16. அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தாரா ஆதம் நபி?

 

இப்படியும் சில தப்ஸீர்கள்           தொடர்: 16

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தாரா ஆதம் நபி?

ஆர். அப்துல் கரீம்எம்.ஐ.எஸ்.சி.

விரிவுரை நூல்களில் இடம் பெற்றுள்ள பல பொய்யான கதைகளையும் கப்ஸாக்களையும் குர்ஆனுக்கு எதிரான கருத்துக்கள் பலவற்றையும் இந்தத் தொடரில் இதற்கு முன்னர் பார்த்துள்ளோம். அதில் மற்றுமொரு அபாண்டமான கருத்தைக் கொண்டுள்ள ஒரு விரிவுரையை இப்போது காண்போம்.

“அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். அவரிலிருந்து அவரது துணைவியை அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான். அவன், அவளுடன் இணைந்த போது அவள் இலேசான சுமையைச் சுமந்தாள். அதனுடன் அவள் நடமாடினாள். அவள் (வயிறு) கனத்த போது (அங்கத்தில்) குறைகளற்றவனை நீ எங்களுக்கு வழங்கினால் நன்றி செலுத்துவோராவோம்” என்று அவ்விருவரும் தமது இறைவனாகிய அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தனர்.

அவ்விருவருக்கும் (அங்கத்தில்) குறைகளற்றவனை அவன் கொடுத்த போது அவர்களுக்கு அவன் கொடுத்தவற்றில் அல்லாஹ்வுக்குப் பங்காளிகளை ஏற்படுத்தி விட்டனர். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அல்லாஹ் தூரமானவன்.

அல்குர்ஆன் 7:189, 190

இவ்விரு வசனங்களும் ஆதம் நபி மற்றும் அவரது மனைவியைப் பற்றி குறிப்பிடுவதாகவும், இறைவன் அவர்களுக்குக் குழந்தையை வழங்கிய போது அவ்விருவரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டனர் என்றும் விரிவுரை நூல்களில் எழுதியிருக்கிறார்கள். அது மட்டுமின்றி ஆதம், ஹவ்வா இருவரும் எவ்வாறு அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தார்கள் என்பதை விளக்கும் வகையில் ஒரு கதையையும் அளந்து விட்டுள்ளனர்.

ஹவ்வா கர்ப்பமுற்றிருந்த போது இப்லீஸ் அவர்களிடத்தில் வந்து, “உங்கள் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவன் நானே. எனக்கு நீ கட்டுப்படவில்லையாயின் உனது பிள்ளைக்கு இரண்டு கொம்புகளை ஏற்படுத்துவேன். அது உனது வயிற்றைக் கிழித்து விடும். அல்லது இறந்த நிலையில் அக்குழந்தையை வெளிப்படுத்துவேன்” என்று கூறினான். அது இறந்த நிலையில் வெளி வர வேண்டும் என இறைவன் விதித்தான். (எனவே அவ்வாறே நடந்தது.) பிறகு இரண்டாவது பிள்ளையை ஹவ்வா சுமந்தார்கள்.  முன்னர் கூறியது போன்றே இம்முறை இப்லீஸ் ஹவ்வாவிடம் கூறினான்.  அதற்கு ஹவ்வா அவர்கள், “நான் உனக்குக் கட்டுப்பட (வேண்டும் என்று) நீ விரும்பும் காரியத்தைச் சொல்” என்று கூற, “அக்குழந்தைக்கு அப்துல் ஹாரிஸ் என்று பெயரிடு” என இப்லீஸ் கூறினான். ஹவ்வா (அலை) அவர்களும் அவ்வாறே செய்தனர். பிறகு அல்லாஹ்வின் அனுமதியுடன் குறைகளின்றி அக்குழந்தை வெளியானது. இது தான் 7:109 வசனத்தின் விளக்கமாகும்.

நூல்: ஸுனன் ஸயீத் பின் மன்சூர்

பாகம் 5 பக்கம் 173

ஹவ்வா கர்ப்பம் அடைந்த நேரத்தில் ஷைத்தான் விஜயம் செய்து பிறக்கும் குழந்தைக்கு அப்துல் ஹாரிஸ் (ஹாரிஸின் அடிமை) என பெயர் வைக்க வேண்டும் என மிரட்டியதாகவும் அம்மிரட்டலுக்கு ஹவ்வா பணிந்து ஹாரிஸின் அடிமை என தன் குழந்தைக்குப் பெயரிட்டதாகவும் இச்சம்பவத்தில் கூறப்படுகிறது. சில விரிவுரைகளில் ஆதம் நபியவர்களும் பெயர் சூட்டும் இந்த விவகாரத்தில் சம்பந்தப்படுவதாக வருகிறது.

எனவே தன் பிள்ளைக்கு அப்துல் ஹாரிஸ் – ஹாரிஸின் அடிமை எனும் பெயரைச் சூட்டி ஆதம் ஹவ்வா இருவரும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டதாக இந்தக் கதை மூலம் 7:109 வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.

இந்த கதையில் உள்ள அபத்தங்களை அறிந்து கொள்வதோடு இவர்கள் விளக்கமளித்த இரு வசனங்களின் உண்மை நிலை என்ன? என்பதையும் அறிந்து கொள்வோம்.

வசனத்தின் பொருள் என்ன?

முதலில் இவர்கள் ஆதம் தம்பதியினரை இணை வைப்பாளர்களாகச் சித்தரிக்கும் வகையில் எந்த வசனங்களுக்கு விளக்கம் அளித்தார்களோ அந்த இரு வசனங்களும் ஆதம் மற்றும் ஹவ்வா அவர்களைப் பற்றிப் பேசவில்லை. பொதுவாக மனிதர்களின் தன்மை, இயல்பு குறித்தே பேசுகின்றன.

மனிதர்கள் தங்களுக்குக் குழந்தை இல்லாத வரையிலும் அல்லாஹ்விடம் குழந்தையைத் தா என்று இறைஞ்சுவதும், மன்றாடி மனமுருகிப் பிரார்த்திப்பதுமாக இருப்பார்கள். அதுவே ஆரோக்கியமான குழந்தையை அவர்களுக்கு இறைவன் வழங்கி விட்டால் அதன் பின் இறைவனை மறந்து இறைவனுக்கு இணை கற்பிக்கும் மாபாதகச் செயலையும் துணிந்து செய்பவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு பொதுவாக மனிதர்களின் நன்றி கெட்டத் தனத்தை, இணை கற்பிக்கும் இழிசெயலைப் பழித்து இறைவன் இவ்வசனத்தில் கூறுகிறான். தவிர இவ்விரு வசனங்களும் ஆதம் நபியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.

இக்கருத்தை அதற்குப் பின்வரும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அல்குர்ஆன் 7:194

“நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடியார்களே” என இவ்வசத்தில் கூறப்படுகிறது. இது நிச்சயம் ஆதம் (அலை) அவர்களைக் குறிக்க முடியாது. ஏனெனில் ஆதம் (அலை) அவர்கள் தான் முதல் மனிதர் என்று நாமனைவரும் நன்கறிவோம். மனித குலத்தின் தந்தையே ஆதம் நபிதான். அவர் மூலம் தான் மனித சமுதாயம் பல்கிப் பெருகியது. அவர்களுக்கு முன் எந்த மனிதனும் வாழ்ந்து மறைந்திருக்கவில்லை. நிலை இவ்வாறிருக்க, ஆதம் நபி யாரை, தன்னைப் போன்ற எந்த அடியாரை அழைத்துப் பிரார்த்திருக்க முடியும்?

எனவே எந்த அடியாரையும் அவர்கள் அல்லாஹ்வுக்கு இணையாளராக ஆக்கவில்லை. மேற்கண்ட இரு வசனங்களும் பொதுவாக மனிதனின் போக்கு பற்றிக் குறிப்பிடுகிறது என்பதே உண்மை.

கப்ஸா கதையின் அபத்தம்

ஆதம், ஹவ்வா இருவரும் முஷ்ரிக்குகளாகிப் போனார்கள் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட கதையை தஃப்ஸீர் நூல்களில் இடம் பெறச் செய்திருக்கிறார்கள். இது கட்டுக்கதை தானே ஒழிய இதற்கு ஹதீஸ் நூல்களில் தகுந்த ஆதாரம் எதுவுமில்லை.

அதுமட்டுமின்றி  ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து செய்தியை நேரடியாகப் பெற்றவர்கள். முதல் மனிதராக மட்டுமின்றி முதல் தூதராக இருந்தவர்கள். இறைவனின் தூதர்கள் மனிதன் என்ற அடிப்படையில் சிற்சில தவறுகளை வேண்டுமானால் செய்திருப்பார்கள். ஆனால் அவர்கள் ஒருக்காலும் அல்லாஹ்வுக்கு இணை வைத்திருக்க மாட்டார்கள்.

மேலும் அந்த கதையில் அப்துல் ஹாரிஸ் என்று பெயரிடுமாறு ஷைத்தான் சொல்லி அவ்வாறு பெயர் வைத்த காரணத்தினால் தான் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்களாக ஆனார்கள் என்று வருகிறது.

ஆதம் நபி தான் முதல் மனிதர் என்று இருக்கும் போது யாரப்பா அந்த ஹாரிஸ்? ஹாரிஸ் என்ற  ஒருவர் எப்படி இருக்க முடியும்? இவைகளைச் சிந்தித்தாலே இந்தக் கதை முற்றிலும் தவறானது, குர்ஆனுக்கு எதிரானது என்பதை அறியலாம்.