இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
QSF32
2015 க்கு முன்னிருந்த தப்சீர் குறிப்பு
462. காதுகளில் அடித்தோம் என்றால் என்ன?
இவ்வசனத்தில் (18:11) ளரப்னா அலா ஆதானிஹிம் என்ற சொல்லுக்கு உறங்கச் செய்தோம் என்று நாம் தமிழாக்கம் செய்துள்ளோம்.
இதன் நேரடிப் பொருள் காதுகளில் அடித்தோம் அல்லது காதுகளில் வருடிக்கொடுத்தோம் என்பதாகும். சில மொழிபெயர்ப்பாளர்கள் இச்சொல்லுக்கு காதுகளில் அடித்தோம் என்று நேரடியாக மொழிபெயர்த்துள்ளனர்.
வள்ளல் என்பதைக் குறிக்க கை நீளமானவன் என்ற சொல்லை அரபியில் பயன்படுத்துவார்கள். இதற்கு அப்படியே பொருள் செய்தால் தமிழ் பேசும் மக்கள் திருடன் என்று புரிந்து கொள்வார்கள். கை நீளமானவன் என்பதைத் திருடன் என்ற பொருளில் தமிழ் கூறும் மக்கள் பயன்படுத்துகிறார்கள். எனவே கை நீளமானவன் என்ற சொல்லுக்கு வள்ளல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டால் வள்ளல் என்று தான் மொழிபெயர்க்க வேண்டும்.
அது போல் காதுகளில் அடித்தோம் என்ற சொல்லை அரபுமொழியில் தூக்கத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துவார்கள். தமிழில் இச்சொல்லை இந்தப் பொருளில் பயன்படுத்துவதில்லை. எனவே இச்சொல்லை அரபுமொழி பேசுவோர் எந்தப் பொருளில் புரிந்து கொள்வார்களோ அதே பொருளில் மற்றவர்களும் புரிந்து கொள்வது தான் முக்கியம். எனவே தான் உறங்கச் செய்தோம் என்று மொழிபெயர்த்துள்ளோம்.
2015 க்குப் பின்... பரிணாம வளர்ச்சி பெற்ற தப்ஸீர் குறிப்பு
462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா?
இவ்வசனங்கள் (18:11 முதல் 18:18 வரை) ஒரு அதிசயமான வரலாற்றைக் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தனர். தமது சமுதாயத்துக்குப் பயந்து அவர்கள் ஒரு குகையில் போய்ப் பதுங்கினார்கள். பதுங்கிய அவர்களை அல்லாஹ் பல ஆண்டுகள் தூங்க வைத்தான். அந்தக் கால தலைமுறையினர் அழிந்த பின்னர் அவர்களை அல்லாஹ் எழுப்பினான் என்பதுதான் அந்த வரலாறு.
பல ஆண்டுகள் மனிதர்களால் உறங்க இயலுமா என்ற சந்தேகம் முஸ்லிமல்லாதவர்களுக்கு ஏற்படலாம். அல்லாஹ் எல்லா ஆற்றலும் மிக்கவன் என்பதால் முஸ்லிம்களுக்கு இதில் எந்தச் சந்தேகமும் ஏற்படாது.
அதிசயமான எந்த வரலாற்றைக் கூறினாலும் அது உண்மைதான் என்று நம்புவதற்குரிய சான்றுகளை உள்ளடக்கியே அல்லாஹ் பேசுவான்.
இந்தச் சம்பவத்திலும் இது குறித்த சான்றுகள் உள்ளன.
அவர்களைப் பல்லாண்டுகள் உறக்க நிலையில் வைத்திருந்ததைப் பற்றிக் கூறும்போது அவர்களை உறங்க வைத்தோம் எனக் கூறாமல் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.
இந்தச் சொல் வழக்கு தற்போது தூக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முன்னர் தூக்கத்தைக் குறிக்க, காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.
அத்தஹ்ரீர் வத்தன்வீர் என்ற நூலில் அதன் ஆசிரியர் பிற்கால இலக்கியங்களில் இந்தச் சொல் வழக்கு தூக்கத்தைக் குறிக்க பயன்படுத்தப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முன்னர் இந்தச் சொல்வழக்கு பயன்பாட்டில் இருக்கவில்லை என்று கூறுகிறார்.
வழக்கத்தில் இல்லாத இந்தச் சொல்வழக்கை இறைவன் ஏன் பயன்படுத்த வேண்டும்?
மனிதன் உறங்கும்போது கண்களின் இயக்கம் நின்று விடும். ஆனால் சிறு சப்தம் கேட்டாலும் அவன் விழித்து விடுவான்.
இடியோசை, மிருகங்களின் ஓலம் போன்றவை காரணமாக அவர்களால் பல ஆண்டுகள் உறங்க முடியாமல் போய்விடும். பல ஆண்டுகள் அவர்கள் உறங்க வேண்டுமானால் அவர்களின் காதுகளில் சிறிய சப்தமோ, பெரிய சப்தமோ விழாமல் தடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களால் பல ஆண்டுகள் விழிக்காமல் உறங்க முடியும்.
அதைத் தான் வழக்கத்தில் இல்லாத சொல்லைப் பயன்படுத்தி திருக்குர்ஆன் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று கூறுகிறது.
மேலும் இவ்வசனத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் அவர்களைப் பார்த்தால் விழித்திருப்பது போல் தோன்றும் என்றும், நீ அவர்களைப் பார்த்தால் வெருண்டு ஓடுவாய் என்றும், அச்சமடைவாய் என்றும் கூறப்பட்டுள்ளது.
கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்கினார்கள் என்று இதற்கு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் சிலர் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவதுண்டு. அவர்களைப் பார்த்தால் அவர்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் கருத மாட்டார்கள். அதைப் பார்த்து பயப்படவும் மாட்டார்கள்.
மாறாக அவர்கள் விழித்திருப்பவர்களைப் போன்று கண்களைச் சிமிட்டிக் கொண்டே தூங்கினார்கள் என்று தான் கருத முடியும்.
ஆயினும் மற்றவர்களுக்கு இல்லாமல் இவர்களுக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே தூங்கும் தன்மை ஏன் வழங்கப்பட்டது?
ஒருவர் நீண்ட காலம் கண்களை மூடிக் கொண்டே இருந்தால் காட்சிகளை மூளைக்கு எடுத்துச் செல்லும் (optical nerves) நரம்புகள் சுருங்க ஆரம்பித்து கடைசியில் செயலற்றுப் போய்விடும். இதன் காரணமாக அவரது கண்கள் குருடாகிவிடும். பின்னர் அவர்கள் கண்களைத் திறந்தால் எதையும் பார்க்க இயலாது.
விழியின் வெண்படலத்துக்கு இரத்த நாளங்கள் இல்லை. எனவே கண்ணீர் சுரப்பிகளால் இது அவ்வப்போது ஈரப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். எனவே கண்களை நீண்ட நேரத்திற்கு திறந்தே வைத்திருந்தால் விழிவெண்படலம் வரண்டு போக நேரிடும். நாளடைவில் “கார்னியோ செராசிஸ் (Corneo-xerosis) எனும் பாதிப்பால் குருட்டுத் தன்மை ஏற்படும்.
சுருங்கக் கூறினால் ஒருவர் வருடக்கணக்காக கண்களை மூடியே வைத்திருந்தாலும், அல்லது திறந்தே வைத்திருந்தாலும் அவரது பார்வை குருடாகி விடும் என்பது நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளிலிருந்து தெரிய வருகின்றது. இந்த நவீன அறிவியல் உண்மைகளே மேற்கண்ட வசனங்களில் அடங்கியுள்ளன.
பல்லாண்டுகள் ஒருவர் விழிக்காமல் படுத்துக் கிடந்தால் தரையில் படிந்துள்ள உடல் பகுதி சூடாகி வெந்து புண்ணாகி அழுகிப் போய்விடும். அல்லது அதுவே அவர்களை விழிக்கச் செய்து விடும். பல்லாண்டுகள் தூங்க முடியாமல் ஆக்கிவிடும்.
இதனால் தான் அவர்களை வலப்புறமும், இடப்புறமும் புரட்டி இந்த விளைவையும் அல்லாஹ் தடுக்கிறான்.
இது இறைவனின் வார்த்தை என்பதால் தான் பல்லாண்டுகள் தூங்கினால் என்ன விளைவு ஏற்படுமோ, என்ன விளைவுகள் ஏற்படும் என்று அறிவியல் உலகம் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளதோ அந்த விளைவுகளை இல்லாமலாக்கி அவர்களைத் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான்.
இந்த விளைவுகள் இருந்தாலும் அல்லாஹ்வால் தூங்க வைக்க முடியும் என்றாலும் அதிசயமான வரலாறை நம்பத் தயங்கும் மனிதர்களுக்காக தனது அளப்பரிய அறிவை வெளிப்படுத்தி எல்லாம் அறிந்த இறைவனாகிய நான் சொல்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் காட்டுகிறான் இறைவன்.
∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙
குர்ஆன் ஹதீஸை ஒருவர் ஆய்வு செய்து அதனடிப்படையில் தன்னுடைய முந்தய முடிவுகளை மாற்றிக்கொண்டால் வரவேற்க வேண்டும். ஆனால் தான் அறிவியல் என்று நம்புபவற்றிற்காக குர்ஆனை மாற்றுவது நெறியல்ல. காதுகளில் அடித்தோம் என்பது உவமையாக தூக்கத்தைக் குறிப்பிடுவதற்குப் பயன்பட்டது எனும் நிலை மாறி காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று மாறுவதற்கு ஒரே காரணம் “அறிவியல்” மட்டுமே. 2004 இந்த தஃப்ஸீர் முதன் முதலாக வந்த காலத்திலேயே ‘காதுகளில் அடித்தோம்’, என்றும் ‘காதுகளில் திரையிட்டோம், என்றும் ‘உறங்கச் செய்தோம்’ என்றும் பல்வேறு முறைகளில் மொழிபெயர்ப்புகள் இருந்தன. பிற்காலத்தில் காதுகளில் திரையிட்டோம் என்று மாற்றுவதற்குக் காரணம் (optical nerves) நரம்புகள் “கார்னியோ செராசிஸ் (Corneo-xerosis) போன்ற வார்த்தைகள் ஏற்படுத்திய பாதிப்பே.
//கண்களைத் திறந்து வைத்துக் கொண்டே தூங்கினார்கள் என்று இதற்கு பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் சிலர் கண்களைத் திறந்து கொண்டே தூங்குவதுண்டு. அவர்களைப் பார்த்தால் அவர்கள் விழித்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று யாரும் கருத மாட்டார்கள். அதைப் பார்த்து பயப்படவும் மாட்டார்கள். மாறாக அவர்கள் விழித்திருப்பவர்களைப் போன்று கண்களைச் சிமிட்டிக் கொண்டே தூங்கினார்கள் என்று தான் கருத முடியும்.//
மேலுள்ள ஆங்கில வார்த்தைகளை புகுத்துவதற்காக இதுபோன்று தானே கேள்வி கேட்டு தானே பதில் சொல்லி தானே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது தஃப்ஸீர்.
11. எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களின் காதுகளில் திரையை ஏற்படுத்தினோம்.462
17. சூரியன் உதிக்கும்போது அது அவர்களின் குகையை விட்டும் வலப்புறமாகச் சாய்வதையும், அது மறையும்போது இடப்புறமாக அவர்களைக் கடப்பதையும் காண்பீர்! அவர்கள் அதில் உள்ள விசாலமான பகுதியில் உள்ளனர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்று. அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டினானோ அவரே நேர்வழி பெற்றவர். அவன் யாரை வழிகேட்டில் விட்டு விடுகிறானோ அவருக்கு நேர்வழி காட்டும் பொறுப்பாளரைக் காண மாட்டீர்.
18.அவர்கள் விழித்துக் கொண்டிருப்பதாக நீர் நினைப்பீர்! (ஆனால்) அவர்கள் உறங்கிக் கொண்டுள்ளனர்.462 அவர்களை வலப்புறமும் இடப்புறமுமாகப் புரட்டுகிறோம். அவர்களின் நாய் தனது முன் கால்களை விரித்து வாசலில் உள்ளது. அவர்களை நீர் எட்டிப் பார்த்திருந்தால் அவர்களை விட்டு வெருண்டு ஓடியிருப்பீர்! அவர்களால் அதிகம் அச்சமடைந்திருப்பீர்!
காதுகளில் திரையை ஏற்படுத்தினால் மட்டும் ஒரு மனிதன் பல்லாண்டு காலம் உறங்கிவிட முடியுமா? காதுகளில் பஞ்சை வைத்துக் கட்டிக்கொண்டு ஒருவரால் விழிக்காமல் 10 நாட்கள் தொடர்ச்சியாக தூங்க இயலுமா?
போதாத குறைக்கு சூரியன் மறையும் வேளையில் அவர்களின் மீது சூரிய ஒளியும் பாய்ந்துள்ளது. அதிலும் அவர்கள் எழவே இல்லை என்று குர்ஆன் சொல்கிறது. அவர்களின் கண்களும் கட்டப்பட்டிருந்தன என்று தஃப்ஸீர் சொல்லுமா?
கண்களை சிமிட்டிகொண்டிருப்பவரை பார்த்தால் பயம் வருமா கண்களை சிமிட்டாமல் திறந்தே வைத்திருப்பவரை பார்த்தால் பயம் வருமா? மண்டைக்கும் மூளைக்கும் தொடர்பே இல்லாத வாதங்கள்.
அவர்களை அல்லாஹ் புரட்டிப்போட்டான் ஆனால் நாயை முன் கால்களை விரித்த நிலையிலேயே வாசலில் விட்டுவிட்டான். நாயைப் பற்றி தஃப்ஸீர் கண்டுகொள்ளாதது ஏன்? அதற்கு அறிவியல் விளக்கம் எதுவும் இன்டர்நெட்டில் கிடைக்கவில்லையா?
// இந்தச் சொல் வழக்கு தற்போது தூக்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும் திருக்குர்ஆனுக்கு முன்னர் தூக்கத்தைக் குறிக்க, காதுகளில் திரையை ஏற்படுத்தினோம் என்று சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.//
மேலே ஹைலைட் செய்யப்பட்ட விளக்கம் பின் வரும் வசனத்தை மறுப்பதாக அமைந்துள்ளது
إِنَّا أَنزَلْنَاهُ قُرْآنًا عَرَبِيًّا لَّعَلَّكُمْ تَعْقِلُونَ
நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக அரபு மொழியில் இக்குர்ஆனை நாம் அருளினோம்.
திருக்குர்ஆன் 12:2
அக்கால மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் தெளிவான விதத்தில் அல்லாஹ் குர்ஆனை அருளியுள்ளான். ஆனால் فَضَرَبْنَا عَلَىٰ آذَانِهِمْ எனும் வாக்கியம் அக்கால நடைமுறையில் இல்லாத வாக்கியம் என்கிறது தப்ஸீர். நடை முறையில் இல்லாத வாக்கியத்தை அக்கால மக்கள் எப்படி விளங்கினார்கள்?
http://onlinetntj.com/2-பொருள்-செய்ய-முடியாத-எழு/586
http://onlinetntj.com/86-இரு-பொருள்-தரும்-வார்த்த/831'
மேலுள்ள இரு தஃப்ஸீர் குறிப்புகளையும் வாசித்துவிட்டு மேற்கொண்டு தொடருங்கள்.
//திருக்குர்ஆன் முழுவதும் விளங்கிடத்தக்கவை என்பதைக் கூறும் ஏராளமான வசனங்கள் உள்ளன. அந்த வசனங்களில் சிலவற்றின் எண்களை மட்டும் இங்கே தந்துள்ளோம்.
2:99, 2:159, 2:185, 2:219, 2:221, 2:242, 2:266, 3:103, 3:118, 3:138, 4:26, 4:82, 4:174, 5:15, 5:89, 6:105, 6:114, 7:52, 10:15, 10:37, 11:1, 16:89, 17:41, 17:89, 18:54, 20:2, 22:16, 22:72, 24:1, 24:18, 24:34, 24:46, 24:58, 24:59, 26:2, 27:1, 28:2, 29:49, 39:27, 41:3, 46:7, 54:17, 54:22, 54:32, 54:40, 55:2, 58:5, 65:11.
இந்த வசனங்களும், இந்தக் கருத்தில் அமைந்த மற்ற வசனங்களும், திருக்குர்ஆன் அனைத்தும் விளங்கத்தக்கது என்பதற்குத் தெளிவான சான்றுகளாக உள்ளன.//
இவ்வாறு தஃப்ஸீர் குறிப்பு 86 சொல்கிறது. நடைமுறைக்கு மாற்றமான சொல் குர்ஆனில் இருந்திருந்தால் அதனை அம்மக்கள் எப்படி விளங்கி இருந்திருப்பார்கள்? அப்படியானால் குர்ஆனில் விளங்க இயலாத வாசங்ககள் இருப்பதாகத்தானே பொருள். என்னே முரண்பாடு?
//நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சிறு விஷயத்திற்குக் கூட விளக்கம் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் இது குறித்து எந்தக் கேள்வியையும் எழுப்பியதில்லை. இது பற்றி கேள்வி எழுப்பியதாக ஒரு சான்றும் இல்லை. அன்றைக்கு இது சாதாரணமான நடைமுறையாக இருந்ததை இதிலிருந்து அறியலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்துக்கும் களங்கம் ஏற்படுத்த எத்தனையோ கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர்.
திருக்குர்ஆனில் கையாளப்பட்ட இது போன்ற சொற்பிரயோகம் அன்றைக்கு சாதாரணமாகவும், அன்றைய மக்களால் ஏற்கப்பட்டதாகவும் இல்லாதிருந்தால் இதைக் கடுமையாக விமர்சனம் செய்திருப்பார்கள். முஹம்மதைப் பார்த்தீர்களா? அர்த்தமே இல்லாமல் உளறி விட்டு இறைவேதம் என்கிறார் எனக் கூறியிருப்பார்கள்.
ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிராகப் பல்வேறு விமர்சனங்கள் செய்த எதிரிகள் இது குறித்து எந்த விமர்சனமும் செய்யவில்லை. ஒரே ஒருவர் விமர்சித்ததாகக் கூட எந்தச் சான்றும் இல்லை.
அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்ததிலிருந்தும் இதுபோன்ற சொல்வழக்கு அன்றைய மக்களிடம் இருந்துள்ளதை அறியலாம்.//
இவ்வாறு 2ம் இலக்கத்தில் உள்ள தஃப்ஸீர் குறிப்பு சொல்கிறது. ஆக فَضَرَبْنَا عَلَىٰ آذَانِهِمْ அவர்களின் காதுகளில் அடித்தோம் எனும் சொல் வழக்கம் அன்றைக்கு இருந்திராவிட்டால் சஹாபாக்கள் அதன் விளக்கத்தைக் கேட்டிருப்பார்கள். அல்லது எதிரிகள் “முஹம்மதைப் பார்த்தீர்களா? அர்த்தமே இல்லாமல் உளறி விட்டு இறைவேதம் என்கிறார்” எனக் கூறியிருப்பார்கள். இந்த இரண்டும் நடக்கவில்லையே.
10 வருடங்களுக்கு முன்பு தான் சொன்னவற்றை 10 வருடங்களுக்குப் பின் விஞ்ஞானக் கோளாறின் காரணமாக தானே முரண்பட்டு நிற்கிறது தஃப்ஸீர்.
“குர்ஆன் இறங்கும்போது அந்த சொற்பிரயோகம் வழக்கத்தில் இல்லை. குர்ஆன் இறங்கிய பிறகு நபி ஸல் அவர்கள் அதற்கு விளக்கத்தை சொல்லிவிட்டார்கள். எனவே காதுகளில் அடித்தோம் என்றால் உறங்கச் செய்தோம் என்றுதான் பொருள்” என்று சொல்லித் தப்பிக்கவும் முடியாது. அப்போதும் நாம் ஆய்வு செய்யும் இந்த தஃப்ஸீர் குறிப்பு முற்றிலுமாக அடிபட்டுவிடும்.
2:259ம் வசனத்தில் கழுதை இறந்தும் உணவு கெட்டுப்போகாமல் இருக்கக் காரணம் ஃப்ரிட்ஜ் தான் என்று சொன்னதைப் போல காதுகளை கட்டிவிட்டதன் காரணமாக பல ஆண்டுகள் உறங்கினார்கள் என்றும் சில ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து “இதுதான் அவர்களை பார்த்தால் பயம் ஏற்படக்காரணம்” என்றும் ஹாலிவுட் சைக்கோ த்ரில்லர் கதை எழுதியுள்ளது தஃப்ஸீர்.
அவர்களை பல்லாண்டு உறங்க வைத்தது இறைவனின் தனிப்பெரும் ஆற்றல்.