹ் படைப்பதில்லை என்பதை முந்தைய வசனங்களில் பார்த்தோம். நரக நெருப்பில் நிரந்தரமாக இருக்க வேண்டும் ஆனால், கருகி சாம்பலாகிவிடக்கூடாது. அல்லாஹ்வின் தண்டைனையை அனுபவித்துக்கொண்டே இருக்க வேண்டும். அப்படியென்றால் அந்த தண்டனை எந்த மாதிரி இருக்கும்?
அவர்களுடைய தோல்களை மாற்றுவோம் என்று அல்லாஹ் சொல்கிறான். அதாவது, நெருப்பானது எலும்புகளை எரித்து சாம்பலாக்குவதாக இருந்தால் சதையை எரிக்க வேண்டும். சதையை எரிப்பதாக இருந்தால் முதலில் தோல்களை எரிக்க வேண்டும். தோல்களை எரித்தவுடனேயே அதை மாற்றிவிட்டால் அதன் பிறகு அது சதைகளையோ எலும்புகளையோ எரிக்க முடியாது. இதனால், எரிக்கப்படுவன் சாம்பலாக மாட்டான். சாம்பலாகாததால் அவனை மீண்டும் மீண்டும் படைக்கத்தேவையுமில்லை. யுகம் யுகமாய் நெருப்பிலேயே கிடப்பான். சாம்பலாகவும் மாட்டான். அல்லாஹ்வின் தண்டனையை தொடர்ந்து அனுபவித்துக்கொண்டேயிருப்பான். அப்படீன்னா வெறும் தோல்களுக்கு மட்டும்தான் அல்லாஹ்வின் தண்டனையா என்ற கேள்வி எழும். தோலில்தான் வலியை உணரமுடியும் என்று அறிவியல் முஸ்லிம்கள் கூறுவது, வெறும் தோல்களில் மட்டும்தான் வேதனை இருக்கும் என்ற அர்த்தத்தை கொடுக்கிறது. ஏனென்றால் தோல்களுக்கு உள்ளே வேதனை உணரப்படாது என்பதுதான் அவர்களின் புரிதல்.
அல்லாஹ் சொல்கிறான், நரக நெருப்பு அவர்களின் இதயங்களிலும் வேதனையைத் தரும் என்று குர்ஆன் 104: 6,7 வசனங்கள் கூறுகின்றன.
"அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும்." (ஜான் டிரஸ்ட்)
"அது அல்லாஹ்வின் நெருப்பு; அதி உக்கிரமாக மூட்டப்பட்டிருக்கின்றது;
இதயங்கள் வரைச் சென்று பரவுகின்றது;" (IFT)
"அது எத்தகையதென்றால், (தேகத்தில் பட்டவுடன்) இதயங்கள் மீது சென்றடையும்" (சவூதி மொழிபெயர்ப்பு)
உடல் சாம்பலாகிவிடாமல் தோல்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும் அதேநேரத்தில் அல்லாஹ்வின் தண்டனையை அவர்கள் உடல் முழுவதும் அனுபவித்துக்கொண்டேயிருப்பார்கள். இது குர்ஆனின் 4:56 வது வசனத்திற்கு எடுக்க முடிந்த விளக்கம்.
தோல்களில் மட்டும்தான் வலியுணர முடியும் என்றும் அதனால்தான் அல்லாஹ் தோல்களை மாற்றுகிறான் என்றும் சுயவிளக்கம் கொடுக்கும் அறிவியல் முஸ்லிம்கள் கூறுவதை வைத்துப்பார்த்தால் தேவையில்லாமல்தான் இதயங்களை நோக்கி நெருப்பை அனுப்புகிறானா அல்லாஹ் என்ற கேள்வி வரத்தான் செய்யும்.
அறிவியலை மறுமை நாளில் பொருத்திப்பார்ப்பதின் விபரீதத்தை ஒரு உதாரணத்தின் மூலம் பார்த்தோமேயானால் இந்த அறிவியல் விபரீதத்தை குர்ஆனில் ஒப்பிடவே மாட்டோம்.
நரகத்தில் நெருப்பு எரியும். நெருப்பு ஆக்ஸிஜனை எரித்துஎரியும். நெருப்பு சூழ்ந்து இருக்கும்போது ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதால் ஒருவனால் மூச்சுவிட முடியாது. நரகத்தில் தொடர்ந்து மூச்சுவிட முடியாத நிலையில் அவன் செத்துவிடுவான். செத்தவன் எங்கே வலியை உணரப்போகிறான்! வலியையே உணராதவனுக்கு தோலை மாற்றுவது தேவையற்ற வேலைதானே!!
இம்மையின் நிறைவுபெறாத அறிவியலை வைத்து மறுமை நாள் நிகழ்வுகளுக்கு விளக்கம் கொடுப்பது அறிவுடைமை அல்ல.