இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
QSF19. மீன் வயிற்றில் இருந்த 90% ஆக்சிஜனை சுவாசித்து யூனுஸ் நபி உயிர்வாழ்ந்தார்களா?
தப்ஸீர் குறிப்பு:- 395. மீன் வயிற்றில் மனிதன் உயிருடன் இருக்க முடியுமா?
இவ்வசனங்கள் (37:142, 21:87, 68:48) யூனுஸ் நபி அவர்கள் சில நாட்கள் மீன் வயிற்றில் சிறைவைக்கப்பட்டதாகக் கூறுகின்றன.
மீன் வயிற்றுக்குள் மனிதன் எப்படி உயிருடன் இருக்க முடியும்? ஆக்ஸிஜன் இல்லாமல் மனிதன் செத்துவிடுவானே என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இறைவன் நாடினால் இது போன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும் என்றாலும் மீன் வயிற்றில் யூனுஸ் நபியவர்கள் உயிருடன் இருந்ததற்கு அறிவியல் சாத்தியம் உள்ளது என்பதைக் கூடுதல் தகவலாகத் தருகிறோம்.
மனிதனை விழுங்கும் அளவில் கடலில் ஒரு மீன் உள்ளது என்றால் அது திமிங்கலம் என்ற மீன்தான்.
கடலில் உள்ள பல்வேறு திமிங்கலங்களில் நீலத் திமிங்கலம் என்ற ஒரு வகை உண்டு. இத்திமிங்கிலத்தின் நாக்கில் 50 பேர் உட்காரக்கூடிய அளவு இடமிருக்கும். இத்தகைய திமிங்கிலத்திடம் மூர்க்கமான குணங்கள் கிடையாது. இவை மிகவும் சாதுவானவை ஆகும்.
நாக்கில் மட்டும் ஐம்பது பேர் அமர முடியும் என்றால் அதன் வயிற்றுப் பகுதி எவ்வளவு பிரம்மாண்டமாக இருக்கும் என்று நாம் ஊகம் செய்து கொள்ளலாம்.
திமிங்கலம் மற்ற மீன்களில் இருந்து மாறுபட்ட படைப்பாகும். இது மீன் இனமாக இருந்தாலும் இது விலங்கினங்களைப் போல் தனது குட்டிகளுக்குப் பாலூட்டக் கூடிய உயிரினமாகும்.
மேலும் மீன்கள் தமது செவுள்களால் சுவாசிக்கின்றன. ஆனால் திமிங்கலங்கள் மனிதனைப் போன்ற நுரையீரல்களைக் கொண்டுள்ளதால் தமது நுரையீரல்களால் சுவாசிக்கக் கூடியவை. நீரின் மேல்மட்டத்துக்கு வந்து தேவையான காற்றை உள் இழுத்துக் கொள்ளும். நீருக்கு அடியில் மூச்சுவிடாமல் இரண்டு மணி நேரம் கூட மூச்சடக்கிக் கொள்ளும். மனிதர்கள் சுவாசிக்கும்போது காற்றில் இருந்து 15 சதம் ஆக்ஸிஜனை உள் இழுக்கிறோம், ஆனால் திமிங்கலங்கள் காற்றில் இருந்து 90 சதம் ஆக்ஸிஜனை உள் இழுத்துக் கொள்வதால் 7000 அடி ஆழம் சென்றாலும் இவற்றால் நீண்ட நேரம் மூச்சடக்க முடிகிறது.
திமிங்கலத்தின் இந்த தனித்தன்மையைக் கவனத்தில் கொண்டால் அவை சுவாசித்து உள்ளே சேமித்துக் கொள்ளும் ஆக்ஸிஜன் அதன் வயிற்றுக்குள் இருந்த யூனுஸ் நபி சுவாசிக்க போதுமானதாகும். ஆக்ஸிஜன் முடியும் நேரத்தில் அவை நீருக்கு மேல் தலையை நீட்டி காற்றை உள் இழுத்துக் கொள்ளும் அவசியம் உள்ளதால் யூனுஸ் நபிக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வழியில்லை.
ஒரு கண்ணாடி அறையில் வெளிக்காற்று புகாமல் அடைத்து ஒருவரை உள்ளே வைத்தால் அந்த அறைக்குள் இருக்கும் காற்றே சில மணி நேரங்கள் அந்த மனிதன் சுவாசிக்கப் போதுமானதாகும். திமிங்கலம் உள்ளிழுக்கும் காற்றில் அதிக ஆக்ஸிஜன் இருப்பதால் யூனுஸ் நபி மீன் வயிற்றில் உயிருடன் இருந்தது அறிவியலுக்கு உடன்பாடானது தான். இதில் அறிவியல் பூர்வமாக கேள்வி கேட்க வழியில்லை. இன்னும் சொல்வதாக இருந்தால் கடலில் இது போன்ற தனித்தன்மை வாய்ந்த மீங்களும் உள்ளன என்ற அறிவியல் முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.
∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙
நமது மறுப்பு:-
இந்த தப்சீர் குறிப்பு பின்வரும் லிங்கில் இருக்கும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு பல அறியாமைகளை சேர்த்து எழுதப்பட்டதாகும்.
திமிங்கிலம் - தமிழ் விக்கிப்பீடியா (wikipedia.org)
கற்பனை : 1
காற்றில் 20% ஆக்சிஜன் இருப்பதாக நாம் பாலபாடத்தில் படித்திருக்கிறோம். மனிதன் ஒரு லிட்டர் ஆக்சிகனை உள்ளே இழுக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அதில் 200மில்லி ஆக்சிஜன் இருக்கும். இந்த 200மில்லி ஆக்சிஜனில் 15% ஆக்சிஜனை மட்டுமே மனிதனின் நுரையீரல் கிரகிக்கும் என்று மேலுள்ள லிங்க் சொல்கிறது. அதாவது 30மில்லி ஆக்சிஜனை மட்டுமே மனித உடல் எடுத்துகொள்ளும்.
ஆனால் நீலத்திமிலங்கத்தின் நுரையீரல் அந்த 200மில்லி ஆக்சிஜனில் 180மில்லி ஆக்சிஜனையும் கிரகித்துக்கொள்ளும். கிரகித்துக்கொண்ட ஆக்சிஜனை அது வயிற்றில் சேமித்து வைத்துக்கொள்ளுமா?இல்லை !
http://scienceline.ucsb.edu/getkey.php?key=1009
A whale's lungs work like ours do, but they make the most of each breath. In one breath, a humans body can absorb about 15 percent of the oxygen inhaled. The whale, on the other hand, absorbs as much as 90 percent of the oxygen it breathes in. Whales store this excess of oxygen in myoglobin, a special protein cell found in muscles. Whales have greater amounts of myoglobin than other animals, allowing them to store larger amounts of oxygen at a time.
மனிதனாக இருந்தாலும் மற்ற விலங்குகளாக இருந்தாலும் அவை உள்ளிழுக்கும் ஆக்சிஜன் myoglobin மயோக்ளோபின் எனப்படும் ப்ரோடீனில் சேமிக்கப்படுகிறது. இந்த ப்ரோடீன் மனிதனின் தசையில் இருக்கும் அளவை விட நீலத்திமிங்கலத்தின் தசையில் அதிக அளவு காணப்படுகிறது. இவ்வாறு அதிக ஆக்சிஜனை சேமித்துக்கொண்டு நீலத்திமிங்கலம் அதிக நேரம் நீருக்குள் இருக்க முடிகிறது. தசையில் சேமிக்கப்படும் இந்த ஆக்சிஜனை வயிற்றில் இருக்கும் மனிதனால் அவனது மூக்கு வழியாக சுவாசிக்கவே இயலாது.
கற்பனை : 2
மனிதனின் உணவுக்குழலும் சுவாசக்குழலும் ஒன்றுதான். மனிதன் சுவாசிக்கும்போது மனிதன் உள்ளிழுக்கும் காற்று நுரையீரல்களை சென்றடையும் அதே வேளையில் வயிற்றின் ஆரம்ப பகுதிக்கும் செல்கிறது. நாம் மூச்சை வெளியே விடும்போது வயிற்றில் ஆரம்ப பகுதில் இருக்கும் காற்றும் வெளியேறுகிறது. ஆனால் நீலத்திமிங்கலத்தைப் பொறுத்தவரையில் சுவாசக்குழாய் வேறு உணவுக்குழாய் வேறு. மூக்கு நேரடியாக நுரையீரலுடன் மட்டுமே இணைந்திருக்கிறது. நீலத்திமிங்கலத்தின் வயிற்றுப் பகுதியில் எந்த காற்றும் இல்லை. மீன் உட்கொண்ட உணவு செரிமானம் ஆகும்போது ஏதேனும் மீத்தேன் போன்ற வாயுக்கள் உருவாகுமானால் அது மட்டுமே மீனின் வயிற்றில் இருக்கும். மீனின் வயிற்றில் சிறிதளவும் காற்று இருப்பதற்கு வாய்ப்பே இல்லை.
முடிவுரை:-
மனித அறிவைக்கொண்டு சிந்திக்கும்போது எந்த மீன் வயிற்றிலும் மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை. அல்லாஹ்வின் தனிப்பெரும் ஆற்றலால் ஒரு மீன் வயிற்றில் யூனுஸ் அவர்களை அவன் உயிருடன் இருக்கசெய்துள்ளான். இது அற்புதம். இதில் அறிவியல் விளக்கம் தேடுவதற்கான தேவை இல்லை. பல்வேறு அற்புதங்களை பல்வேறு நபிமார்கள் மூலம் அல்லாஹ் நிகழ்த்தியுள்ளான். எல்லாவற்றிற்கும் அறிவியல் சாயம் பூசுவது இயலாது. அறிவியல் விளக்கம் கொடுத்து நாத்திகர்களை திருப்திப்படுத்த அல்லாஹ்வின் தூய மார்க்கத்திற்கு எந்த தேவையும் இல்லை. இந்த 1420 வருடங்களில் கடந்த 50 வருடங்களாக நாம் அறிவியல் விளக்கம் கொடுத்து வந்திருப்போமா? எனில் 1370 வருடங்களாக இஸ்லாத்தை ஏற்றுகொண்ட கோடிக்கணக்கான மக்கள் எந்த அறிவியலைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றார்கள்? குர்ஆனை, அல்லாஹ்வின் தூய மார்க்கத்தை உண்மைப்படுத்துவதற்கு எந்த அறிவியலும் தேவையில்லை.