இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
QSF24. குன் vs க்ளோனிங்
தப்சீர் குறிப்பு 415. குளோனிங் சாத்தியமே!
இன்றைய மனிதன் கண்டுபிடித்துள்ள குளோனிங் குறித்து நாம் எந்த முடிவை எடுப்பது என்பதற்கு இவ்வசனங்கள் (3:46, 19:21, 19:29,30, 21:91, 23:50) வழிகாட்டுகின்றன.
ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி கன்னித்தாய் மூலம் இறைவனின் தனிப்பெரும் ஆற்றலால் பிறந்தார்கள். இந்த நிகழ்ச்சியை வெறும் வரலாறாக மட்டும் திருக்குர்ஆன் கூறாமல் 'இது ஓர் அத்தாட்சியாக உள்ளது' என்று கூறி, இது குறித்து இவ்வசனங்களில் சிந்திக்கத் தூண்டுகிறது.
மனிதர்கள் முயற்சி செய்தால் இது சாத்தியமாகாது என்றால் இதைச் சிந்திக்கத் தூண்டுவதில் பொருள் இருக்காது. முயன்றால் முடியும் என்பதால் தான் இது குறித்து சிந்திக்குமாறு இவ்வசனம் கூறுகிறது.
இன்றைய நவீன உலகில் உயிரினங்களின் உயிரணுவுக்கு மாற்றாக மரபணுவைப் பயன்படுத்தி உயிரினங்களை உண்டாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர்.
உதாரணமாக ஓர் ஆடு குட்டி போட்டால் அந்தக் குட்டி எல்லா வகையிலும் தாயைப் போலவோ, அக்குட்டி உருவாவதற்குக் காரணமான கிடாவைப் போலவோ இருப்பதில்லை. சில விஷயங்களில் தாயை ஒத்ததாகவும், சில விஷயங்களில் தந்தையை ஒத்ததாகவும் இருக்கும். சில சமயங்களில் பெற்றோருக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத தோற்றத்திலும் இருக்கும்.
ஆனால் ஓர் ஆட்டின் மரபணு மூலம் உருவாக்கப்படும் குட்டியானது, அந்த மரபணுக்குச் சொந்தமான ஆடு அல்லது கிடாவை எல்லா வகையிலும் ஒத்ததாக இருக்கும். இவ்வாறு மரபணு மூலம் இன உற்பத்தி செய்வதற்குக் குளோனிங் எனப்படுகின்றது.
மரபணுவில் உருவாக்கப்படும் குட்டி, அச்சு அசலாக தாயைப் போல் பிறப்பதற்குரிய காரணத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆணுடைய உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் இணைந்து கரு உருவாகி வளரும்போது அதில் அதற்கான மரபணுக்கள் தோன்றுகின்றன.
இரண்டும் கலந்த ஒரு கலவையாக மரபணு அங்கே புதிதாக உருவாவதால் அது பெற்றோரை எல்லா வகையிலும் ஒத்ததாக இருப்பதில்லை.
அதே சமயம், உயிரினங்களின் உடல் முழுவதும் ஒவ்வொரு தசையிலும் மரபணுக்கள் வியாபித்துள்ளன. சிறிய அளவு தசையை எடுத்து அதிலிருந்து மரபணுவை மட்டும் பிரிக்கின்றனர். இந்த மரபணு 25 வயதுடைய ஒருவனின் மரபணு என்றால் அந்த மரபணுவின் வயதும் 25 தான்.
இதன் காரணமாகத்தான் யாருடைய மரபணுவிலிருந்து குழந்தை உருவாக்கப்படுகின்றதோ அவரைப் போலவே அச்சு அசலாக அந்தக் குழந்தை இருக்கிறது.
ஆணுடைய உயிரணுவையும், பெண்ணுடைய கருமுட்டையையும் சோதனைக் குழாயில் வைத்து வளர்க்கிறார்கள். இரண்டும் கலந்து புதிய மரபணுக்கள் அதில் உருவாகியிருக்கும். குறிப்பிட்ட காலம் வரை குழாயில் வளர்த்து, அதில் உருவான மரபணுவை நீக்கி விட்டு, யாரை குளோனிங் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவருடைய மரபணுவை அந்த இடத்தில் வைக்கிறார்கள். இதன் பிறகு சோதனைக் குழாயில் வளர்த்ததை பெண்ணின் கருவறையில் வைத்து கரு வளர்ச்சி ஏற்படுத்துகின்றனர். சாதாரணமாகக் குழந்தையைப் பெற்றெடுப்பது போல் அக்குழந்தை பெற்றெடுக்கப்படுகிறது.
மனிதனிடம் இது சோதித்துப் பார்த்து நிரூபிக்கப்படாவிட்டாலும் ஆடு, எருமை, பன்றி போன்ற உயிரினங்களில் இதைச் சோதித்து விஞ்ஞானிகள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.
மனிதனைப் பொறுத்த வரை அவனைக் குளோனிங் செய்தால் என்ன விளைவு ஏற்படும் என்பதை விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் அதன் மரபணுவைப் பொறுத்த வரை அதன் வயது 25 ஆகும். எனவே 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பு.
இந்த விபரங்களைக் கவனத்தில் வைத்து, ஈஸா நபியின் பிறப்பு பற்றிக் திருக்குர்ஆன் கூறுவதைச் சிந்தித்துப் பார்ப்போம்.
தந்தையில்லாமல் ஒரு குழந்தையை இறைவன் உருவாக்க நாடினால், ஆகு என்று சொல்லியே அவனால் உருவாக்க முடியும். அப்படியிருந்தும் இறைவன் ஒரு வானவரை மனித வடிவில் அனுப்பி, அந்த வானவர், ஈஸா நபியின் தாயாரான மர்யமிடம் ஊதினார் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் இறைவனின் ஆற்றலால் உருவாக்கப்பட்ட ஒரு மரபணுவை அந்த வானவர் மர்யம் (அலை) அவர்களிடம் ஊதியிருக்கலாம் என்பதையும், எந்த முறையில் குழந்தை உருவாவதாக இருந்தாலும் முடிவில் தாயின் கருவறை அவசியம் என்பதையும் இந்நிகழ்ச்சி நமக்குக் காட்டுகின்றது.
அடுத்ததாக நாம் சிந்திக்க வேண்டிய விஷயம், ஈஸா நபியவர்கள் பிறந்தவுடனே பேசியதாக இதில் கூறப்படுகின்றது. தந்தையில்லாமல் பிறந்ததால் அற்புதம் என்ற அடிப்படையில் பிறந்தவுடன் சில வார்த்தைகளைப் பேசி விட்டு அதன் பிறகு குழந்தைத் தன்மையுடையவராக அவர் இருக்கவில்லை. அவர் குழந்தையாக இருக்கும்போது பேசினார் என்பதுடன் அவரை அப்போதே இறைத்தூதராக ஆக்கியதாகவும் இங்கு கூறப்படுகிறது.
இறைத்தூதர் என்றால், இறைச் செய்திகளைச் சரியாக விளங்க வேண்டும், அதை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை அறிவோம்.
பிறந்தவுடனேயே ஈஸா நபியவர்கள் பேசியதுடன், இறைச் செய்திகளை விளங்கி, மக்களிடம் எடுத்துச் சொல்லும் அளவுக்கு முதிர்ச்சி உடையவர்களாக இருந்தது மனிதக் குளோனிங் பற்றிய விஞ்ஞானிகளின் கருத்துக்கு ஒத்ததாக இருக்கின்றது.
நமது மறுப்பு:-
குழந்தை எவ்வாறு உருவாகிறது?
*இயற்கை முறை:*
ஒரு பெண்ணைப் பொறுத்தவரை ஒரு மாதத்திற்கு ஒரே ஒரு நாள் மட்டுமே அவர் கருவுற இயன்றவளாக இருப்பாள். அன்று அவளது அண்டகத்திலிருந்து ஒரு முட்டை வெளிப்பட்டு ஒரு விந்தணுவுக்காக காத்திருக்கும். அந்த ஒரு நாளில் ஒரு விந்தணு அந்த முட்டையை அடைந்து அதைக் கருவுற செய்தால் மேற்கொண்டு அது குழந்தையாக வளரும்.
பெண்ணின் முட்டையில் முழு மனிதனை உருவாக்குவதற்கான மரபியல் தகவல்கள் இருக்காது. முழு மனிதனுக்கு 46 க்ரோமோசோம்கள் தேவை. ஆனால் பெண்ணின் முட்டையில் 23 க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். மீதி 23 க்ரோமோசோம்களை ஆணின் விந்தணு பெற்றிருக்கும். இந்த இரண்டும் இணையும்போதுதான் ஒரு மனிதனுக்கு தேவையான முழுமையான மரபியல் தகவல்களும் அந்த செல்லுக்கு கிடைக்கும். குறிப்பாக பிறக்கப்போகும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை முடிவு செய்யும் க்ரோமோசோம் ஆணின் விந்தணுவில் மட்டுமே இருக்கும்.
கூடுதல் தகவல்களுக்கு “QSF22. கலப்பு விந்து” & “QSF23. கருக்கலைப்பு” ஆகிய கட்டுரைகளைப் பார்க்க.
*விந்தூட்டம் - Insemination (In vivo fertilization):*
மேற்சொன்ன இயற்கை முறையில் ஓர் ஆண் உடலுறவு மூலமே தனது விந்தை பெண்ணின் (cervix) கருப்பை வாய் வரையில் செலுத்துவான். இவ்வாறல்லாமல் எந்த ஓர் ஆணின் தீண்டுதலும் இல்லாமல் ஒரு பெண் கருத்தரிக்க வேண்டுமென்றால் ஓர் ஆணிடமிருந்து எடுக்கப்பட்ட விந்தை அந்த பெண்ணின் (cervix) கருப்பை வாய் வரைக்கும் அல்லது கருப்பைக்கு உள்ளேயே செலுத்துவது இன்செமிநேசன் எனப்படும். இதன் மூலம் எந்த ஆணின் தீண்டுதலும் இல்லாமேலே ஒரு பெண் கருத்தரிக்க இயலும்.
இம்முறையிலும் ஆணின் விந்தணு தேவை என்பதை குறித்துக்கொள்க. ஆணின் விந்தணுவில் ஆண் குழந்தையை உருவாக்கும் விந்தணுக்களும் இருக்கும் பெண் குழந்தையை உருவாக்கும் விந்தணுக்களும் இருக்கும். நமக்கு எந்த குழந்தை தேவையோ அந்த விந்தணுவை பிரித்தெடுத்து அதன் பின்னர் கருவுற செய்தால் நமக்கு தேவையான பாலினத்தில் குழந்தை கிடைக்கும்.
https://en.wikipedia.org/wiki/In_vivo_fertilization
*சோதனைக் குழாய் கருத்தரித்தல் - In vitro fertilisation*
ஒரு பெண்ணின் முட்டையை அவள் வயிற்றிலிருந்து எடுத்து, ஓர் ஆணின் விந்தணுவையும் எடுத்து, இவற்றை உடலுக்கு வெளியே சோதனைக் குழாயில் வைத்து கருத்தரிக்கச் செய்து, அதை முட்டை எடுக்கப்பட்ட பெண்ணின் கருவறையிலேயே மீண்டும் வைத்து குழந்தை பெற்றுக்கொள்ள இயலும், அல்லது சம்பந்தமே இல்லாத மூன்றாம் பெண்ணின் வயிற்றில் வைத்தும் குழந்தை பெற்றுக்கொள்ள இயலும். இம்முறையிலும் பாலினத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். இம்முறைக்கும் ஆணின் விந்தணு தேவை.
https://en.wikipedia.org/wiki/In_vitro_fertilisation
மேற்சொன்ன இரண்டு முறைகளிலும் ஓர் ஆணின் தீண்டுதல் இல்லாமல் ஒரு பெண்ணைக் கருத்தரிக்க செய்ய இயலும். ஏதோ குறைபாடுகளால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு மேற் சொன்ன இரு முறைகளிலும் மருத்துவம் வழங்கப்படுகிறது. கல்யாணம் செய்யாமல் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்களும் இவ்வாறு செய்கிறார்கள். இது புதிய கண்டுபிடிப்பல்ல. க்ளோனிங் பற்றிய சிந்தை எழுவதற்கு முன்னரே மருத்துவ உலகம் கையாண்டு வரும் முறைகள் இவை.
*க்ளோனிங்:*
clone எனும் ஆங்கில வார்த்தைக்கு நகல் எடுத்தல் என்பதே பொருளாகும்.
க்ளோனிங் என்றால் ஒரு விலங்கின் செல்லை எடுத்து அதிலிருந்து அதே பண்புகளைக் கொண்ட மற்றொரு விலங்கை உருவாக்குவதாகும். க்ளோனிங் என்றால் ஒரு விலங்கைப்போல 100% மரபியலில் ஒத்த இன்னொரு விலங்கை உருவாக்குவதாகும். அதாவது ஓர் ஆட்டை க்ளோனிங் செய்தால் பிறக்கும் ஆட்டுக்குட்டி க்ளோன் செய்யப்பட்ட ஆட்டை மரபியலில் 100% ஒத்திருக்கும். இதுதான் க்ளோனிங். இதை செராக்ஸ் காப்பி என்று சொல்லலாம். ஒன்றைப் போல மற்றொன்றை உருவாக்குவதே க்ளோனிங்.
க்ளோனிங் செய்வதற்கு ஆணின் விந்தணு தேவை இல்லை. ஆனால் பெண்ணின் முட்டை கண்டிப்பாக தேவை. பெண்ணின் கருவுறாத முட்டை குழந்தையாக வளராது. பெண்ணின் முட்டையில் இருக்கும் நியுக்ளியஸ் (கரு) முழுமை அடையாதது. அதில் பாதி குரோமோசோம்கள் மட்டுமே இருக்கும். மீதி குரோமோசோம்களை ஆணின் விந்தணு சுமந்து வரும். பெண்ணின் முட்டையில் இருக்கும் நியுக்ளியஸ் (கரு)வை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக எந்த விலங்கை க்ளோனிங் செய்ய வேண்டுமோ அந்த விலங்கின் ஒரு செல்லில் இருந்து பிரிக்கப்பட்ட நியுக்ளியஸ் (கரு)வை வைத்துவிட்டால் கருவுறாத அந்த முட்டை குரோமொசொம்களின் எண்ணிக்கை முழுமை பெற்ற, முழுமையான ஜெனிடிக் தகவல்களுடன் கூடிய கருவுற்ற முட்டையாகிவிடும். இதனை பின்னர் அந்த பெண் விலங்கின் கருவறையில் வைத்து வளர்ப்பார்கள். இதுவே க்ளோனிங். இந்த க்ளோனிங் ஒரே குடும்பத்தை சேர்ந்த விலங்குகளில் மட்டுமே செய்ய இயலும். அதாவது எருமை மாட்டை க்ளோனிங் செய்து பசு மாட்டின் வயிற்றில் வளர்க்க இயலும். ஆனால் ஆட்டின் வயிற்றிலோ குரங்கின் வயிற்றிலோ வளர்க்க இயலாது.
க்ளோனிங் செய்ய விந்தணு தேவையில்லை என்று பார்த்தோம். யாரிடமிருந்து செல் எடுக்கப்பட்டதோ (donor) அவரைப் போலவே பிறக்கும் குட்டியும் இருக்கும், பாலினம் உட்பட. க்ளோனிங் முறையில் பிறக்கும் குட்டி ஆணாக இருக்க வேண்டும் என்றால் செல்லை தானம் செய்யும் donor ஆணாக இருக்க வேண்டும். ஒரு ஆணிடமிருந்து செல்லை எடுத்தால் மட்டுமே பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும். இதையும் கவனத்தில் கொள்க.
க்ளோனிங் மூலம் வெற்றிகரமாக ஒரு குட்டி பிறந்து வளர்ந்து நோயில்லாமல் இயற்கையாக இறந்தால் அது உடலுறவு மூலம் மூலம் பிறந்த சாதாரண குட்டிகளை போலவே ஒவ்வொரு பருவத்தையும் கடந்து வளரும். இறக்கப்போகும் அளவுக்கு முதுமை அடைந்த விலங்கின் செல்லில் இருந்து க்ளோன் செய்யப்பட்டாலும் பிறந்த குட்டி அந்தந்த பருவத்தில் என்னென்ன வளர்ச்சியும் அறிவும் இருக்க வேண்டுமே அந்தந்த வளர்ச்சியும் அறிவும் இருக்குமே தவிர பிறந்த உடனே அது Donor செல் எடுக்கப்பட்ட விலங்கின் அறிவைக் கொண்டதாகவோ அல்லது முதிர்ச்சி கொண்டதாகவோ இருக்காது.
க்ளோனிங் மூலம் பிறந்த குட்டிகள் அவற்றின் சராசரி வயதுக்கு முன்னரே விரைவாக இறந்தன. donor செல்லின் மரபணு வயதிலேயே குட்டியின் மரபணு வயதும் இருக்கலாம் என்றும் இதன் காரணமாகவே அவை விரைவில் இறப்பதாக ஆரம்பதில் சில விஞ்ஞானிகள் கருதினர். பின்னர் அது உண்மையல்ல என்று கண்டறியப்பட்டது.
*முடிவுரை:*
👉 அல்லாஹ் உருவாக்கிய ஒரு விந்தணுவை ஜிப்ரீல் அலை அவர்கள் ஊதி இருக்கலாம், அல்லது முட்டையில் இல்லாத, மீதமுள்ள 23 க்ரோமோசோம்களை ஊதி இருக்கலாம். இத்தனை எளிமையான ل கள் இருக்கும்போது ஏன் க்ளோனிங்-கான லாமை மட்டும் தஃப்ஸீர் எடுத்து வரவேண்டும்?
👉 ஆண் துணை இல்லாமல் மர்யம் அலை அவர்கள் கருவுற்றதில் க்ளோனிங்-கான முன்னுதாரணம் இருப்பதாக தஃப்ஸீர் வாதிடுகிறது. ஆண் துணை இல்லாமல் கருத்தரித்ததில் க்ளோனிங்-கான முன்னுதாரணம் இருப்பதாக ஏன் கருத வேண்டும்? Artificial Inseminationக்கு முன்னுதாரணம் இருப்பதாக கருத இயலுமே? அல்லது In vitro fertilizationக்கு முன்னுதாரணம் இருப்பதாக கருத இயலுமே. தஃப்ஸீர் ஏன் க்ளோனிங்ஙை எடுத்து வந்தது?
👉 Artificial Insemination, In vitro fertilization போன்ற முறைகளில் ஆணின் விந்தணு தேவை. ஆணின் விந்தணு தீண்டுவதென்ன ஆண் தீண்டுவதென்ன இரண்டும் ஒன்றுதான் என்றொரு வாதம் எழலாம். க்ளோனிங் செய்யும்போது ஆணின் விந்தணு தேவையில்லை என்றும் வாதிட இயலும். ஆனால் ஆண் குழந்தை வேண்டுமெனில் ஆணின் செல் கட்டாயம் வேண்டும். ஆக ஆணாக இருக்கும் ஈசா நபியை க்ளோனிங் உடன் ஒப்பிட்டு விட்டு அங்கே ஆணின் பங்கே இல்லை என்று சொல்ல இயலாது. ஈசா நபியின் பிறப்பில் க்ளோனிங்-கான முன்னுதாரணம் இருப்பதாக வாதிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
👉 க்ளோனிங் என்பதே மரபியலில் ஒத்த நகலை உருவாக்குவதுதான். க்ளோனிங் மூலம் பிறந்த செராக்ஸ் காப்பி குட்டி ஒன்று இருக்கிறதென்றால் அதன் ஒரிஜினல் பதிப்பாக ஒரு விலங்கு இருப்பதாக பொருள். ஈசா நபியை க்ளோனிங் உடன் ஒப்பிட்டால் காப்பியாக இருக்கும் ஈசா நபியின் ஒரிஜினல் பதிப்பான அந்த ஆண் யார் எனும் கேள்வி எழுகிறது.
👉 ஈசா நபி குழந்தையாக இருக்கும்போது பேசியதையும் க்ளோனிங் மூலம் பிறக்கும் குட்டிகளின் DNA வின் வயது Donor செல்லின் DNA வயதாகவே இருக்கும் எனும் கற்பனையையும் ஒப்பிடுகிறது தஃப்ஸீர். க்ளோனிங் முறையில் பிறக்கும் குட்டிகள் வெகு சீக்கிரமாகவே இறந்து போவதற்கு Donor செல்லின் வயது கொண்ட மரபியில் பண்புகளில் குட்டியும் பிறப்பதே காரணம் என்று ஆரம்பத்தில் அறிவியலாளர்கள் சந்தேகம் கொண்டனர். ஆனால் //25 வயதுடைய ஒருவரது மரபணுவை எடுத்து குளோனிங் செய்து ஒரு குழந்தையை உருவாக்கினால் அது வடிவத்தில் குழந்தையாக இருந்தாலும் 25 வயதுடையவனின் அறிவும், சிந்தனையும் அந்தக் குழந்தைக்கு இருக்கும்// என்று எந்த முட்டாள் விஞ்ஞானியும் எந்த காலத்திலும் கணிக்கவே இல்லை. மேலும் விஞ்ஞானிகளுக்கு எழுந்த சந்தேகம் வெறும் சந்தேகம் மட்டுமே. முதல் வெற்றிகரமான, பிரபலமான செம்மறி ஆட்டு க்ளோனிங் டோலி-யை க்ளோன் செய்த கீத் கேம்பெல் அவர்களின் நண்பர் மற்றொமொரு க்ளோனிங் ஆய்வாளர் ஜோஸ் சிபெல்லி, எந்த விலங்கை க்ளோன் செய்தார்களோ அதே விலங்கின் வயதில் தான் குட்டி இருக்கும் என்பதை மறுத்து அறிவியல் ஆதாரங்களுடன் அளித்த பேட்டி http://theconversation.com/more-lessons-from-dolly-the-sheep-is-a-clone-really-born-at-age-zero-73031
👉 க்ளோனிங் என்பது எந்த காலத்திலும் வெற்றிபெறாத வெற்றிபெறப்போகாத ஒரு தொழில்நுட்பம். க்ளோனிங் முறையில் முதலில் பிறந்த டோலி ஆடு அதற்கு முன்னர் 277கரு நிலையில் இறந்த பிறகே பிறந்தது. 100க்ளோனிங் முயற்சிகளில் 10முயற்சிகள் மட்டுமே குட்டியாக பிறக்கின்றன. அவற்றில் 8 சிறு வயதிலேயே இறந்துவிடுகின்றன. மீதம் இருக்கும் இரண்டும் மரபியல் கோளாறுகளுடனேயே வாழ்கின்றன. என்ன முயற்சிசெய்தாலும் மரபியில் கோளாறுகள் இல்லாத க்ளோனிங் மிருகங்களை உருவாக்கவே முடியாது.
👉 வழக்கம்போல விடையை எழுதிவிட்டு கேள்வியைத் தேடியுள்ளார்கள்.
பார்க்க https://www.fda.gov/animal-veterinary/animal-cloning/myths-about-cloning