இப்படியும் சில தப்ஸீர்கள்- ஜைனுலாபுதீன் தப்ஸீர்
ஜைனுலாபிதீன் அவர்களின் தப்சீரில் அறிவியலின் பெயரால் சொல்லப்பட்டிருக்கும் பிழையான கருத்துக்களை ஆய்வு செய்வதற்காக 2017ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழு சமர்ப்பித்த ஆய்வறிக்கைகள்
QSF ஆய்வுக்குழு
QSF16. மாதங்கள் பன்னிரண்டாக இருப்பது அறிவியல் அற்புதமா?
நாம் ஆய்வு செய்யும் தஃப்ஸீரில் அறிவியல் சான்றுகள் எனும் தலைப்பில் "மாதங்கள் பன்னிரண்டு தான்" எனும் அறிவியல் உண்மையை முதன் முதாலாக குர்ஆன்தான் சொன்னதாக ஒரு விளக்கம் உள்ளது. தஃப்ஸீரில் இருக்கும் விளக்கத்தை விட கூடுதல் விளக்கங்களுடன் தஃப்ஸீரின் அசிரியர் மேடைகளிலும் பேசியுள்ளார். அதையும் பார்வையிடுவது தப்சீரின் கருத்தையும் நமது விளக்கத்தையும் உள்வாங்குவதற்கு உதவும் https://youtu.be/Jvo2Egv1Occ
தப்ஸீர் குறிப்பு:- 202. மாதங்கள் பன்னிரண்டு தான்
இவ்வசனத்தில் (9:36) வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் பன்னிரண்டு மாதங்கள் எனக் கூறப்படுகின்றது. மக்கள் வருடத்தை பன்னிரு மாதங்களாகக் கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல், பன்னிரு மாதங்கள்தான் இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம் சொல்கிறது.
வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லாக் காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மக்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை. கி.பி. 1582ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற கத்தோலிக்க போப், நாட்காட்டிகளை ஒருங்கிணைக்கும் வரை பல விதமான கணக்குகளில் மக்கள் ஆண்டுகளைக் கணித்து வந்தனர். ஒரு காலகட்டத்தில் 304 நாட்களைக் கொண்ட 10 மாதங்கள் ஒரு வருடமாக இருந்துள்ளது. இன்னொரு காலத்தில் 455 நாட்களைக் கொண்ட 15 மாதங்கள் ஒரு வருடமாகக் கணக்கிடப்பட்டது.
வருடம் என்பதற்கு எதை அளவுகோலாக வைப்பது என்ற தெளிவான அறிவு மனிதனுக்குத் துவக்கத்தில் இல்லாததே இதற்குக் காரணம். மாதம் என்றோ, வருடம் என்றோ தீர்மானிப்பதாக இருந்தால் தெளிவான ஒரு வரையறை அதற்கு வேண்டும். ஒருவர் நினைத்தால் 10 மாதங்களை ஒரு வருடம் என்பதும், மற்றொருவர் நினைத்தால் 15 மாதங்களை ஒரு வருடம் என்பதும், இன்னொருவர் 20 மாதங்களை ஒரு வருடம் என்பதும் எந்த வரையறையின் அடிப்படையிலும் கூறப்படுவதாக இருக்க முடியாது.
நாம் வாழ்கின்ற பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை வருடம் என்று கணக்கிட்டால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாக இருக்கும். மனிதன் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த இந்த வரையறையை ஆறாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் கூறுகின்றது.
வருடம் என்பது, அதாவது சூரியனைப் பூமி சுற்றும் கால அளவு என்பது 12 மாதங்கள் தான். இது சூரியனையும், பூமியையும் படைக்கும் பொழுதே என்னால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்று இறைவன் கூறுவதைத் திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது.
திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது
∙∙∙∙∙·▫▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ end of tafseer ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫ₒₒ▫ᵒᴼᵒ▫▫·∙∙∙∙∙
நமது மறுப்பு:-
மேலுள்ள தஃப்சீரில் பல அடிப்படை தவறுகள் உள்ளன. இவற்றை நம் மூன்று கட்டமாக அணுகுவோம்.
இஸ்லாமிய அடிப்படை.
குல் ஹுவல்லாஹு அஹத் எனும் சூராவை எடுத்துக்காட்டி உலகில் முதன்முதலில் ஏகத்துவத்தை எடுத்து சொன்னது குர்ஆன்தான் என்று ஒருவர் வாதிட்டால் அவருக்கு நாம் என்ன விளக்கம் கொடுப்போம்? “இல்லை" சகோதரா இந்த கொள்கை முதன் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் முதலே இருப்பது என்று சொல்ல மாட்டோமா? அதே போலத்தான் மாதங்கள் 12 என்பது ஆதம் (அலை) முதல் ஈசா (அலை) வரையில் அனைத்து நபிமார்களும் கடைபிடித்த ஒன்று. இதற்கு ஆதாரமாக் வேறெங்கும் செல்லவேண்டியதில்லை. இந்த தப்சீர் எந்த வசனத்திற்கு உரியதோ அதே வசனம் இதை தெள்ளதெளிவாக சொல்கிறது.
“வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்". அல்லாஹ்விடம் இருக்கும் காலக்கணக்கு வேறு, அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்திய காலக்கணக்கு வேறு. அல்லாஹ்வின் காலக்கணக்கு அவன் வானங்களையும், பூமியையும் படைப்பதற்கு முன்பே இருக்கிறது. ஆக மாதங்கள் 12 என்பது மனிதர்களுக்காக அல்லாஹ் உருவாக்கிய காலக்கணக்கே. அந்தக் காலக்கணக்கை தனது பதிவேட்டில் எழுதுவதற்காக மட்டுமே அல்லாஹ் உருவாக்கவில்லை. மனித சமுதாயம் அனைத்துக்குமான கலக்கணக்குதான் அது. அல்லாஹ்வின் பதிவேட்டில் இருக்கும் மாதங்கள்தாம் முன்சென்ற அனைத்து நபிமார்களுக்கும் சமூகத்திற்கும் அல்லாஹ் வழங்கி இருப்பானே தவிர ஒவ்வொரு சமூகத்திற்கும் வெவ்வேறு எண்ணிக்கையில் மாதங்களை வழங்கி இருக்க மாட்டான்.
சூரியனும், சந்திரனும் கணக்கின்படி இயங்குகின்றன. (அல்குர்ஆன் : 55:5)
அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு. (அல்குர்ஆன் : 6:96
முஹம்மத் நபி ﷺ அவர்களை நபியாக்கிய பிறகு சூரியனையும் சந்திரனையும் அல்லாஹ் படைக்கவில்லை. சூரியனையும் சந்திரனையும் அடிப்படையாகக் கொண்டு யாரெல்லாம் காலத்தைக் கணக்கிடுகிறாரோ அவர்கள் அனைவருக்கும் வருடத்திற்கு 12 மாதங்களே வரும்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் : 2:183)
தலைப் பிறைகளைப் பற்றி (நபியே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் : 2:189)
இவ்விரு வசனங்களிலிருந்தும் முந்தய சமுதாயத்தினரும் நோன்பு பிடித்தனர் என்றும் அவர்கள் பிறை பார்த்து நோன்பு பிடித்தனர் என்றும் அறிகிறோம். பிறையை அடிப்படையாகக் கொண்டு மாதங்களைக் கணக்கிட்டால் இயற்கையாகவே ஓராண்டுக்கு 12 மாதங்களே இருக்கும். ஆக! காலம் காலமாக மக்கள் 12 மாதங்களை எண்ணியதற்கு இதுவும் சான்று.
அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (பருவ காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக (சந்திரனுக்கு) மன்ஸில்களை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான். (அல்குர்ஆன் : 10:5)
இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக்கினோம்; பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி(இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம். (அல்குர்ஆன் : 17:12)
இந்த இரண்டு வசனங்களும் முஸ்லிம்கள் எவ்வாறு ஆண்டுகளை கணக்கிடவேண்டும் என்று சொல்லும் வசனங்கள் அல்ல. மாறாக ஒட்டுமொத்த மனித குலமே ஆண்டுகளை கணக்கிடுவதற்காக அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள ஏற்பாட்டை விளக்கும் வசனங்கள் இவை. இந்த இரண்டு வசனங்களும் பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவரும் 365 ¼ நாட்களை பற்றிப் பேசுகின்றன. (இவற்றிற்கான விளக்கங்களை ஏற்கனவே QSF09 ஆய்வில் விவரித்துள்ளதால் இங்கே தவிர்க்கிறோம்). இது புதிதான செய்தி என்றும் இவ்வசனங்கள் சொல்லவில்லை. இஸ்லாம் வருவதற்கு முன்பே மக்கள் பின்பற்றிய ஒன்றைத்தான் இவை சொல்கின்றன.
ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள்தான் என்பது 1582ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நவீன கண்டுபிடிப்பு என்றும் அதை 1400 வருடங்களுக்கு முன்பே குர்ஆன் சொல்லிவிட்டது என்றும் சொல்வது அறியாமையாகும். இடையே சில மக்கள் வெவ்வேறு கணக்கை பயன்படுத்தியால் உலகத்தில் யாருமே 12 மாதங்களை பயன்படுத்தவில்லை என்றாகாது. இதை ஏகத்துவ கொள்கையுடன் ஒப்பிட்டு புரிந்துகொள்ளலாம். உலகில் அதிகமான சமுதாயத்தினர் இணைவைப்பில் ஈடுபட்டனர் என்ற காரணத்தால் முதன் முதலில் தவ்ஹீதை சொன்னவர் முஹம்மத் நபி ﷺ என்று சொல்வோமா? மாட்டோம். அதே போல வருடத்திற்கு 10 மாதம் என்றும் 15 மாதம் என்றும் யாரோ சொல்லிவிட்ட காரணத்தால் முதன் முதலில் குர்ஆன் தான் 12 மாதம் என்று சொன்னதாக ஆகாது. அனைத்து நபிமார்களும் பிறையை அடிப்படையாக கொண்ட மாதங்களையே பின்பற்றினர். அனைத்து நபிமார்களும் 12 மாதங்கள் என்றே போதித்தனர்.
வரலாற்று அடிப்படை.
11000 வருடங்களுக்கு முன்பாகவே equinox எனும் பருவகால துவக்கங்களை அறிந்து கொள்வதன் மூலம் பூமி சூரியனை சுற்றிவரும் ஓராண்டு காலத்தை மனிதன் அறிந்துள்ளதற்கான சான்று https://en.wikipedia.org/wiki/Wurdi_Youang
தலைப்பிறை முதல் அடுத்த தலைப்பிறை வரை ஒரு மாதம் என்பதும் ஒரே பருவ காலம் மீண்டும் அடுத்த முறை வருவது ஒருவருடம் என்பதும் ஆதிகாலம் முதலே மனிதனுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்த ஒன்றாகும். அதில் ஒரு வருடம் 12 மாதங்களை மிகாது.
தஃப்ஸீர் சொல்லி இருப்பதைப் போல 1582ம் ஆண்டு கிரிகோரியன் கண்டுபிடித்ததல்ல இன்றிருக்கும் ஆங்கில காலண்டர் இதனை ஜூலியஸ் சீசர் கிமு 45ல் வெளியிட்டார். [https://en.wikipedia.org/wiki/Julian_calendar] அப்போதே அதில் 12 மாதங்கள் இருந்தன. அந்த காலண்டரில் ஒரு சிறு மாற்றத்தை மட்டுமே கிரிகோரியன் செய்தார். இது போன்ற வரலாறுகளை ஆராயாமல் எழுதப்பட்ட இந்த தஃப்ஸீர் நாத்திகர்களும் மற்ற மதத்தவர்களும் எள்ளி நகையாடும் பொருளாக மாறியுள்ளது. தஃப்ஸீரை விமர்சிப்பதாக அவர்கள் சொன்னால் பரவாயில்லை ஆனால் அவர்கள் இஸ்லாத்தை விமர்சிப்பதாக பெருமிதம் கொள்கிறார்கள்.
வசனம் சொல்வது என்ன?
12 மாதங்கள் என்று எல்லோரும் அறிந்திருந்தால் அதை ஏன் அல்லாஹ் எடுத்து சொல்கிறான்? இந்த கேள்விக்கும் விடை தெரிந்தாகவேண்டும்.
ஒரு சூரிய வருடம் என்பது ஒரு பருவகாலம் மீண்டும் மறுமுறை வரும் காலமாகும். உதாரணமாக, கோடை காலம் துவங்குவது முதல் அடுத்த முறை கோடை காலம் துவங்குவது வரையுள்ள காலம் ஒருவருடம் ஆகும். இதுவே பூமி ஒருமுறை சூரியனை சுற்றும் காலமும் ஆகும். இது 365 ¼ நாட்கள் நீடிக்கும்.
ஒரு மாதம் என்பது தலைப்பிறை முதல் அடுத்த தலைப்பிறை வரையுள்ள காலமாகும். ஒரு சூரிய வருடத்திற்கு நெருக்கமான சந்திர மாதங்களை நாம் எண்ணினால் தோரயமாக 12 மாதங்கள் இருக்கும். அதென்ன தோராயம்? ஒரு சூரிய வருடத்திற்கு 365 ¼ நாட்கள்; 12 சந்திர மாதங்களுக்கு 354 ⅓ நாட்கள். இரண்டிற்கும் தோராயமாக 11 நாட்கள் வித்தியாசம் இருக்கும். இதன் காரணமாக சூரிய நாட்காட்டியின் தேதிகளும் சந்திர நாட்காட்டியின் தேதிகளும் ஒத்துப்போகாது. உதாரணமாக ரமலான் ஒன்று மே 15ம் தேதி வருவதாக வைத்துக்கொள்வோம். அடுத்த வருடம் மே 5லேயே ரமலான் ஒன்று வந்துவிடும். இதனால் சந்திர நாட்காட்டி பருவ காலங்களை பிரதிபலிக்காது. எல்லா வருடமுமே ஏப்ரல் கோடை காலமாக இருக்கும். ஆனால் ரமலான் மாதத்தைப் பாருங்கள் இந்த வருடம் ரமாலன் மாதம் கோடை காலத்தில் வந்தால் அடுத்த 8 வருடங்களுக்குப் பிறகு வசந்த காலத்தில் ரமலான் வந்திருக்கும்.
இந்த இரண்டின் வித்தியாசத்தைப் போக்கி ஒரே நாட்காட்டியில் மாதங்களும் பருவ காலங்களும் இருக்க வேண்டும் என்று மனிதன் ஆசைப்பட்டான். அதற்கான ஆராய்ச்சியில் இறங்கிய மனிதன் ஒவ்வொரு வருடமும் 11 நாட்கள் வித்தியாசம் ஏற்படும் சந்திர வருடத்தில் மூன்று ஆண்டுகள் முடியும்போது ஒரு மாதத்தை அதிகரித்தால் சந்திர காலண்டரில் பருவகாலங்கள் பிரதிபலிக்கப்படுவதை அறிந்தான். அதாவது இவ்வருடம் 12 மாதங்கள் ஆகும்போது 354 நாட்கள் ஆகியிருக்கும். ஆனால் பருவகாலங்களை கணக்கிடும்போது 11 நாட்கள் குறைவாக இருக்கும். அடுத்த வருடம் 12 மாதங்கள் 355 நாட்களாக இருக்கும். அப்போது பருவ காலக்கணக்கில் 21 குறைவு ஏற்பட்டிருக்கும். அதற்கும் அடுத்த வருடம் ஆகும்போது இவ்வித்தியாசம் 31 நாட்கள் ஆகியிருக்கும். இதை சரி கட்ட மூன்றாம் வருடத்தில் 13 வதாக ஒரு மாதத்தை சேர்த்துக்கொள்வார்கள். இது நசிய்யு என்று அழைக்கப்பட்டது. இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவான கணிதக்கலை ஆகும். கிமு 5ம் நூற்றாண்டில் மீடன் எனும் வானியல் கலைஞர் உருவாக்கிய பார்முலாவின் அடிப்படையில் பிற்காலத்தில் யூதர்கள் நசிய்யு செய்யத் துவங்கினர். யூதர்கள் பிறை பார்த்து மாதத்தை துவங்குவார்கள். ஆனால் தங்களது மாதங்கள் எல்லா வருடங்களிலும் ஒரே பருவ காலத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை 13வதாக ஒரு மாதத்தை சேர்ப்பார்கள்.
♠ முஹம்மத் நபி ﷺ அவர்கள் பிறப்பதற்கும் சுமார் 200 வருடங்களுக்கு முன்னதாக யூதர்களிடமிருந்து நசிய்யு கலையை அரபுகள் கற்றனர்(1). குறைஷிகளின் கினானா என்கிற குலத்திலனர் எந்த வருடத்தில் 13ம் மாதம் இடம்பெற வேண்டும் என்பதை அறிவித்தனர். அந்த குடும்பத்தினர் கலம்மாஸ் என்று அறியப்பட்டனர். (2) (3)
♠ அரபுகளின் மாதங்கள் எப்போதும் ஒரே பருவகாலத்தில் சுழன்று வந்ததாலேயே அவர்களின் மாதங்களின் பெயர்கள் பருவகாலங்களை கொண்டு அமையபெற்றிருந்தன. உதா: ரபீஉ - வசந்த காலம், ஜுமாதா - பனிக்காலம், ரமதான்- கோடைக்காலம்.
♠ யூதர்களின் மாதங்களும் அரபுகளின் மாதங்களும் ஒத்துப்போன காரணத்தாலேயே யூதர்கள் நோன்பிருந்த குறிப்பிட்ட அந்த நாள் அரபுகளின் முஹர்ரம் 10 உடன் எல்லா வருடமும் சரியாக பொருந்தியது. யூதர்கள் நசிய்யு செய்தார்கள் என்றால் யூதர்களுடன் ஒத்துப்போன அரபு மாதங்களும் நசிய்யு செய்யப்பட்டதாகவே இருக்கும்.
இவ்வாறு சில வருடங்களில் 13 மாதங்கள் ஆக்குவதுதான் நசிய்யு ஆகும். இவ்வாறு நசிய்யு செய்யப்பட்டதால் மாதங்கள் இயல்பாக அவற்றிற்குரிய இடத்தில் இல்லாமல் வெவ்வேறு இடங்களில் இருந்தன. உதாரணமாக 12 மாதங்கள் எனும் எண்ணிக்கைப்படி சஃபர் வரவேண்டிய இடத்தில் 13 மாதங்கள் எனும் எண்ணிக்கையை எடுத்ததால் சஃபருக்கு பகரம் அதே இடத்தில் முஹர்ரம் வந்துவிடும். எதை அவர்கள் முஹர்ரம் என்கிறார்களோ அது சஃபராக இருக்க வேண்டிய மாதமாகும். இவ்வாறு மாதங்கள் இடம் மாறிப்போயின.ஜ் வணக்கம் கடமையான பிறகும் ஹிஜ்ரி 10 வரை நபி ﷺ அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பாமல் அல்லாஹ் வைத்திருந்தான்.
ஹிஜ்ரி 10ம் ஆண்டு ஹஜ் செய்துவிட்டு நஹ்ருடைய தினத்தில் நபி ﷺ அவர்கள் ஓர் உரையாற்றினார்கள்.
புகாரீ 4662. ஹஜ்ஜத்துல் வதாவில்' உரையாற்றிய போது) நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (போரிடுதல் விலக்கப்பட்ட) புனித மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை ஃதுல்கஅதா, ஃதுல்ஹஜ், முஹர்ரம் மற்றும் ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து 'ரஜப்' மாதம் ஆகும்.
என அபூ பக்ரா(ரலி) அறிவித்தார்.
நசிய்யு செய்ததால் மாதங்கள் அவற்றிற்கான இடங்களில் இருந்து மாறி இருந்தன. அவை மீண்டும் சரியான இடத்திற்கு வந்த ஆண்டு ஹிஜ்ரி 10 ஆகும். அப்போது ஹஜ் செய்த நபி ஸல் அவர்கள் 9:36 & 37ம் வசனங்களை அமுலுக்கு கொண்டு வருகிறார்கள். சந்திர மாதங்கள் பருவ காலங்களை பிரதிபலிக்கவேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட நசிய்யு தடை செய்யப்பட்டது.
إِنَّ عِدَّةَ ٱلشُّهُورِ عِندَ ٱللَّـهِ ٱثْنَا عَشَرَ شَهْرًا فِى كِتَـٰبِ ٱللَّـهِ يَوْمَ خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ مِنْهَآ أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ ٱلدِّينُ ٱلْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا۟ فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَـٰتِلُوا۟ ٱلْمُشْرِكِينَ كَآفَّةً كَمَا يُقَـٰتِلُونَكُمْ كَآفَّةً ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّـهَ مَعَ ٱلْمُتَّقِينَ ﴿٣٦﴾ إِنَّمَا ٱلنَّسِىٓءُ زِيَادَةٌ فِى ٱلْكُفْرِ ۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُحِلُّونَهُۥ عَامًا وَيُحَرِّمُونَهُۥ عَامًا لِّيُوَاطِـُٔوا۟ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّـهُ فَيُحِلُّوا۟ مَا حَرَّمَ ٱللَّـهُ ۚ زُيِّنَ لَهُمْ سُوٓءُ أَعْمَـٰلِهِمْ ۗ وَٱللَّـهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ ﴿٣٧﴾
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!
நிச்சயமாக நசீஉ (இறை)மறுப்பை அதிகப்படுத்துவதாகும். இதன் மூலம் (ஏகஇறைவனை) மறுப்போர் வழிகெடுக்கப்படுகின்றனர். ஒரு வருடம் அதன் புனிதத்தை நீக்கி விடுகின்றனர். மறு வருடம் அதற்குப் புனிதம் வழங்குகின்றனர். அல்லாஹ் புனிதமாக்கிய எண்ணிக்கையைச் சரி செய்வதற்காக அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் புனிதமற்றதாக்கி விடுகின்றனர். அவர்களின் தீய செயல்கள் அவர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளன. (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.
9:36ம் வசனத்தை மட்டுமே தனியே வாசிக்கக் கூடாது. 9:37யும் சேர்த்து வாசித்தால் மாதங்கள் 13 அல்ல மாதங்கள் 12தான் என்று அல்லாஹ் சொல்வதை புரிந்துகொள்ள இயலும். சில அறிஞர்கள் புனிதத்தை மாற்றுவது மட்டுமே நசிய்யு என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.
அரபுகள் வெறும் புனிதத்தை மட்டுமே மாற்றி இருந்தால் அதை சரி செய்வதற்காக "இன்னின்ன மாதங்கள் புனிதமானவை" என்று மட்டுமே சொன்னால் போதுமானது. ஆனால் நபி ﷺ அவர்கள் "அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும்.” என்று கூறினார்கள். அதாவது முஹர்ரமும் சஃபரும் இருக்கவேண்டிய இடத்திலேயே இருந்து அவற்றின் புனிதம் மட்டுமே மாறியிருந்தால் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது என்று சொல்வதற்கான தேவையே வந்திருக்காது. அதில் அர்த்தமும் இருக்காது. மேலும் மாதங்களின் எண்ணிக்கை 12 ஆகவே இருந்திருந்தால் அதை மீண்டும் அல்லாஹ்வும் அவன் தூதரும் சொல்லவேண்டியதில்லை. மாதங்கள் 13 ஆக மாற்றப்பட்ட காரணத்தால் எண்ணிக்கையும் மாறியது, மாதங்கள் இருந்த இடமும் மாறின, அவற்றின் புனிதமும் மாறியிருந்தன.
மாதங்கள் இடம் மாறியிருந்தன என்பதற்கான மற்றொரு ஆதாரம் "முளர் குலத்து 'ரஜப்' மாதம்" என்று நபி ஸல் அவர்கள் சொன்னதே. முளர் குலத்தினர் மட்டுமே ரஜப் மாதத்தை சரியாக ஜுமாதஸ்ஸானீக்கும் ஷஅபானுக்கும் இடையே வைத்திருந்தனர். பிற கோத்திரங்கள் ரஜப் மாதத்தை வெவ்வேறு இடங்களில் வைத்திருந்தனர். உதா. ரபீஆ கோத்திரத்தார் ஷஃபானுக்கும் ஷவ்வாலுக்கும் மத்தியில் ரஜப் மாதத்தை வைத்திருந்தனர். (3)
மேலுள்ள விளக்கங்கள் அனைத்துமே அதிகப்படியானவையே. ஒரு சிறிய விஷயத்தை சிந்தித்தாலேயே இதிலிருக்கும் அடிப்படை தவறை அறிந்துகொள்ள இயலும்.
மாதம் என்றால் என்னவென்று கூகுளிடம் கேட்டாலே பிறையை அடிப்படையாக கொண்டதே ஒரு மாதம் என்று சொல்லிவிடும். எனினும் சூரிய ஆண்டை எடுத்துக்கொண்ட பல்வேறு சமூகத்தினர் சூரிய மாதத்திற்கு வெவ்வேறு இயற்கையான வரையறைகளை வைத்திருந்தனர். குறிப்பாக சூரியன் 12 ராசிகளிலும் நுழைந்து வெளியேறும் காலத்தை மாதம் என்று அழைத்தனர். அத்தகைய நாட்காட்டிகளில் மாதம் என்பதற்கு ஒரு இயற்கை வரையறை இருந்தது. ஆனால் கிரிகோரியன் காலண்டரில் மாதம் என்று அழைக்கப்படும் கால அளவுகளுக்கு எவ்வித இயற்கை வரையறையும் இல்லை. 30, 31 எண்ணிக்கையை மாற்றி மாற்றி வருடத்தை 12 ஆக பகுத்ததை தவிர எவ்வித இயற்கை வரையறையும் இல்லாதது கிரிகோரியன் மாதங்கள். அல்லாஹ் மாதங்கள் பன்னிரண்டு என்று சொல்வது 12 சந்திர மாதங்களையே. மாதங்கள் 12 என்று அல்லாஹ் சொல்வதை 1582ல் கிரிகோரியன் உணர்ந்துகொண்டார் என்று சொல்வது எத்தகைய தவறு! எந்த தொடர்பும் இல்லாதவற்றை தொடர்புபடுத்தி ஒப்பிட்டு விளக்கியதிலையே இந்த தஃப்ஸீர் குறிப்பு அடிபட்டுவிடுகிறது.
முடிவுரை:-
1. மாதங்கள் 12 என்பது வானம் பூமி படைக்கப்பட்டபோதே அல்லாஹ் மனித குலத்திற்கு வழங்கிய ஏற்பாடு. பிறையைப் பார்த்து மாதத்தை துவங்கினால் 12 மாதங்களே இருக்கும். முந்தய நபி மார்களுக்கும் நோன்பு எனும் வணக்கம் இருந்ததை குர்ஆன் சொல்கிறது. அவர்களும் பிறை பார்த்திருப்பார்கள். அவர்களுக்கும் மாதம் 12 ஆகவே இருந்திருக்கும். ஆக! குர்ஆன்தான் முதன் முதலில் இந்த கருத்தை சொல்வதாக நினைப்பது தவறாகும்.
2. முதன் முதலில் குர்ஆன்தான் இதனை சொல்கிறது என்று சொல்லும் தஃப்ஸீர் 16ம் நூற்றாண்டில்தான் இதனை மனிதன் உணர்ந்து கொண்டான் என்று சொல்கிறது. அல்லாஹ் குர்ஆனில் சொல்லும் 12 மாதங்கள் பிறைகளை அடிப்படையாக கொண்ட மாதங்கள். ஆனால் 6ம் நூற்றாண்டில் கண்டுபிடித்ததாக தஃப்ஸீர் சொல்லும் நாட்காட்டியோ எந்த அடிப்படையும் இல்லாத 12 மாதங்கள். ஒப்பீடே தவறானது.
3. ஒரு வாதத்திற்கு ஒப்பீடு சரி என்றே வைத்துக்கொண்டாலும் இன்றிருக்கும் ஆங்கில காலண்டரை 1582ம் ஆண்டில் கிரிகோரியன் என்பவர் உருவாக்கினார் என்பது வரலாறு அறியாமையாகும். இதனை அறிமுகப்படுத்தியவர் ஜூலியஸ் சீசர்; வருடம் கிமு 45. அவர் அறிமுகப்படுத்தியபோதே 12 மாதங்கள் இருந்தன.
4. மாதங்களின் எண்ணிக்கையைப் பற்றி அல்லாஹ் குர்ஆன் 9:36ல் சொல்வதற்கான காரணம் அன்றைய அரபுகளிடம் 12 மாதங்களும் இருந்தன 13 மாதங்களும் இருந்தன. அதனை அல்லாஹ் தடை செய்த வசனமே 9:36 & 9:37.
------------------------------------------------------------------------------------------------------------
(1) الآثار الباقية عن القرون الخالية، البیرونی، صفحة ٦٢
https://archive.org/details/tfa_sahistorian/page/n68
The chronology of Ancient Nations, By Al Biruni, Page 73
https://archive.org/details/chronologyofanci00biru/page/73
(2) جامع البيان عن تأويل آي القرآن لابن جرير الطبري
(3) تفسير القرآن العظيم لابن كثير