இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
QSF21. மீன்களை அறுக்காமல் உண்பதற்கு அறிவியல் காரணம் உள்ளதா?
தப்சீர் குறிப்பு 505. மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்?*
இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர்.
மீன் அல்லாத உயிரினங்களை அறுக்க வேண்டும்; மீனை அறுக்காமல் உண்ணலாம் என்ற வேறுபாட்டுக்குக் காரணம் என்ன? என்று சந்தேகம் சிலருக்கு உள்ளது.
நீர் வாழ் உயிரினங்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. நீர்வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை. இஸ்லாமிய நம்பிக்கையின்படி ஓட்டப்படும் இரத்தம் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே தான் ஆடு, மாடு போன்ற உயிரினங்களை அறுக்கும்போது வெளியாகும் இரத்தத்தை உண்ணக் கூடாது. ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது. இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும்போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மீன்களுக்கு ஓடக் கூடிய இரத்தம் இல்லாததால் அறுத்தாலும் அதிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடாது. தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுருவும் இரத்தம் மீன்களில் இல்லை. எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.
∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙
மறுப்புக்கு செல்லும் முன்னர் ரத்த ஓட்டம் என்றால் என்னவென்று தெரிந்துகொள்வோம்:-
ரத்த ஓட்டம் என்பது உணவிலிருந்து குடல் மூலம் பிரிக்கப்பட்ட உணவுகளையும், நுரையீரலில் இருந்து பிரிக்கப்பட்ட ஆக்சிஜனையும், நாளமில்லா சுரப்பிகள் சுரக்கும் முக்கியமான ஹார்மோன்களையும் தண்ணீரையும் இன்னபிற முக்கியமான பொருட்களையும் உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் கொண்டு சேர்க்கும் உடலின் போக்குவரத்துத் துறை ஆகும். உடலின் தோல் பகுதி முதல் அதற்குக் கீழே இருக்கும் சதைப் பகுதிக்கும் இன்னும் உடலின் அனைத்து செல்களுக்கும் இந்த ரத்தம் செல்கிறது. நல்ல ரத்தத்தை எடுத்துச் செல்லும் தமனிகள் ஒவ்வொரு செல்களுக்கும் ரத்தத்தில் இருக்கும் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு செல்கின்றன. அந்த செல்கள் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடையும் இன்ன பிற கழிவுப் பொருட்களையும் சிரை எனும் ரத்தக்குழாய் மூலம் வெளியேற்றுகிறது. இந்த கெட்ட ரத்தத்தை ரத்த ஓட்டம் மீண்டும் நுரையீரலுக்கு எடுத்துச் சென்று அங்கே கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது. சிறுநீரகத்திற்கு எடுத்துச் சென்று அங்கே கழிவுகளை வெளியேற்றுகிறது. இவ்வாறு ஒரு பெரிய ரயில்வே துறை போல உடலின் ஒவ்வொரு செல்களுக்கும் பலவித பொருட்களைச் சுமந்து செல்கிறது ரத்தம். இந்த ரத்தம் எங்குமே நிற்பதில்லை ஓடிக்கொண்டே இருக்கிறது. பெரிய ரத்தக் குழாயில் ஓடும் அதே ரத்தம்தான் தசைகளுக்கு இடையே இருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறு ரத்தக் குழாய்களிலும் ஓடுகிறது. பெரிய ரத்தக்குழாய்களில் ஓடும் ரத்தத்தில் கிருமிகள் இருந்தால் அவை தசைகளுக்கு இடையே ஓடும் சிறு ரத்தக் குழாய்களிலும் இருக்கும். ரத்தத்தில் ஓடும் ரத்தம், நிற்கும் ரத்தம் என்றோ குழாய்களில் ஓடும் பெரிய ரத்தம், தசைகளில் ஓடும் சிறு ரத்தம் என்றோ பாகுபாடுகள் கிடையாது. சோதனை சாலைகளில் ஒரு சொட்டு ரத்தம் தேவைப்பட்டால் விரல் நுனியைக் குத்தி எடுப்பார்கள். நிறைய ரத்தம் தேவைப்பட்டால் ரத்த நாளங்களிலிருந்து எடுப்பார்கள். இரண்டும் ஒரே ரத்தம் தான்.
*//ஆடு, மாடு போன்றவை உயிருடன் இருக்கும்போது அறுத்தால் மட்டுமே அதிலிருந்து இரத்தம் வெளிப்படும். செத்த பிறகு அறுத்தால் இரத்தம் வெளிப்படாது. எனவே அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது இரத்தத்தையும் சேர்த்து சாப்பிடும் நிலை ஏற்படுகிறது.//*
எவ்வித ஆதாரமும் ஆய்வுமில்லாமல் எழுதப்பட்ட விளக்கம் ஆகும். நம் கண்களுக்குத் தெரியும் பெரிய ரத்த நாளங்களுடன் முடிந்துவிடுவதில்லை ரத்த ஓட்டம். ஒவ்வொரு செல்களுக்கும் ரத்தம் செல்கிறது. அறுக்கப்பட்ட மாடு அல்லது ஆட்டின் தனி இறைச்சியை மட்டுமே எடுத்துக் கழுவிப்பாருங்கள். நீரில் கழுவக் கழுவ ரத்தம் வந்துகொண்டே இருக்கும். தசையிலும் ரத்தம் இருப்பதே இதற்குக் காரணம். கோழி கூட விதிவிலக்கல்ல. கோழியின் கால் அல்லது தொடைப் பகுதியை உண்ணும்போது அதன் எலும்புடன் ஒட்டிய பகுதி கருப்பாக இருப்பதைக் காணலாம். அது இரத்தமாகும். கோழியில் கால் அல்லது தொடைப்பகுதியை எண்ணெய்யில் பொரிக்கும்போது இந்த ரத்தம் வெளியே வடிவதைக் கண்கூடாக காணலாம். அறுக்கப்பட்ட விலங்குகளிலும் நிறைய ரத்தம் தசைகளிலும் எலும்பு மற்றும் தசைகளுக்கு இடைப்பட்ட பகுதிகளுக்குள்ளும் தேங்கி இருக்கும்.
*//இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது. இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும்போதும் ஏற்படும் என்பதை யாரும் மறுக்க முடியாது.//*
இது எவ்வித ஆதாரமும் இல்லாத கற்பனையாகும். கிருமிகள் என்பது ரத்தத்தில் மட்டுமே இருப்பதில்லை. ரத்தத்தில் இருக்கும் கிருமிகள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும் என்று நினைத்தால் கூட தசைகளிலும் ரத்தம் இருக்கும் என்பதைப் பார்த்தோம். அறுத்துக்கொன்றாலும் தசைகளில் இருக்கும் ரத்தத்தை எதுவும் செய்ய இயலாது. எவ்வளவு கழுவினாலும் அதில் ரத்தம் இருக்கும். அதையும் சேர்த்தே நாம் சாப்பிடுகிறோம். தஃப்ஸீர் சொல்வதைப் போன்று இரத்தத்தைச் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் அனைத்தும் அந்த இறைச்சியைச் சாப்பிடும்போது ஏற்பட்டிருக்க வேண்டும்.
“தசையில் சிறிதளவு ரத்தம் மட்டுமே இருக்கும். அறுக்காமல் உண்டால் அதிக அளவு ரத்தம் இருக்கும்” என்று வாதிட்டால் அதுவும் அறிவுடைமை ஆகாது. நோயை உருவாக்குவதற்கு 2 லிட்டர் கிருமி ரத்தம் தேவையில்லை. ஒரு சொட்டுகூட தேவையில்லை. சில காய்ச்சல்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுவதைப் பார்க்கிறோம். அவர் தும்மி இருப்பார் அல்லது கை குலுக்கி இருப்பார். இந்த சந்திப்பில் எத்தனை லிட்டர் ரத்தம் பரிமாறப்பட்டிருக்கும்? நோய்த் தொற்றைப் பொறுத்தவரையில் பலவீனமான கிருமிகள் எனில் 10 கோடி எனும் எண்ணிக்கையில் அவை நம் உடலிலிருந்தால் நோயை ஏற்படுத்தும். ஆனால் அதிவேக கிருமிகள் பத்து இருந்தால் போதுமானது ஒருவரைப் பாதிப்புக்குள்ளாக்கிவிடும்.
அறுத்துக் கொன்றால் ரத்தம் வெளியேறி மாமிசம் சுத்தமாகிவிடும் என்பதும் அறுக்காமல் வேறு விதமாகச் செத்தால் அவற்றில் கிருமிகள் இருக்கும் என்பதும் அறியாமை ஆகும். ரத்தம் இருந்தாலும் இறைச்சியை நன்றாக வேகவைத்தால் அதிலுள்ள கிருமிகள் இறந்துவிடும். இவ்வாறுதான் நாம் சுகாதாரமாக இருக்கிறோம். அதிக விளக்கங்களுக்கு “QSF20. பன்றியை உண்ணத் தடை” ஐப் பார்க்க்கவும்.
*//நீர்வாழ் உயிரினங்களுக்கு ஓடுகின்ற இரத்தம் கிடையாது. அதை உயிருடன் பிடித்து அறுத்தாலும் அதில் இரத்தம் சிறிதளவு கசியுமே தவிர இரத்தம் ஓடாது. வடிவது கூட இல்லை.//*
*//மீன்களுக்கு ஓடக் கூடிய இரத்தம் இல்லாததால் அறுத்தாலும் அதிலிருந்து இரத்தம் பீரிட்டு ஓடாது. தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுருவும் இரத்தம் மீன்களில் இல்லை. எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை.//*
6:145. "தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று கூறுவீராக!
மேலுள்ள இந்த வசனத்தைக் கொண்டுதான் கடல் உயிரினங்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் வித்தியாசம் இருப்பதாக தஃப்ஸீர் பேசுகிறது. விலங்கினங்களை அறுத்து உண்ண வேண்டும் என்கிறது மார்க்கம். அவ்வாறு விலங்கினங்களை நாம் அறுக்கும்போது அவற்றின் ரத்தம் பீரிட்டு ஓடுவதைப் பார்க்கிறோம். அத்தகைய ரத்தம் நமக்கு ஹராம். எனவே ஹராமான அந்த ரத்தத்தை வெளியேற்றுவதற்காகவே மார்க்கம் நம்மை அறுக்கச் சொல்வதாகக் கணக்கிட்டு விளங்கியுள்ளது தஃப்ஸீர். மார்க்கம், மீன்களை அறுக்க சொல்லவில்லை. எனில் ஏற்கனவே கணக்கிட்டபடி அறுவைக்கும் அறுக்கத் தேவையின்மைக்கும் இடையே இருப்பது ரத்தம் தான். மீனின் ரத்தத்தில் தான் விஷயம் உள்ளது என்று அந்த கோணத்தில் ஆய்வை செலுத்தி மேலுள்ளவாறு முடிவுக்கு வந்துள்ளது இந்த தஃப்ஸீர். இந்த ஒரு முடிவுக்கு வந்துவிட்டதால் மீன்களின் ரத்தம் வேறு ஆடு மாடுகளின் ரத்தம் வேறு என்று பிரிக்கும் நிலைக்கு தஃப்ஸீர் தள்ளப்பட்டு அதற்கேற்றாற்போல் மேற்கொண்டு விளக்கங்கள் செல்கின்றன.
2827 - حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، ح وحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ مُجَالِدٍ، عَنْ أَبِي الْوَدَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْجَنِينِ فَقَالَ: «كُلُوهُ إِنْ شِئْتُمْ». وَقَالَ مُسَدَّدٌ: قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ نَنْحَرُ النَّاقَةَ، وَنَذْبَحُ الْبَقَرَةَ وَالشَّاةَ فَنَجِدُ فِي بَطْنِهَا الْجَنِينَ أَنُلْقِيهِ أَمْ نَأْكُلُهُ؟ قَالَ: «كُلُوهُ إِنْ شِئْتُمْ فَإِنَّ ذَكَاتَهُ ذَكَاةُ أُمِّهِ»
[حكم الألباني] : صحيح
5889 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، مَوْلَى ثَقِيفٍ، حَدَّثَنَا [ص:207] عَلِيُّ بْنُ أَنَسٍ الْعَسْكَرِيُّ، حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي الْوَدَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «ذَكَاةُ الْجَنِينِ ذَكَاةُ أُمِّهِ»
[تعليق شعيب الأرنؤوط] :حديث صحيح
“அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகத்தையும் ஆட்டையும் மாட்டையும் (அது சூல் கொண்டிருப்பதை அறியமால்) நாங்கள் அறுக்கிறோம், பின்னர் அதன் வயிற்றில் (அறுக்காமல் இறந்த நிலையில் குட்டியை) காண்கிறோம். நாங்கள் அதை உண்ணலாமா அல்லது வீசிவிடவேண்டுமா?” என்று கேட்டோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் விரும்பினால் உண்ணுங்கள். தாயை அறுப்பது குட்டியையும் அறுத்ததாகும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ சயீத் (ரலி)
நூற்கள்: திர்மிதீ அஹ்மத், அபூ தாவூத், இப்னு மாஜா, இப்னு ஹிப்பான்,
ரத்தம் ஓட்டப்படுவதுதான் பிராணிகளை அறுப்பதற்கான ஒரே காரணம் என்றால் இங்கே ரத்தம் ஓட்டப்படாத இறந்த கன்றுக்குட்டி எவ்வாறு ஹலால் ஆகிறது?
மீன்களுக்கும் ரத்த ஓட்டம் உள்ளது. எவ்வாறு கால்நடைகளின் ஒவ்வொரு செல்களுக்கும் ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை ரத்தம் கொண்டு செல்கிறதோ அதே போல மீன்களுக்கும் ஒவ்வொரு செல்களுக்கும் ரத்தம் மூலமே ஆக்சிஜனும் உணவுப் பொருட்களும் எடுத்து செல்லப்படுகின்றன. மீன்களின் ரத்தத்தில் நோய்க் கிருமிகள் இருந்தால் அது தசைகளையும் சென்றடையும். //தானாகச் செத்தாலும் சதை வரை ஊடுருவும் இரத்தம் மீன்களில் இல்லை// என்பதெலாம் ஆதாரமற்ற கற்பனை ஆகும்.
மீன்களின் இறைச்சி சிவப்பாக இல்லாமல் வெள்ளையாக இருப்பதும் இதுபோன்ற குழப்பம் ஏற்பட காரணமாக இருக்கலாம். மீன்களின் தசைகள் fast-twitch எனப்படும் தசை நார்களால் ஆனவை. மற்ற விலங்குகளின் தசைகள் slow-twitch எனப்படும் தசை நார்களால் ஆனவை. விலங்குகளின் slow-twitch தசைகள் மயோக்லோபின் எனும் அணுக்கள் மூலம் ஆக்சிஜனை சேமிக்கின்றன. மயோக்லோபின் அளவைப் பொருத்து தசைகள் சிவப்பாகக் காட்சியளிக்கும். மீன்களின் fast -twitch தசைகள் க்ளைகொஜென் எனும் அணுக்களில் ஆக்சிஜனை சேமிக்கின்றன. இந்த அணுக்களுக்குச் சிவப்பு நிறம் இல்லை. இதனாலும் மீன்கள் பிடிக்கப்பட்டுப் பல மணி நேரங்களுக்குப் பிறகு அறுக்கப்படும்போது ரத்தம் உறைந்துவிடுவதாலும் மீன்களை அறுக்கும்போது வெண்ணிற தசையையே பார்க்கிறோம்.
இந்த வீடியோவில் உயிரோடு இருக்கும் ஒரு மீனை அறுக்கிறார் https://youtu.be/jXMNbp1_4z0 இந்த வீடியோவில் இறந்த மீனை அறுக்கிறார் https://youtu.be/BPesTllCRYY உயிரோடுள்ள மீனை முழுமையாக அறுக்காதபோதே அதிலிருந்து எவ்வளவு ரத்தம் வெளியேறுகிறது. இறந்த மீனில் எந்த ரத்தமும் வெளியேறவில்லை. // இரத்தத்தில் மனிதன் உட்கொள்ளக் கூடாத அணுக்களோ, கிருமிகளோ இருக்கலாம். பிராணிகள் செத்தவுடன் இரத்தம் உறைய ஆரம்பித்து விடுகிறது. இரத்தத்தில் வாழ முடியாத கிருமிகள் மற்ற பகுதிகளுக்கும் பரவி விடுகிறது // தப்சீரின் இந்த வாதம் மீன்களுக்கு ஏன் பொருந்தாது? நிச்சயமாகப் பொருந்தும்.
6:145 வசனத்தில் அல்லாஹ் தடுத்திருப்பது மிருகங்களை அறுக்கும்போது வெளிப்படும் ரத்தத்தைப் பிடித்து அதை உணவாக உட்கொள்வதையே ஆகும். பொதுவாக ரத்தம் ஹராம் என்றிருந்தால் நாம் எந்த மாமிசத்தையும் சாப்பிட இயலாமல் போயிருக்கும். ஏனெனில் நாம் சாப்பிடும் கோழி ஆடு மாடு அனைத்தின் மாமிசத்திலும் நம்மால் சுத்தம் செய்ய இயலாத பெருமளவு ரத்தம் காணப்படுகிறது. கோழியைப் பொரிக்கும்போது ரத்தம் வடிவதைக் கண்கூடாகக் காண இயலும். ஆடு அல்லது மாட்டிறைச்சியைத் தனியாக நீரில் அவிக்கும்போதும் நீரின் மேல்பகுதியில் கருப்பு நிறத்தில் ரத்தம் மிதப்பதைக் காண இயலும். அறிந்துகொண்டே இந்த ரத்தத்தை ஏன் நாம் வேகவைத்தும் பொரித்தும் உண்கிறோம்? ரத்தமே ஹராம் என்றால் இந்த ரத்தமும் ஹராம் ஆகும். ரத்தத்தை ஹராமாக்க அல்லாஹ் சொல்லாத காரணத்தை நாம் சொல்லும்போது அந்த வரையறைக்குள் இந்த ரத்தமும் வந்து விடுவதை நாம் அறியாததைப்போல் கடந்து செல்கிறோமே?
அவ்வாறல்ல... நுண்ணறிவாளன் அல்லாஹ் ரத்தம் ஹராம் என்று ஆக்கியிருந்தால் தசைகளுக்கு இடையே இருக்கும் ரத்தத்தையும் நாம் சேர்த்துச் சாப்பிட இயலாமல் ஆகியிருக்கும். கருணையாளன் அல்லாஹ் “ஓட்டப்பட்ட இரத்தம்” என்று பிரித்துச் சொல்லி தசைகளுக்கு இடையே இருக்கும் ரத்தத்தை உண்பதில் தடையில்லை என்று சொல்லிவிட்டான்.
மேலும் இரத்தப் பொரியல் என்று நமது ஊரிலும் ரத்த சாசேஜ் என்று வெளிநாடுகளில் ரத்தத்தைச் சமைத்து உண்பவர்களை நாம் காண்கிறோம். அவர்கள் ஆரோக்கியமாக வாழ்வதைக் காண்கிறோம். இன்றுவரை ரத்தத்தைச் சமைத்து உண்பதில் தீங்கு இருப்பதாக எந்த அறிவியலும் சொல்லவில்லை. நாமாக வரிந்துகட்டிக்கொண்டு அல்லாஹ் சொல்லாத காரணங்களைச் சொன்னால் பாரிய விபரீதங்கள் ஏற்படும். அறிவியலைக் கொண்டு எந்த உணவையும் ஹலால்/ஹராம் என்று நிறுவ இயலாது.
விலங்குகளை ஏன் அறுத்து உண்ண வேண்டும் மீன்களை ஏன் அறுத்து உண்ணத் தேவையில்லை என்று மார்க்கம் சொல்லவில்லை. இந்த தஃப்ஸீர் விளக்கங்களும் அறிவுக்கும் அறிவியலுக்கும் எட்டாதவையாக உள்ளன. இந்நிலையில் //எனவே தான் மீனை அறுக்குமாறு இஸ்லாம் கூறவில்லை// என்று கூறுவது அல்லாஹ்வின் அதிகாரத்தைக் கையில் எடுப்பதாகும்.
ஆதாரங்கள்:-
மீன்களுக்கும் ரத்த ஓட்டம் உள்ளது https://en.wikipedia.org/wiki/Fish_physiology#Circulation.
மீன்களுக்கும் ரத்த ஓட்டம் உள்ளது http://scienceline.ucsb.edu/getkey.php?key=5563
நிறமில்லா ரத்தத்தை உடைய மீன்கள் https://www.sciencefocus.com/nature/why-do-some-fish-have-colourless-blood/
ரத்த ஓட்டம் என்றால் என்ன? https://en.wikipedia.org/wiki/Circulatory_system
மீன்களின் தசைகளில் ரத்தம் காணப்படாதது ஏன்? https://www.exploratorium.edu/cooking/meat/INT-what-meat-color.html
மீன்களின் ரத்தத்தில் நோய்க்கிருமிகள் உள்ளன https://en.wikipedia.org/wiki/Fish_disease_and_parasites