QSF26. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்கும் என குர்ஆன் சொல்கிறதா?

இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்

ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்

அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://istafseer.blogspot.com/p/blog-page.html

QSF ஆய்வுக்குழு

QSF26. விண்வெளிப் பயணத்தில் இதயம் சுருங்கும் என குர்ஆன் சொல்கிறதா?

தஃப்ஸீர் குறிப்பு: 172 விண்வெளிப் பயணத்தில் சுருங்கும் இதயம்

فَمَن يُرِدِ اللَّـهُ أَن يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ ۖ وَمَن يُرِدْ أَن يُضِلَّهُ يَجْعَلْ صَدْرَهُ ضَيِّقًا حَرَجًا كَأَنَّمَا يَصَّعَّدُ فِي السَّمَاءِ ۚ كَذَٰلِكَ يَجْعَلُ اللَّـهُ الرِّجْسَ عَلَى الَّذِينَ لَا يُؤْمِنُونَ ﴿١٢٥

6:125. ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

விண்வெளியில் மேலேறிச் செல்பவனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் இந்த அனுபவத்தை உணர முடியும்.

ஆனால் இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடிந்தது? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். இதிலிருந்து திருக்குர்ஆன் இறைவாக்கு எனச் சந்தேகமின்றி அறியலாம்.

அதிக விபரத்திற்கு 304, 323வது குறிப்புகளையும் காண்க!

∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙

//விண்வெளியில் மேலேறிச் செல்பவனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் (6:125) கூறுகிறது.// எனும் இந்த ஒரு வாசகத்திலையே அனைத்தும் அடிபட்டுவிடுகிறது. அந்த குர்ஆன் வசனம் அவ்வாறு சொல்லவே இல்லை. இதை முதலிலேயே பார்த்துவிட்டால் சுவாரஸ்யம் இருக்காது என்பதால் தப்சீரில் இருக்கும் மற்ற பிழைகளை முதலில் பார்ப்போம்.

👉 ஸத்ர் صَدْرٌ எனும் வார்த்தையை மொழிபெயர்க்கும்போது உள்ளம் என்று மொழிபெயர்த்துவிட்டு தப்சீர் செய்யும்போது இதயம் என்று மாற்றி வளைத்து ஒடித்துள்ளது தப்சீர். *ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்.* தர்ஜமாவின்படி பார்த்தால் உள்ளம் எனும் சிந்தனையைத்தான் அல்லாஹ் விரிவடையவும் செய்கிறான் இறுக்கமாக்கியும் விடுகிறான், இதயம் எனும் தசைகளாலான உறுப்பை அல்ல. மொழிபெயர்க்கும்போது உள்ளம்; தப்சீர் செய்யும்போது இதயம்.

👉 ஒருவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது இதயத்தை விண்வெளிப் பயணம் செல்பவனைப்போல் அல்லாஹ் இறுக்கமாக்கி விடுகிறான் என்றால், அவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது இதயத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான் என்பதற்கு என்ன விஞ்ஞான விளக்கம்? இதயம் எனும் ரத்தத்தை உந்தும் உறுப்பு எந்த நிலையில் விரிந்து பெரிதாகிறது.

👉 வானத்தில் ஏறி செல்பவனைப் போல என்று இருக்கிறதா? அல்லது வானத்தில் பறந்து செல்பவனைப் போல என்று இருக்கிறதா? صعد என்கிற அரபு வார்த்தை பறந்து செல்வதைக் குறிக்குமா? காலால் மேலே ஏறுவதைக் குறிக்குமா?

إِذْ تُصْعِدُونَ وَلَا تَلْوُونَ عَلَىٰ أَحَدٍ وَالرَّسُولُ يَدْعُوكُمْ فِي أُخْرَاكُمْ فَأَثَابَكُمْ غَمًّا بِغَمٍّ لِّكَيْلَا تَحْزَنُوا عَلَىٰ مَا فَاتَكُمْ وَلَا مَا أَصَابَكُمْ ۗ وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ

153. உங்களுக்குப் பின்னால் இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்!

مَنْ يَصْعَدُ ثَنِيَّةَ الْمُرَارِ أَوِ الْمَرَارِ ‏

"யார் "ஸனிய்யத்துல் முரார்" அல்லது "ஸனிய்யத்துல் மரார்" கணவாயில் முதலில் ஏறுகிறாரோ ..."

ஸஹீஹ் முஸ்லிம் : 5365.

காலால் ஏறிச் செல்வதே தவிர பறந்து செல்வதல்ல

👉 இந்த வசனத்தில் இறுக்கமாதலைக் குறிக்க என்ன வார்த்தை வந்துள்ளதோ அதே வார்த்தைகள் வேறு வசனங்களில் மூஸா (அலை) நபி தொடர்பாகவும்  முஹம்மத் (ஸல்) அவர்கள் தொடர்பாகவும் வந்துள்ளது. அவர்கள் பூமியில் இருக்கும்போதே அத்தகைய இறுக்கமாதல் வந்துள்ளதாக அல்லாஹ் சொல்கிறான். அல்லது அதுபோன்ற இறுக்கமாதல் வராமல் இருக்குமாறு அல்லாஹ் பார்த்துகொண்டான் என்று சொல்கிறான்.

ளாயிக் ضَائِقٌ

وَلَقَدْ نَعْلَمُ أَنَّكَ يَضِيقُ صَدْرُكَ بِمَا يَقُولُونَ

97. அவர்கள் (உம்மைப் பற்றிப்) பேசுவதன் காரணமாக உமது உள்ளம் கலங்குவதை அறிவோம்.

திருக்குர்ஆன்  15:97

நபி ஸல் அவர்களுடைய ஈமான் நேர்வழி அளவுக்கு வேறு யாரிடமும் ஈமானும் நேர்வழியும் இல்லையே. நபி ஸல் அவர்களுக்கு ضَائِقٌ ஆகியுள்ளதே. எனில் ளாயிக் என்பது இதயம் எனும் உறுப்பு சுருங்குவதுதானா?

 وَيَضِيقُ صَدْرِي وَلَا يَنطَلِقُ لِسَانِي فَأَرْسِلْ إِلَىٰ هَارُونَ

13. என் உள்ளம் நெருக்கடிக்கு உள்ளாகும். என் நாவும் எழாது. எனவே ஹாரூனைத் தூதராக அனுப்புவாயாக!

திருக்குர்ஆன்  26:13

فَلَعَلَّكَ تَارِكٌ بَعْضَ مَا يُوحَىٰ إِلَيْكَ وَضَائِقٌ بِهِ صَدْرُكَ أَن يَقُولُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ كَنزٌ أَوْ جَاءَ مَعَهُ مَلَكٌ ۚ إِنَّمَا أَنتَ نَذِيرٌ ۚ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ وَكِيلٌ

12. "இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?'' என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே. அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன்.

திருக்குர்ஆன்  11:12

ஆக உள்ளம் நெருக்கடிக்குள்ளாகும் எனும் பொருள் தானே தவிர இதயம் எனும் சதைகளாலான உறுப்பு சுருங்கும் எனும் பொருளல்ல.

ஃஹரஜன் حَرَجٌ

كِتَابٌ أُنزِلَ إِلَيْكَ فَلَا يَكُن فِي صَدْرِكَ حَرَجٌ مِّنْهُ لِتُنذِرَ بِهِ وَذِكْرَىٰ لِلْمُؤْمِنِينَ

(இது) வேதம். நம்பிக்கை கொண்டோருக்கு அறிவுரையாகவும், இதன் மூலம் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காகவும் உமக்கு இது அருளப்பட்டது. எனவே இதனால் உமது உள்ளத்தில் கலக்கம் ஏற்பட வேண்டாம்.

திருக்குர்ஆன்  7:2

குர்ஆன் வசனத்தில் இருக்கும் இரு வார்த்தைகளுக்கும் உள்ளம் எனும் சிந்தனை நெருக்கடிக்குள்ளாக்கப்படுவதும் கலக்கமடைவதும்தானே தவிர இதயம் எனும் தசைகளாலான உறுப்பின் தசைகள் சுங்குவதாக குர்ஆன் சொல்லவில்லை.

👉 இதயத்தை விரிவாக்குவது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள, இதயத்தை சுருக்குவது இஸ்லாத்தை ஏற்றுகொள்ளாமல் இருக்க. தஃப்ஸீர் என்ன செய்திருக்க வேண்டுமென்றால் இஸ்லாத்தை ஏற்று நேர்வழி அடைந்தவனின் இதயம் எனும் தசைகளாலான உறுப்பை ஆய்வு செய்து அது விரிந்து பெரிதாக விசாலமாக இருப்பதை அறிவியலைக் கொண்டு நிறுவ வேண்டும். பின்னர் இஸ்லாத்தை ஏற்காமல் நிராகரித்தவனின் இதயம் எனும் தசைகளாலான உறுப்பை அறிவியல் ரீதியில் ஆய்வு செய்து அவனது இதயமும் ராக்கட்டில் போனவனின் இதயமும் ஒரே மாதிரி சுருங்கி  இருப்பதை நிரூபித்திருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வசனத்தை முழுமையாக எடுத்து அறிவியலைக்கொண்டு நிறுவியதாக ஆகும். அதை விடுத்து உவமையை எடுத்து விளக்கம் சொல்வது முழுமை பெறாது.

👉 صَدْرٌ இதற்கு உள்ளம் (எனும் சிந்தனை) என்றும் பொருள் உள்ளது நெஞ்சு (எனும் நெஞ்சுக்கூடு) என்றும் பொருள் உள்ளதே தவிர இந்த வார்த்தை ஒருக்காலமும் இதயம் எனும் தசைகளாலான உறுப்பை குறிக்காது

👉 இப்போது முக்கியமான பகுதிக்கு வருவோம். அந்த குர்ஆன் வசனத்தை வாசியுங்கள். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். மீண்டும் வாசியுங்கள். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். மீண்டும் வாசியுங்கள். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான்விண்வெளியில் மேலேறிச் செல்பவனின் இதயம் சுருங்குகிறது என்று இவ்வசனம் சொல்கிறதா? சந்தேகம் ஏற்பட்டால் மீண்டும் வாசியுங்கள். வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான் என்றுதான் சொல்கிறதே தவிர வானத்தில் ஏறிச் செல்பவனின் இதயத்தை போல் இறுக்கமாக்கி விடுகிறான் என்று சொல்லவே இல்லை. வானத்தில் ஏறி செல்பவன் சிரமத்தை அடைகிறான் அவனைப் போல் என்று சொல்கிறதே தவிர வானத்தில் ஏறி செல்பவனின் இதயம் இறுக்கம் அடைகிறது அவனது இதயத்தைப் போல என்று சொல்லவே இல்லை. இல்லாத வார்த்தையை கற்பனை செய்து தஃப்ஸீர் பேசுகிறதே தவிர வானத்தில் ஏறிச் செல்பவனின் இதயத்தைப் போல என்று பொருள் கொள்வதற்கு அங்கே எந்த முகாந்திரமும் இல்லை.

அல்லாஹ் ஒருத்தனுக்கு நேர்வழி காட்ட நாடினால் அவனுடைய உள்ளத்தை இஸ்லாத்தில் பால் விரிவடையச் செய்கிறான். இஸ்லாம் அவனது உள்ளத்தில் இலகுவாக ஏறிவிடும். ஒருத்தனை அல்லாஹ் வழிகேட்டில் விட நாடினால் அவனது உள்ளத்தை நெருக்கடிக்குள்ளாக்கி கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறான். எந்த அளவுக்கென்றால், ஒருத்தன் வானில் (காலால்) ஏறிச் செல்வது எப்படி இயலாத காரியமோ அதே போல இறுக்கமான அவனது உள்ளத்தில் இஸ்லாம் ஏறவே ஏறாது. இப்படித்தான் நம்பிக்கை கொள்ளாதவர்களை அல்லாஹ் தண்டிக்கிறான்

இதுவே பொருத்தமான பொருளாக்கமாக இருக்கும்.

குர்ஆனில் சில வார்த்தைகள் நேரடியான பொருளுடன் அதில் பல அற்புதங்களை புதைத்தவாறு இருக்கும். சில வசனங்கள் இலக்கிய அமைப்பில் உவமைகளாக இருக்கும். அப்போதும் அற்புதத்திற்கு குறைவிருக்காது. இவ்வசனத்தை பொறுத்தவரை இலக்கியமாக, இஸ்லாத்திற்காக ஒருவனின் நெஞ்சத்தை விரிப்பதைப் பற்றியும், ஒருத்தன் வானில் (காலால்) ஏறிச் செல்வது எப்படி இயலாத காரியமோ அதே போல இறுக்கமான அவனது உள்ளத்தில் இஸ்லாம் ஏறவே ஏறாது என்று வழிகேட்டிற்கு உவமையாகவும் அல்லாஹ் சொல்கிறான். இது மேலோட்டமாக வாசிக்கும் எவருக்கும் விளங்கக்கூடிய ஒன்றாகும்.


மற்ற தலைப்புகளை வாசிக்க https://istafseer.blogspot.com/p/zinaulabdeen.html