ஆழ்கடலில் அலைகளும் இருள்களும்
இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
அறிமுகத்தை வாசிப்பது இந்த தொடரை புரிந்துகொள்ள உதவும். அறிமுகத்தை வாசிக்க https://istafseer.blogspot.com/p/blog-page.html
اَوْ كَظُلُمٰتٍ فِىْ بَحْرٍ لُّـجّـِىٍّ يَّغْشٰٮهُ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ مَوْجٌ مِّنْ فَوْقِهٖ سَحَابٌؕ ظُلُمٰتٌۢ بَعْضُهَا فَوْقَ بَعْضٍؕ اِذَاۤ اَخْرَجَ يَدَهٗ لَمْ يَكَدْ يَرٰٮهَاؕ وَمَنْ لَّمْ يَجْعَلِ اللّٰهُ لَهٗ نُوْرًا فَمَا لَهٗ مِنْ نُّوْرٍ
❝அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. 24:40❞
கடலுக்குள் ஆழமாக செல்லச் செல்ல சூரிய ஒளி அதன் நிறங்களை ஒவ்வொன்றாக இழந்து இறுதியில் முழுவதும் இருட்டாகி விடும். இதுதான் அல்லாஹ் சொல்லும் “பல இருள்கள்” என்று ஒரு சாராரும். Pelagic zones என்று அழைக்கப்படக்கூடிய வெளிச்சத்தை அடிப்படையாக கொண்ட கடலின் ஆழத்தின் வகைப்பாடுகள்தான் “பல இருள்கள்” என்று மற்றொரு சாராரும் வாதிட்டு இந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்புதான் 1400 வருடங்களுக்கு முன்னர் குர்ஆனில் சொல்லப்பட்டிருப்பதாகவும் வாதிடுகின்றனர். இவர்களின் மற்றொரு வாதம், “நாம் கடலின் மேற்பரப்பில் அலைகளைப் பார்ப்பதைப் போன்றே கடலின் ஆழத்திலும் அலைகள் உள்ளனர். இந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்புக் ஏற்கனவே குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது” என்பதாகும். உண்மையில் இந்த அறிவியல்களுக்கும் இக்குர்ஆன் வசனத்திற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்று பார்ப்போம்.
இவ்வசனத்தில் ஓர் அரபு வார்த்தையை தவறாக பொருள்கொண்டதன் விளைவுதான் இந்த அறிவியல் குழப்பம். அதை மட்டுமே சுட்டிக்காட்டினால் ஒரே வரியில் இவ்வசனத்திற்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பது தெளிவுபெறும். ஆனால் இவர்கள் அறிவியல் மோகத்தால் கண்டுகொள்ளாமல் விட்ட மற்ற பிழைகள் தெரியாமல் போய்விடும் என்பதால் முதலில் சுவாரஸ்யமான அந்த விஷயங்களைப் பார்ப்போம்.
ஆழ்கடலில் இருள்கள் ஏற்படுவதற்கு internal waves காரணமா?
❝ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்!❞ இப்பகுதியை நன்றாக வாசித்துப்பாருங்கள். இருள்கள் ஏற்படுவதற்கு காரணமாக அலைகளை சொல்கிறான் அல்லாஹ். அதாவது ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கும் அலைகள்தாம் பல இருள்களை ஏற்படுத்துகின்றன. ஓர் அலை ஓர் இருளை ஏற்படுத்துகிறது, மற்றோர் அலை அதனை மூடி மற்றோர் இருளை ஏற்படுத்துகிறது. இதுதான் இந்த குர்ஆன் வசனத்தில் எவ்வித விளக்கமும் திருகுதாளமும் இல்லாமல் நாம் பெறும் நேரடி பொருள். அலைகள்தாம் இருள்களை ஏற்படுத்துகின்றன என்று அல்லாஹ் சொல்கிறான். இவர்களோ கடலின் ஆழத்தில் ஏற்படும் internal waves தான் அந்த அலைகள் என்கிறார்கள். எனில் internal waves இல்லை என்றால் இருள்கள் ஏற்படக்கூடாது. ஆனால் நாம் எல்லோரும் அறிந்திருக்கும் விஷயம் என்னவென்றால் எவ்வித அலைகள் இல்லாவிட்டாலும் நீரானது ஒளியை உறிஞ்சும் தன்மை கொண்டது. https://en.wikipedia.org/wiki/Underwater_vision அலையே இல்லாத ஆழமாக ஏரியாக இருந்தாலும் அதனடியே செல்லச் செல்ல இருள் ஏற்படும். நீர்தான் இருளை ஏற்படுத்துகிறதே தவிர அலைகளல்ல. எனில் அல்லாஹ் இங்கே சொல்லும் அலைகளுக்கும் ஆழ் கடலில் அலைகள் என்று இவர்கள் சொல்லும் internal waves க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.
இருள்களுக்கு மேலே அலையா கீழே அலையா?
மேலும் 275 மீட்டர் ஆழத்துக்கு கீழே சூரிய ஒளி அனைத்து நிறங்களையும் இழந்துவிடும். இருட்டாகிவிடும். இப்போது இந்த ஆழத்துக்கு கேழே internal waves உருவானால் இவர்களின் அறிவியல் விளக்கம் குர்ஆனை கேலிப்பொருளாக ஆக்கிவிடும். அல்லாஹ் இருள்களுக்கு மேலே அலை என்று சொல்லும்போது இங்கே இருள்களுக்கு கீழே அலை என்றாகிவிடும். குறிப்பாக ஆழ்கடலில் அலைகள் எனும் வசனத்திற்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்படும் பிரபல விளக்கமாக இருப்பது Kelvin-Helmholtz waves எனப்படும் அலைகளாகும். இந்த அலைகளைதான் தமிழ் தப்சீர்களில் பனை மரை உயரம் என்றெல்லாம் வர்ணிக்கிறார்கள். ஆனால் Kelvin-Helmholtz waves அலைகலைப் பொறுத்தவரை சில ஆயிரம் மீட்டருக்கு கீழேயுள்ள மிகக் குளிர்ந்த கடல்நீரில்தான் இவை உருவாக முடியும். இங்கேயும் இவர்களின் அறிவியல் விளக்கம் குர்ஆனை கேலிப்பொருளாக்கிவிடுகிறது.
மொழியியல் குறைகள்:
பெயரடை
அடுத்ததாக “ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்!” மீண்டும் இவ்வசனத்தை நன்றாக வாசித்துப்பாருங்கள். இருளை ஏற்படுத்துவது அடுக்கடுக்கான அலைகள் என்றும் இறுதியாக அவற்றின் மீதுள்ள மேகம் என்றும் சொல்கிறான் அல்லாஹ். ஆழ்கடலில் மேகம் இருக்குமா? internal waves க்கும் Kelvin-Helmholtz waves க்கும் மேலே மேகம் இருக்குமா? இது எத்தகைய கேலியாக அமையும். இதற்குக் காரணம் ஆர்வக்கோளாரில் அரபு மொழியை கவனிக்காமல் விட்டதாகும். அரபு மூலத்தில் بَحْرٍ لُّـجّـِىٍّ எனும் பதம் உள்ளது. இது பெயர் உரிச்சொல் ஆகும். ஆங்கிலத்தில் adjective என்றும் அரபு மொழியில் صفة مجرورة என்றும் சொல்வார்கள். அதாவது அந்த சொற்றோடரில் இருக்கும் ஒரு பெயர்ச்சொல்லின் பண்பை விளக்குவதாகும். இதனை ஆழ்கடல் என்று பொருள் கொள்ளவே இயலாது. “ஆழமான ஒரு கடல்” என்பதே சரியான இலக்கண அடிப்படையில் அமைந்த பொருளாகும். ஆழ்கடல் என்றால் கடலில் ஆழமான பகுதியை குறிக்கும். அதுவே ஆழமான ஒரு கடல் என்றால் அது கடலில் ஆழமான பகுதியை குறிக்காது. உதா. “ஆழமான ஒரு கடலில் மீன் பிடிப்பதற்காக படகில் சென்றோம்” என்று சொன்னால், இங்கே ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றோம் எனும் பொருள் வராது. அதே போலத்தான் மேலுள்ள குர்ஆன் வசனத்தில் பொருள்கொள்ள வேண்டும். இவ்வசனத்தில் சொல்லப்படும் அலைகள் கடலின் மேற்பரப்பில் எழும் அலைகளை மட்டுமே குறிக்கும்.
அலை எதனை மூடுகிறது?
மேலும் “ஓர் அலை அதை மூடுகிறது” என்பதில் இருக்கும் அரபுப் பதம் يَّغْشٰٮهُ مَوْجٌ இங்கே யஃக்-ஷஹு என்பது கடலை மூடுகிறது எனும் பொருளில்தான் சொல்லப்பட்டுள்ளது. ஹு என்பது ஆண்பால் பிரதிப் பெயர் ஆகும் இங்கே அது கடலை மட்டுமே குறிக்கும். கடலை மூட வேண்டுமென்றால் அது கடலுக்கு மேலே எழும் அலைகளே தவிர கடலுக்கடியில் உருவாகும் அலைகளாக இருக்கவே முடியாது.
அலையின் பொருளென்ன?
எந்த ஒரு இலக்கியமாக இருந்தாலும் அந்த இலக்கியம் எழுதப்பட்ட காலத்தில் இருந்த மொழியியலைக் கொண்டே அந்த இலக்கியத்தை அணுக வேண்டும். “துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை” இந்த குறளில் துப்பாக்கியைப் பற்றி 2000 வருடத்திற்கு முன்னரே திருவள்ளுவர் சொல்லிவிட்டார் என்று சொன்னால் நாம் அதனை கேலி செய்வோம். துப்பாக்கி எனும் பெயர் சொல்லாக அவ்வார்த்தை கையாளப்படவில்லை. மேலும் துப்பாக்கி எனும் ஆயுதத்தை குறிக்கும் பொருள் அந்த வார்த்தைக்கு அக்காலத்தில் இல்லை. அக்காலத்தில் அவ்வார்த்தைக்கு என்னென்ன பொருள் இருந்தனவோ அவற்றை மட்டுமே நாம் எடுக்க இயலும்.
அலைகள் என்று இன்று நாம் பல்வேறு அலைகளை அழைக்கிறோம். மின்சார அலை, காந்த அலை, ஒலி அலை, ஒளி அலை, இன்னும் எத்தனையோ அலைகள் உள்ளன. ஆனால் குர்ஆன் அலை என்று சொல்வது கடலில் நாம் கண்ணால் காணும் அலையை மட்டுமே. மின் காந்த அலை, சூரியனில் இருந்து வரும் வேறு அலைகளை நாம் இன்று அலைகள் என்று அழைப்பதைப் போல இவற்றுக்கு அலைகள் எனும் பெயர் அக்காலத்தில் இல்லை. இவர்கள் சொல்லும் internal waves அல்லது ஆழ்கடலில் உருவாகும் எந்த அலைகளும் கடல்பரப்பில் பார்க்கவோ உணரவோ இயலாதவையாகும். மனிதன் செல்ல இயலாத ஆழத்தில் உருவாகும் ஆற்றலுக்கு அலைகள் என்று பெயரிட்டுள்ளனர், காந்த அலைகள் என்று பெயரிட்டதைப் போல. குர்ஆனில் அலைகள் என்று சொல்லப்படும் வார்த்தையை இக்காலத்தில் நாம் அலைகள் என்று பெயரிட்டவற்றுடன் ஒப்பிடக்கூடாது.
❝அல்லது ஆழமுள்ள ஒரு கடலிலுள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை (அந்தக் கடலை) மூடுகிறது. அதற்கு மேலே மற்றோர் அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும்போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியும் இல்லை. 24:40❞
சரியான விளக்கத்தை நீ சொல்லு
போலி அறிவியல் விளக்கங்களை நாம் சான்றுகளுடன் மறுக்கும்போது உடனடியாக எழும் கேள்வி. “அப்படின்னா சரியான விளக்கத்தை நீ சொல்லு” என்பதாகும். அந்த குர்ஆன் வசனத்திலிருந்து எந்த தில்லுமுல்லும் செய்யாமல் எந்த வளைத்தொடிப்புகளும் இல்லாமல் நேரடியாக பெறப்படும் விளக்கம் தெளிவாக இருந்தபோதிலும் போலி அறிவியலை ஏற்றுகொண்டதால் நம்மவர்களால் அந்த நேரடிப் பொருட்களை ஏற்றுக்கொள்ள இயலுவதில்லை. இன்ஷா அல்லாஹ் விளக்குவோம்.
உவமைகளை உவமைகளாக பார்த்து அந்த உவமைகளில் சொல்லப்பட்ட அறிவுரையை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அறிவியலைத் தேடி அல்லாஹ் சொல்லும் அறிவுரைகளைத் தொலைத்துவிட்டு நிற்கிறோம்.
“இன்னும், எவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ அப்பொழுது அவன், வானத்திலிருந்து (முகங்குப்புற) விழுந்து பறவைகள் அவனை இராய்ஞ்சிக் கொண்டு சென்றதைப் போன்றோ அல்லது (பெருங்)காற்று அவனை வெகு தூரத்தில் உள்ள இடத்திற்கு அடித்துக் கொண்டு சென்றதைப்போன்றோ இருக்கின்றான்.” 22:31
இவ்வசனத்தில் அறிவியலைத் தேடி ஜுராசிக் பார்க் திரைப்படத்தைப் போல சிலர் கதை எழுதிவிட்டனர். இதில் அறிவியலைத் தேடுவதற்கு என்ன இருக்கிறது. இன்றுவரை மனிதனை கொத்திச் செல்லும் பறவையும் இல்லை காற்று மனிதனை அடித்துசென்றதுமில்லை. சின்னாபின்னமாகிப் போனவனுக்கு அல்லாஹ் ஓர் உவமையை சொல்கிறான். இதுபோன்ற உவமைகள் குர்ஆனில் பல உள்ளன. அந்த உவமைகளை நாம் எடுத்து அறிவியல் ஆய்வு செய்ய இயலாது.
அதே போல 24:39 ம் வசனத்திலிருந்து நாம் துவங்க வேண்டும்.
24:39. இன்னும் நிராகரித்துவிட்டார்களே அவர்கள் - அவர்களின் செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் (நீரைப்) போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீர் என எண்ணிக் கொள்கிறான், எதுவரையெனில் (முடிவாக) அவன் அதனிடத்தில் வந்தடைந்தால் அதை அவன் ஒரு பொருளாகப் பெற்றுக் கொள்ள மாட்டான்,
இதன் தொடர்ச்சியாக இறை நிராகரிப்பாளர்களின் செயல்களை அல்லாஹ் ஓர் கடலுடலில் உள்ள இருள்களுடன் ஒப்பிடுகிறான். அந்த கடல் பரந்துவிரிந்து ஆழமானதாக உள்ளது. அதனை அலைக்கு மேல் அலைகள் மூடுகின்றன. ஏற்கனவே இருட்டாக இருக்கும் அந்த கடலில் மேலும் இருட்டாக அலைகளும் மேகங்களும் மூடியுள்ளன. இப்போது அந்த கடலில் தத்தளிக்கும் ஒருவன் தனது கையை கடலிலிருந்து வெளிப்படுத்திப் பார்த்தால் அவனால் அதைப் பார்க்க இயலாது என்கிறான். இறை நிராகரிப்பு எனும் அவனுடைய செயல்கள் இருளானவை. அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லை எனில் அவன் இருளிலேயே விடப்படுவான் என்பதே இதன் படிப்பினை.
மற்ற தலைப்புகளை வாசிக்க https://istafseer.blogspot.com/p/zinaulabdeen.html
Amazing Waves Discovered in Deep-Ocean Trench | Live Science